Monday, July 7, 2014

காதலும் காமமும் ராமராஜன் மாணிக்கவேல்

ஓம் ஸ்ரீமுருகன் துணை

அன்புள்ள திரு.ஜெயமோகன் வணக்கம்,   ‘முதற்கனல்’ – 7. மதுரை அன்னை ஸ்ரீமீனாட்சியின் பாதங்களை  நினைவு நதியின் அலைகள் நினைத்து சுருண்டு நெஞ்சுக்குள் நுழைந்து நர்த்தனமாடி நிறைந்தது “அவளுடைய கண்கள் மட்டும்மீன்விழிகள் போல இமையாதிருந்தன.”  

காதலும் காமமும், நாகம்போல் நெளிந்து நகர்ந்து எழுந்து சீறி படம்கொண்டு ஆடி, முறுக்கி பிணைந்து சோர்ந்து விழும் படைப்பு இன்று.   

சத்தியவான் காதலும், சந்தனுவின் காமமும், எழுதிய காகித்தின் எழுத்து நிறைந்த இடமும், எழுத்து இல்லா வெற்றிடமும் போல, ஒரு பார்வைக்கு ஒருமைபோல, மறுபார்வைக்கு இருமைபோல புரளும் எழுத்துக் காகிதமாய் மனம் மழுவதும் படந்து பரவி வனமாகிறது இந்த பதிவு இது.

காலம் காலமாய் ஆச்சரியத்தில், ஆவலில், மீளமுடியா மோகத்தில் உதித்து விதையாய் விழுந்து உதிரம் கலந்து சித்தம் தடுமாற வைக்கும் காதலின் மூலவித்து ஆலவிதையின் ஆயிரம் மடங்கு சிறியதுதான். அதன் தழைப்பும் வளர்ச்சியும்   வானை சிறிதாக செய்துவிட்டுபோகும் மேன்மை உடையது.
தன்னை எந்த கல்கோட்டைமீதும் அறைந்து உடைக்கவும், தன்னை எந்த  நெருப்பு நதியிலும் ஊற்றி அணைக்கவும், தன்னை எந்த குளிர்குழம்பிலும் கலந்து ஊறையவைக்கவும் அவன காதல் செய்வது அதிசயம்  ”அவனை அவர்கள்அறைகளில் மூடிவைத்தார்கள்தளையிட்டு பிணைத்தார்கள்அவன் கதவுகளையும் தளைகளையும் உடைத்துக்கொண்டுயமுனைக்குச் சென்றுகொண்டிருந்தான்.”

காதல் கொள்ளும் மகனையோ, மகளையோ காணும் பெற்றவர்கள் உள்ளதில் உறையும் அந்த பயம், எது நடந்து விடக்கூடாது என்பதற்காக அந்த பயம் அவர்களுக்கு ஏற்படுகிறதோ அது ஏற்படும் தருணத்தை காதல் கொண்டவன் அறியும் முன்னமே அடைந்து அவனை ஆட்கொண்டு மூழ்கடித்து விடுகிறது. பின் தன்னை அறியாமலே போய்விடுகிறான்.
“அவன் தன்னிலை அழிந்து சடைமுடியும் கந்தலுமாக நதிக்கரையிலேயே வாழ்ந்தான்அவனுடைய குலம் அவனைகைவிட்டதுகலங்கிக் கலங்கி வழியும் கண்களும் நடுங்கிக்கொண்டிருக்கும் தலையும் குளிர்ந்து விரைத்த கைகளுமாகதடுமாறும் கால்களை எடுத்துவைத்து யமுனைநோக்கி பேசிக்கொண்டிருந்தான்.”

 இந்த தீராத பேச்சு யமுனை இடம்தானா? யமுனை அவன் மனம் அன்றி வேறு என்ன? ஓயாத வெள்ளளோட்டமும், சுழியும், நுரைப்பும். திருப்பமும், இழுப்பும் கொண்ட அவன் மனம் அல்லவா அவனுக்குள் யமுனைாயாக ஒடுகிறது. யமுனையின் கரையில் கிடக்கும் கல்போல் அவனல்லவா கிடக்கிறான். இரவெல்லாம்  மனதில் எழும் எண்ணங்களையே துடுப்பாக்கி தன்னையே படகாக்கி காதல் அல்லவா தேட வைக்கிறது. “இரவெல்லாம் யமுனையின் மீது துடுப்பிட்டபடிபடகில் அலைந்தான்நினைவுக்கு மீளாத எதையோ தேடுபவன் போலிருந்தான்.“

முகர்ந்து உறவறியும் குணம் விலங்கிடமிருந்து மனிதனுக்குள் நுழைந்து. மனிதனை அது மனிதனாக்கிச் முன் நகர்த்தி உச்சத்திற்கு உயரச் செய்கிறது.  காதலியை முகர்ந்து தாயை கண்டு அடைகிறான். மனைவியை முகர்ந்து ஆதி  முதல்தாயைக் கண்டு அடைகிறான். மகளை முகர்ந்து இறைத்தாய்மையை கண்டு அடைகிறான். அந்த முகர்ச்சி முழுவதுமாக கிடைத்தவனுக்கு புரிந்தவனுக்கு பேரின்பத்தின் துளி அவன் நாவில் தட்டுப்பட்டு விடுகின்றது. அவன் உடல் சட்டைக்கழண்டு, உள்ளம் உருவடைந்துவிடுகிறது. அதன்பின் அவனுக்கு பெண் பெண்ணாகத் தெரியவில்லை. ஆகா..எத்தனை ஒளிகொண்ட சித்திர வரிகள் இவை “அவளை மார்போடணைத்து அவள் சிறுமேனியின் நறுமணத்தைமுகர்வதையே தன் வாழ்வின் பேரின்பமாகக் கொண்டிருந்தான்அதன்பின் அவன் மணம் புரிந்துகொள்ளவில்லைவேறெந்தப்பெண்ணும் அவனுக்கு பெண்ணாகத் தெரியவில்லை.

