Saturday, October 11, 2014

வாசிப்பின் முகங்கள்




அன்புள்ள ஜெயமோகன் 

நீலம் எழுதி நிறைந்திருக்கிறீகள். நான் எவ்வளவோ எழுத நினைத்து எதையும் எழுத இயலா நிலைக்கு சென்றுவிட்டேன்.  உங்கள் எழுத்தைப் பார்த்து சொல்லிழந்து நிற்பதே என்னால்  அளிக்கக்கூடிய  சிறந்த பாராட்டு.  எல்லா பாராட்டுதலுக்கும் அப்பாற்பட்ட எழுத்தாளராய் எப்போதோ ஆகிவிட்டீர்கள்.

நீலத்தை பற்றி நான் எழுதியதையெல்லாம் திருப்தியில்லாமல் அழித்துவிடேன். தங்க விக்கிரகத்திற்கு அலுமினிய நகையிட்டதைப்போல் பொருந்திவரவேயில்லை. உங்களுக்கு வரும் வாசகர் கடிதங்களெல்லாம் நான் எத்தகைய ஒரு எளிய வாசகன் என்பதை எனக்கு உணர்த்திவருகிறது. இருப்பினும் நானும் உங்கள் வாசகர்களில் ஒருவன் என்பது நான் என்  வாழ்வில் பெருமை கொள்ளும் விஷயமாய் என்றென்றைக்கும் இருக்கும்.

அன்புடன்
த.துரைவேல்



அன்புள்ள துரைவேல்

உங்கள் கடிதங்களை அனுப்பியிருக்கலாம். ஆரம்பத்தில் நான் கடிதங்களை பிரசுரிக்கவில்லை. முக்கியமான காரணம் அவை என் தளத்தை நிறைத்துவிடும் என்பதுதான். [இந்தத்தளத்தில் நாள் ஒன்றுக்கு ஐந்து பதிவுகள்!] ஆனால் கடிதங்கள் பலவகையிலும் உதவியானவை என்று பிறகு கண்டுகொண்டேன். அவை வாசகர்களுக்கு அவர்களின் வாசிப்பை ஒப்பிட்டுக்கொள்ள உதவுகின்றன. பொதுவாக வாசிப்பை விரிவாக்கி நுட்பமாக்கிக்கொள்ளச் செய்கின்றன.

கவனத்துடனும் நல்ல நோக்குடனும் செய்யும் எந்த வாசிப்பும் நல்ல வாசிப்பேயாகும்

ஜெ




அன்புள்ள ஜெ

நலமாக இருக்கிறீர்களல்லவா?

நீலத்தை நானும் இரண்ட்முறை வாசித்தேன். எனக்கு அதில் பெரிய மயக்கம் இருந்ததே ஒழிய அதன் நுட்பங்களை நான் கூர்ந்து வாசித்தேன் என்று சொல்லமுடியாது. சுவாமி அவர்களின் கடிதமும் வேறுநண்பர்களின் கடிதங்களும்தான் எனக்கு கூர்மையான வாசிப்பை அளித்தன. இப்படியெல்லாம் வாசிக்கலாமென்று அவை சொல்லித்தந்தன. எப்படி அந்த வாசிப்பை அடைய என்று புரியவில்லை

நீலம் நாவலில் இரண்டு கதைச்சரடு உண்டு என்று புரிந்திருந்தது. ஆனால் ராதைக்கும் கண்ணனுக்குமான உறவில் இப்படிப்பட்ட நுட்பங்களெல்லாம் கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை

அரவிந்தன்



அன்புள்ள அரவிந்தன்,

சரி, நாளை இன்னொரு கிருஷ்ணன் பற்றிய நாவலை வாசிக்கையில் அதில் உள்ள நுட்பங்களை சடியாளம் காண்பீர்கள் அல்லவா? அதேதான். வாசிப்புதான் நுட்பங்கள் நோக்கிய பார்வையை அளிக்கிறது

நீலத்தைக் கூர்ந்து வாசித்து கருத்து சொன்ன பலரும் வைணவமரபைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பல விஷயங்கள் முன்னரே தெரிந்திருக்கின்றன

ஜெ


மழைப்பாடல் பற்றி கேசவமணி- மழையின் இசையும் மழையின் ஓவியமும் 

வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின்மைந்தன்