Sunday, October 12, 2014

அக்ரூரர்


[அக்ரூரர் கண்ணனை மதுராவுக்குக் கூட்டிச்செல்கிறார்]


மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். சில விஷயங்கள்

1) தொலைகாட்சியில் பார்த்தது - அக்ரூரர் கிருஷ்ணன் வெல்வானா என்று நினைப்பார். அவருக்கு பெருமாள் உருவமாக காட்சி கொடுப்பார்இங்கு "நீலத்தில்" அக்ரூரர் சந்தேகிக்கிறார். கிருஷ்ணன் தன் இசை மூலம் அவர் ஆதிசேஷ நாகத்தின் ஒரு தலையாக மாறி பார்ப்பது போல நான் புரிந்து கொண்டேன்.

2) தங்களுடைய கட்டுரைகளும் புத்தகங்களும் தங்கள் இணையதளத்திலேயே வெளியிடுகிறீர்கள். இதனால் புத்தக விற்பனை குறையாதா ?

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.


அன்புள்ள ராஜாராம்,

அக்ரூரர் முதலில் கிருஷ்ணனைப்பார்க்கப் போக்லும்போதே விஸ்வரூப தரிசனம் அவருக்குக் கிடைத்துவிட்டதாகத்தான் பாகவதம் சொல்லும். அவர் யமுனையில் நீராடும்போதே நீருக்குள் பரந்தாமனின் கோலத்தை பார்த்துவிட்டிருப்பார்.

அதை விதவிதமாக விரிவுபடுத்துவார்கள். நான் அதை இன்னும் குறியீட்டுரீதியாக, கீதாதரிசனத்துடன் இணைத்து, காட்டியிருக்கிறேன்

புத்தக விற்பனையை ஓரளவுக்கு இணையதளம் பாதிக்கும். மறுபக்கம் அது புத்தகத்தை வாங்கவும் வைக்கும். கொஞ்சம் வாசித்தபின் நன்றாக இருக்கிறதே என நூல்களை வாங்குபவர்களே அதிகம்

வெண்முரசு விலை சற்று அதிகம். அதிக பக்கங்கள் இருப்பதனால். ஆகவே  வாங்குபவர்கள் சற்று தயங்குகிறார்கள். ஆனால் இது நூல்வடிவில் கையில் இல்லாதவர்களால் முழுமையாக வாசிக்கமுடியாது என்பதே உண்மை

அத்துடன் நூல்வடிவில் இது வெளிவருவது நம் பண்பாட்டின் தேவையும்கூட

ஜெ


அன்புள்ள ஜெ

அக்ரூகர் கம்சனின் அமைச்சர் என்றுதானே பாகவதத்தில் உள்ளது? நீங்கள் அதை மாற்றியிருக்கிறீர்களா?

சண்முகம்

அன்புள்ள சண்முகம்,

அக்ரூரரின் வம்ச வரிசை நான் பாகவதத்தில் இருந்துதான் எடுத்திருக்கிறேன். அவர் குலத்தலைவர். அமைசர் அல்ல. அக்காலத்தில் அரசனுக்கும் ஆலோசனைசொல்பவர்களாக குலத்தலைவர் இருந்தனர். அந்த முறை தெரியாமல் அரசனின் ஊழியர் என்று சிலர் புரிந்துகொண்டிருக்கலாம்

ஜெ