Friday, March 24, 2017

கன்மதம்
ஜெ

கன்மதம் என்றால் ஒரு மருந்துச்சரக்கு என்றிருக்கிறது அகராதியில்.

நீங்கள் குறிப்பிடுவது எதை
 
 
சீனிவாசன்


கன்மதம் என்பது கல்லின் மதம். அது லாவாவேதான்
லோகி ஒரு சினிமாகூட எடுத்திருக்கிறார்  ‘கன்மதம்’


கன்மதம் என்னும் மருந்து கந்தகம்கலந்தது


ஜெ

பால்

அன்புநிறை ஜெ,

நண்பர் ஒருவர் இந்தக் காணொளிகளைப் பகிர்ந்திருந்தார்.

https://youtu.be/Lippc7Rn9g0

காண்பதெல்லாம் நமக்கு வெண்முரசுதான். 
அன்னைப்புலி குழவிக்குப் பால்சுரந்த இன்றைய மாமலர் மனநிலையில் இது மிகவும் மனதைத் தொட்டது.

இந்தக் காணொளியிலிருப்பது அன்னையல்ல தந்தையென யாரோ பதிவிட்டிருந்தார். பார்த்ததும் மாமலரில் வரும் தந்தையர் நிரை கண்முன் மின்னி மறைந்தது. பெண் - சிறு குழந்தையென பாவைகளோடு விளையாடும் நாள் முதலே அன்னையர்தான். எனில் தந்தையர் தம் மகவோடு தானும் பிறக்கிறார்கள்.  பெருமரம் பூத்த சிறுமலர் என பெருவலிமை கொண்ட தோளில் மகவேந்தும் தந்தையர். மாமலர் நெடுக அன்னையர் மாமலர்களென விரிந்து அணிகோர்த்தாலும் தந்தையரே அதன் மணம் என நிறைந்து உறைகிறார்கள். 


புரூரவஸின் மறுஉயிர்ப்பில் தந்தையென தானும் மீள்பிறப்பெடுத்து அவனை சிறுமகவென ரசித்து மகிழும் ஹிரண்யபாகுவும்,  என்பிலதனை
வெயில்போலக்காயும் 
பிள்ளைத்துயர் நிழலெனத் தொடரும் ஆயுஸ், காட்டில் வன்விலங்குகளுக்கு இடையே விடப்பட்ட யாரோ ஒரு குழந்தைக்காக இறுதி மூச்சை இறுகப் பற்றிய ஒற்றனுள் வாழும் தந்தை, அமைச்சன் என்பவன் அறத்திற்காக தலைகொடுப்பதும் கடனே எனத் தன் மகனை அனுப்பி வைக்கும் தந்தை, சந்திரனை உவந்து தன்னை விலக்கியவள் எனினும் ஊராரின் உள்நகைப்பை உணர்ந்தும் மகவின் வரவிற்காக மகிழ்ந்து மருகும் பிரகஸ்பதி,
தன் மகள் சச்சியை இந்திராணியென அமர்த்தும்பொருட்டு விண்ணரசனை அறைகூவும் புலோமன், அசுரர் குடியை காலடியில் வைத்து தேவகுருவை விஞ்சும் வஞ்சத்தை மனதில் வைத்து, எரியென வந்தவளை மனதினில் கொண்டு, ஆனால் பெண்மகவைக் கையேந்தும் தருணம் பனித்துளியை சிதறாது ஒற்றியெடுக்கும் விரலென உடலேந்தும் சுக்ரர் என எத்தனை எத்தனை தந்தையர். இது தந்தையரின் மணம் பரப்பும் மாமலர்.
சௌகந்திக மாமலர் குறித்த முதல் உரையாடலைத் திரௌபதி தொடங்குவதே தனது தந்தை துருபதனின் நினைவுகளுடன்தானே.

இது மாமலர் தேடியலைந்த மாமல்லர் கதை. 

