Thursday, August 14, 2014

கண்ணனைக் காத்து...

அன்புள்ள ஜெயமோகன்

    என் கண்கள் நீர் நிறைந்திருக்க இக்கடிதத்தை எழுதுகிறேன்.  கண்ணனை நினக்கும் தோறும் கண்களில் நீர் கசியத்தொரடங்குகிறது. அவன் மீது எனக்கு பக்தியெல்லாம் கிடையாது. அவனை எந்தக்கோயிலுக்கும் தேடிச்சென்று வழிபடுவதில்லை. எங்கள் வீட்டில் இருக்கும் அழகிய கண்ணன் சிலை கூட பூஜையறையில் இல்லாமல் வரவேற்புக்கூடத்தில் தான் இருக்கிறது.  ஒரு குழந்தையாக, நண்பனாக, காதலனாக, ஆசிரியனாக மட்டுமே எனக்கும் அவனுக்குமான உறவு. அதனால்  தான் என்னவோ அவன் மனதிற்கு மிக நெருங்கியவனாய் உள்ளான். 

   அவனை தற்சமயம் நீங்கள் சூல் கொண்டு உள்ளீர்கள். தேவகியாய் அவனை சுமந்து வருகிறீர்கள்.  நாங்கள் எல்லாம் யாதவ பெண்களாக அவனை ஒக்கலில் அமர்த்தி சீராட்டி கொஞ்சி  உணவூட்டவும்,  சிறுவர் சிறுமிகளாக அவனுடன் ஓடிபிடித்து விளையாடவும்,  குமரிகளாக அவனை தொட்டு ஊடி  கூடி விளையாடி மகிழவும்,  தோழர்களாக அவனுடன்  சமூகத்தில் வலம் வரவும்.  சீடர்களாக அவன் கீதையை கேட்டு ஞானம் பெறவும் காத்து இருக்கிறோம். 

  சூல் கொண்ட பெண்களுக்கு சில விபரீத ஆசைகள் வரும் என சொல்வார்கள்,  உங்களுக்கு அப்படி வந்த ஒரு ஆசைதான் இமயமலை பயணம் போலும். நாங்கெளெல்லாம் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு பதைபதைப்போடு காத்திருந்தோம். 

 பச்சை மாமலை போன்ற மேனியும், பவள வாயும், கமலச் செங்கண் கொண்ட அச்சுதனை, அமரர் தலைவனை, ஆயர்குல கொழுந்தாக நாங்கள் கொஞ்சி விளையாடி அடையும் சுவையை எம் புகழ், செல்வம், கல்வி,அடைய வேண்டிய ஞானம் என எதற்கும் ஈடாக  நாங்கள் பெறக் காத்திருக்கிறோம். 

என்றென்றைக்குமான நன்றியுடனும் அன்புடனும்
த. துரைவேல்