Tuesday, July 8, 2014

வெண்முரசு - நிறம்

ஜெயமோகன்,
அப்போ இது எப்படி? யாருடைய கற்பிதம்?
kamdhenu21
இது வரை வந்த சித்தரிப்புகளில் காந்தாரர்களை தவிர பெரும்பாலானவர்களை, கிட்டதட்ட அனைவரையுமே, கரிய நிறத்தவராய் மட்டுமே காட்டியிருக்கிறீர்கள். வரலாற்று உண்மையா, வேறேதும் மேலதிக பொருள் உள்ளதா?
தொடர்புடைய இன்னொரு கேள்வி – கூர் நாசி, பெரிய கண்கள் இன்ன பிற அழகென்று இவ்வளவு அழுத்தமாக மனதில் பதிந்தது எப்படி?
அன்புள்ள
மங்கை
லமாஸ்ஸு
லமாஸ்ஸு
அன்புள்ள மங்கை,
நீங்கள் கேட்டிருப்பவை எல்லாம் ஒரு படைப்பை முன்வைத்து நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய வினாக்கள். அதற்கான விடைகள் அதற்குள்ளேயே உள்ளன. இந்தியப்பெருநிலத்தில் கருப்பு-வெண்மை என்னும் நிறங்களின் அரசியல் என்றுமுள்ளது.
ஆனால் அவ்வரசியல் வியாசமகாபாரதத்தில் நேர்த்தலைகீழாக உள்ளது. அதை நாவலுக்கு வெளியே விவாதிக்க விரும்பவில்லை.
தகவல்களை மட்டும் சொல்கிறேன்.
1. நம் இறைவடிவங்களின் சொற்சித்திரங்களே நமக்கு பழையநூல்களில் இருந்து கிடைப்பவை. விரிவான தோற்ற விவரணைகள் மகாபாரதம், ராமாயணம், புராணங்கள் போன்ற நூல்களில் இல்லை.
பின்னாட்களைச்சேர்ந்த, அதாவது கிமு மூன்றாம்நூற்றாண்டுவாக்கைச் சேர்ந்த, சிற்பங்களில் அவ்வுருவங்கள் சிலவற்றின் தோற்றத்தை நாம் காண்கிறோம். அவற்றுக்கான இலக்கணங்கள் எல்லாம் சிற்பநூல்களில் உள்ளவையே.
நமது சிற்பநூல்கள் அனைத்தும் சுமேரிய, எகிப்திய, காந்தாரச் சிற்பக்கலை நம்முடன் உரையாடத் தொடங்கிய பின்னர் உருவானவை. அவற்றின் ஊற்றுமூலங்கள் மூன்று. ஒன்று தொன்மையான நம் பழங்குடி மரபு, இரண்டு நம் புராணச்சொற்சித்திர மரபு, மூன்று சுமேரிய, எகிப்திய, காந்தாரச் சிற்ப மரபுகளின் பாதிப்பு.
மனிதத்தலையும் மிருக உடலும் கொண்ட பல்வேறு சிற்பங்கள் உலகச் சிற்ப மரபில் உள்ளன. அவற்றிலிருந்து காமதேனுவின் உருவம் கண்டடையப்பட்டிருக்கலாம். சுமேரியச் சிற்பமான லமாஸ்ஸு காமதேனுவைப்போலவே தோற்றமளிப்பது.
கிபி ஐந்தாம்நூற்றாண்டுக்குப்பின்னர்தான் சுவரோவியங்களில் தெய்வங்களை காணத் தொடங்குகிறோம். காமதேனு போன்ற சிறிய தேவதை உருவங்கள் ஏழாம் நூற்றாண்டுக்குப்பின்னர்தான் சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் உருவம்கொள்ளத் தொடங்கின.