மணம் சொல்வதே மலர் என்றுணர்ந்து  ஒன்றே போல் தெரியும் ஒவ்வொரு மாமலராய் அணுகி மணம் உணர்ந்து விலக்கி கடக்கிறான் பீமன். பெண்ணுள் நிறைந்த மணம் உணரத் தன்னை உணரும் பெரும்பயணம். அன்னையர் மலர்ந்த வனத்தில் தந்தையர் மணம் கமழ்கிறது.

மிக்க அன்புடன்,
சுபா

Thursday, March 23, 2017

கன்னியில் எழுவது


கன்னியில் எழுவது
கடந்துசெல்லவேண்டும் என்னும் விழைவு.
பஞ்சில் தொற்றியும்
காற்றில் ஏறியும்
பறவைக்குள் புகுந்துகொண்டும்
எல்லைகடக்கவேண்டுமென
கனவுகாண்கின்றன விதைகள்

ஜெ முன்னரே இந்த கருத்து வந்துள்ளது. அர்ஜுனன் பயணத்தின்போது அவன் ஒரு தொல்குடிப்பெண்ணை மணக்கும்தருணத்தில். ஆனால் இந்த வரியின் அழகான கவித்துவம் மேலும் கூர்மையாக அதை வெளிப்பட வைத்துள்ளது

சிவா

மானுட உறவுகளின் கதை


ஜெ,

வெண்முரசின் மாமலரை இதுவரை வந்த நாவல்களிலேயே செறிவானது என்று சொல்லலாம். இப்படி எல்லா நாவல்களுக்கும் சொல்வார்க்ள்தான். முன்னர் வந்தநாவல்களில் தத்துவச்செறிவு இருந்தது. தத்துவமே செறிவானதுதான். ஆகவே அந்த இறுக்கமும் தீவிரமும் ஆச்சரியப்படுத்தவில்லை.

 ஆனால் இது முழுக்கமுழுக்க மானுட உறவுகளின் கதை. ஆகவே இதன் செறுவு ஆச்சரியப்படுத்துகிறது. ஒரே அத்தியாயத்தில் எத்தனை விஷயங்கள் வந்துசெல்கின்றன. பலவர்றை நினைவிலேயே வைத்துக்கொள்ள முடியவில்லை. நாவலாக வந்தபின்னர்தான் நினைவில் நிறுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

உதாரணமாக, இந்திரன் சச்சியை எந்தெந்த வடிவில் எல்லாம் வந்து சந்திக்கிறான் என்னும் பகுதி. அதேபோல அவன் வளையல்போடவரும் அந்த இடமே ஒரு நல்ல சிறுகதை. வளையலுக்குள் கை நுழைவதை யானை கோட்டைக்குள் நுழைவதுபோல என்றும் கைமுண்டுகளை மத்தங்கள் என்றும், சொல்லியிருக்கும் இடமெல்லாம் கிளாஸிக்

ஜெயச்சந்திரன்

Wednesday, March 22, 2017

மலராடிச் செல்லும் வண்டு


இன்றைய மாமலரில் மீண்டும் பிரஹஸ்பதி சந்திரன் தாரை ஆகியவர்களின் கதை ஆனால் வேறு வடிவில்..

விழைவை அகற்ற முயல்வதைப்போல  அதை வளர்க்கும் வழி பிறிதொன்றில்லை.

இது மிக அழகான வாக்கியம். ஜெ சார் இப்படி அடிக்கடி ஆங்காங்கே சொல்வதையெல்லாம் தனியே தொகுத்து வைத்திருக்கிறேன்.


மலராடிச் செல்லும் வண்டு மகரந்தங்களை கொண்டு செல்கிறது. முந்தையமலரால் அடுத்த மலரை கருவுறச்செய்கிறது


தாவரவியலின் அயல்மகரந்த சேர்க்கையை இப்படி அழகாக சொல்லிச்செல்கிறார் . அதுவும் மலராடிச்செல்லும்  வண்டு! ஆடிச்செல்லும் எனும் வார்த்தையில் எத்தனை அழகு ஒட்டியிருக்கிறது, பூவில் மகரந்தம் போல?

லோகமாதேவி