பெண் குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் பெண் பித்தர்காள். பெண் குழந்ததைகள் இல்லை என்றால் உலகம் முழுவதடைவதில்லை என்பது இருக்கட்டும், பெற்றவன் முழுமை அடைவதில்லை.

” நீருக்குள் மூழ்கி தன் தலைக்குமேல் நிலவொளி நீரிலாடும் நடனத்தைப்பார்த்தபடி கீழே சென்றுகொண்டே இருந்தபோது அவர்தன்னை நோக்கி அவள் நீந்தி வருவதைக் கண்டார்அவளுடைய கண்கள் மீன்விழிகள் போல இமையாது திறந்திருந்தன.” அந்த இமையா விழியாளின் விழியில் விழுந்து இரவுகளை இழந்து இனி மீண்டு வரவே முடியாத ஆழத்தில் அவன் மூழ்கபோகிறான் என்பதை இப்படி சொல்கின்றீரா?

அவன் மூழ்கும் அந்த யமுனை நதிதான் அவனின் காமமா? அந்த காமத்தில் பட்டு பிறதிபளிக்கும் ஆசைநிலவின் மோக நடனம்தான் அவன்கண்டதா?  அந்த காமத்தில் இருந்து அவனைக் கரைசேர்க்க வந்த சந்தியவதி இனி தூங்க போவதே இல்லை என்பதால்தான் இமைக்கவில்லையோ? மீன்கள் தண்ணீரிலும், பெண்கள் காமத்திலும் நீந்தி நீந்தி தன்னைப்பெருக்கி நிறைவுகாண்கின்றார்களோ?  

”பதினெட்டு ஆண்டுகாலம் சத்யவதியின் மேனியின் வாசனையன்றி வேறெதையும் அறியாதவராக அரண்மனைக்குள்வாழ்ந்தார் சந்தனுஒவ்வொருநாளும் புதியநீர் ஊறும் சுனைஒவ்வொரு காலையிலும் புதுமலர் எழும் மரம்.ஒவ்வொருகணமும் புதுவடிவு எடுக்கும் மேகம்யமுனையின் அடித்தளத்திலிருந்து சத்யவதி கொண்டுவந்த முத்துக்களின்கதைகளைப்பற்றி சூதர்கள் சொன்னார்கள்ஒன்றைப்போல் இன்னொன்றில்லாதவை அம்முத்துக்கள்நீரின் அடித்தளத்தில்மட்டுமே எழும் ரகசியமான வாசம் கொண்டவைஅவைதான் சந்தனுவை அவளுடைய அடிமையாக காலடியில்விழச்செய்திருந்தன

” இங்கு முத்து என்பது சத்தியவதியின் பொன்சிப்பியாகிய உடலுக்கும் சூள்கொண்டு திரளும் பெண்மை அன்றி வேறு இல்லை.- ஒவ்வொருநாளும் புதியநீர் ஊறும் சுனைஒவ்வொரு காலையிலும் புதுமலர் எழும் மரம்ஒவ்வொருகணமும்புதுவடிவு எடுக்கும் மேகம்.” அந்த  பொன்சிற்பி முத்துதான் சந்தனுவை அவளுடைய அடிமையாக காலடியில் விழச்செய்தது. பதினெட்டு ஆண்டுகளில் அவன் திறந்து ரசித்த இருநூற்று இருபது  முத்துகளும் அவனுக்கு புதிதாகவே இருக்கும்படி பார்த்துக்கொண்ட சத்தியவதியின்  மேல்பரப்பிலேயே  சந்தனு நீச்சல் பழகிக்கொண்டு இருந்து விட்டு புலன் ஓய்ந்தபின்பு சொல்வதுதான்  ”ஆழம்” என்று கடைசி வார்த்தை. ஆழம் காணமுடியாத காமநதிதானே  வனங்களை வளர்த்தும், கரைகளை உடைத்தும் பாயும் பெண் என்னும் பெரும்நாதி. அதனால்தானே மதம் கொண்ட யானையை அடிக்கி மண்டியிடும் மகத்துவம் அவள் கண்களுக்குள் படையாக வந்து தங்கிவிடுகிறது. ஆயிரம்  கண்ணிருந்தும், ஆயிரம் கையிருந்தும் பெண் பெண்ணாகவே இருக்கும் வித்தை  அறிகிறாள் அவளுக்கு தாய்வீடுபோன்ற புவிபோதும்,

ஆணுக்குத்தான் வானம் தேவைப்படுகிறது பிறந்த இடம்விட்டு நகர்ந்து நகர்ந்து தேடி அலைகிறான்.

நன்றி
வாழ்க வளமுடன்

அன்புள்ள
ஆர்.மாணிக்கவேல்