நீங்கள் காட்டும் இவ்வுருவம் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப்பிந்தையது. பதினாறாம் நூற்றாண்டைச்சேர்ந்த சமணச் சுவரோவியங்களில்தான் இதன் முதல் வடிவம் காணக்கிடைக்கிறது என்று ஆய்வாளநண்பர் ஒருவர் சொன்னார்.
நாம் இன்றுகாணும் பெரும்பாலான தெய்வ உருவங்கள் இரு தேவைகளுக்காக வரையப்பட்டவை. ஒன்று நாடகங்களுக்காக. இந்தியா முழுக்க பரவிய பார்ஸி நாடகக்குழுக்கள் படுதாக்களில் பலவகையான தெய்வ உருவங்களை வரைந்து பிரபலப்படுத்தின. அதற்காக ஓவியர்களை அமர்த்தின. அவர்கள் ஆலயங்களின் சுவரோவியங்களின் உருவங்களையும் ஐரோப்பிய ஓவியக்கலையின் காட்சிமுறைகளையும் கலந்து இந்த தெய்வஉருவங்களை அளித்தனர்.
அச்சுக்கலை வந்தபின்னர் காலண்டர்களுக்காக தெய்வங்களை வரைவது பிரபலமாகியது. அவர்கள் பெரும்பாலும் பார்சி நாடகத்திரைச்சீலைகளையே முன்னுதாரணமாகக் கொண்டனர். ராஜா ரவிவர்மா அதன் முன்னோடி. தமிழகத்தில் நாம் இன்று வழிபடும் தெய்வ முகங்கள் சி.கொண்டையராஜு, சுப்பையா போன்ற சிவகாசி காலண்டர் ஓவியர்களால் வரையப்பட்டவை. சிவகாசி ஓவியர்கள் பலமரபுகளைக் கலந்தனர். நாயக்கர்காலச் சுவரோவியங்கள் அவற்றின் முதல் அடிப்படை. பார்சிநாடகப்படுதாக்கள் இன்னொரு பாதிப்பு. ராஜாரவிவர்மா காலண்டர்கள் மூன்றாவது பாதிப்பு. தஞ்சை ஓவியமரபு இன்னொரு மரபு. இந்த ஓவியமும் சிவகாசி உற்பத்தியே.
TSS
சி கொண்டைய ராஜு
சி கொண்டைய ராஜு
2. மகாபாரதத்தில் கரியநிறம் உடையவர்களே எப்போதும் அழகர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்களுக்கே வர்ணனைகள் அளிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணன், கர்ணன், அர்ஜுனன் [அர்ஜுனனுக்கே கிருஷ்ணன் என்ற பெயருண்டு], நகுலன், பாஞ்சாலி என அனைவருமே கருமையானவர்கள். பேரழகன் என்று சொல்லப்படும் நகுலன் கரியவனே. ஆசாரியர்களில் வியாசனும் துரோணரும் கரியவர்கள். நான் எவருடைய நிறத்தையும் மாற்றவில்லை. மூலத்தில் உள்ள விவரணைகளையே பின்பற்றுகிறேன். ஏனென்றால் அது ஒரு சமூக-அரசியல் தகவல்.
3. மகாபாரத காலத்துக்குப்பின்னர்தான் நம் அழகியலில் மாற்றம் வந்திருக்கவேண்டும். பிற்கால நாயகிகள் எவருமே கரியவர்கள் அல்ல. கிருஷ்ணை [கறுப்பி] என அழைக்கபப்ட்ட பாஞ்சாலிதான் கடைசி கரிய அழகி. சங்கப் பாடல்களில் அழகிய பெண்கள் மாநிறம் கொண்டவர்களே. இளம் எருமைபோல கரியவர்களும் உண்டு. ஆனால் கண்ணகியும் மாதவியும் மணிமேகலையும் எல்லாம் செந்நிறம் கொண்டவர்கள். அதன்பின் கரிய அழகிகள் இல்லை. இந்த மாற்றம் எப்போது ஏன் நடந்தது என்பது ஒரு பெரிய வரலாற்றுத்தரிசனம்.
ஜெ