Saturday, August 23, 2014

நீலம் மொழி

அன்புள்ள ஜெயமோகன் சார்

"நீலம்" ஆரம்பத்தைப் படித்த அதே மிதப்பில் உங்களுக்குக் கடிதம் எழுதியே ஆக வேண்டுமென்ற உந்துதல் வந்துவிட்டது.  நான் "வண்ணக் கடலில்" கொஞ்சம் பின் தங்கி வருவதால் இந்த முதல் அத்தியாயத்தை எட்டிப் பார்க்க மட்டுமே திறந்தேன். ஆனால் படித்து முடித்தவுடன் உங்கள் மொழி தந்துள்ள மன நிறைவு இந்த நாளையே சிறப்பாக்கி விட்டது. தமிழின் அழகும், செறிவும் உங்கள் கற்பனையில் அடையும் முழுமை, நான் ஏன் தமிழில் வரும் பெரும்பாலான எழுத்துக்களில் அதிருப்தி அடைந்து படிக்கும் வழக்கத்தையே மெதுவாக இழந்து வருகிறேன் என்று எனக்குப் புரிய வைக்கிறது. இத்தனை நளினமும், ஆழமும் இருந்தால்தான் இலக்கியம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் வருகிறது. எத்தனை அழகாக இருந்தாலும்  வார்த்தைகளில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் உடனடியாகப் புரிவது மேலும் சிறப்பு. தொலைக்காட்சித் தமிழில் சொன்னால் "இந்த ஸ்டைல் சும்மா நச்சுன்னு இருக்கு". ரொம்ப நன்றி சார்!

அன்புடன்,
சிவா


அன்புள்ள சிவா,

எழுத்தில் பலவகை உண்டு. இந்த வகையை ஒரு டிரான்ஸ் நிலை கைகூடும்போது மட்டும் எழுதுகிறேன். முற்றிலும் அறிவழிந்த நிலையில். அங்கே கொண்டு செல்வது மொழியின் தாளம்தான். தமிழின் தாளம் ஆழ்வார்-நாயன்மார்களால் கட்டமைக்கப்பட்டது. ஆனால் அந்நிலை கைகூடுவதற்கான தவிப்புதான் கொடுமை

ஜெ