Thursday, August 21, 2014

வெண்முரசு வழிகள்




அன்புள்ள ஜெயமோகன்,

தங்களுக்கு இரண்டாவது கடிதம்.

வெண்முரசு  எங்கெங்கோ கொண்டு செல்கிறது. ஏகப்பட்ட தருணங்கள். எதை சொல்ல, எதை விட?

பாண்டுவுக்காக குந்தியை பெண் பார்க்க மார்த்திகாவதி செல்லும் விதுரன். சென்ற இடத்தில் சோலை நடுவே ஒரு சிறிய ஆலயத்தில் குந்தியை காணும் தருணம். அந்த மலர் பதிந்து மலர் பதிந்து மீளும் கால்கள், மலரிதழ்கள், மேகலை மணிகள், செம்மணி வளையல்கள். அங்கே காண்பவனுக்காகவே படைக்கப்பட்டிருந்த குந்தி. அந்த இடத்தில எங்களையும் ஒரு ஓரமாக நிறுத்தி காண வைத்து விட்டீர்கள்.

தங்களுக்குள் போட்டியும் பூசலும் கொண்டிருந்த சகோதரிகள் அம்பிகை மற்றும் அம்பாலிகை. பாண்டு இறப்பு செய்தி அறிந்த அந்த தருணம். சட்டென எல்லாவற்றையும் விட்டு காசியில் வாழ்ந்த நாட்களை மீண்டும் வாழ வனம் புகும் முடிவு. அம்பிகை அன்னையாகவும் அம்பாலிகை மகளாகவும் மாறும் இடத்தை என்னவென்று சொல்வது.

களம் சிறுகதையில் ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் அதிக விவரங்களுடன் கர்ணன் களம் புகும் காட்சி மற்றும் அங்கே நிகழ்பவை, அதிரதனை ஒருபோதும் நிராகரிக்காமலிருப்பது - அங்கிருந்த பலரையும் போல எங்களையும் கண் கலங்க செய்து விட்டீர்கள்.

இன்னும் எத்தனையோ தருணங்கள். தொடரட்டும் உங்கள் இலக்கிய பணி.


அன்புடன்,

கணேஷ்
பஹ்ரைன்.
 
 
அன்புள்ள கணேஷ்,
 
நன்றி
 
வெண்முரசு நானும் வழிதேடிச்செல்லும் ஒரு புதிய நிலமாகவே இப்போதும் உள்ளது. தத்தளிப்பும் திணறலும் பரவசமுமாக
 
ஜெ