Monday, November 24, 2014

அரசுகளின் அடியில்

இனிய ஜெயம் ,

எனது 'புறப்பாடு' தினம் ஒன்றினில் ஒரு முறை 'ஒன்றரை' நாள்  எழும்பூர் ரயில் நிலையத்தில்  தங்கி இருந்தேன்.

வீடற்ற கூலித் தொழிலார்களின் ஒரு இருபது குடும்பமாவது அந்த ரயில் நிலையத்தின் கூரை நிழலை அண்டி வாழ்ந்து வந்தனர். 

அதிகாலை நடமாட்டம் துவங்குமுன்  ரயில் பாதையில் நடந்து இருள் குறைவான குறைவான இடத்தில் காலைக் கடன்கள். 

பிறகு அன்றைய குடிநீருக்கு எங்கெங்கோ நடை. அன்று காலை வரும் கட்டிட தொழில் ப்ரோக்கருடன் மல்லாடி அன்றைய உழைப்புக்கும் கூலிக்கும் உத்திரவாதம் பெறுதல்.

ஒரே ஒரு வேளை உணவு. கூட்டாஞ்சோறு.  பெரிய மார்க்கெட்டுகளில் சரக்கு ஏற்றுகையில் உதிர்ந்துவிழும் காய் கறியும், அந்த மார்க்கேஇட்  சிறு வணிக கடைகளில் அழுகிய பின் தூக்கி எறியப்படும் காய்களும் இவர்களுக்கு உணவு. குடும்ப பாலகர்களின் தினசரி பணி குடும்பத்துக்கு இத் தகு காய் கறிகளை பொறுக்குவதுதான்.

மழையில் எங்கும் ஒதுங்க முடியாது. குழந்தைகள் உட்பட நனைந்து நனைந்து காய்ந்து வாழ வேண்டியதுதான். இவர்கள் யாரும் திருடர்களோ விபச்சாரிகளோ அல்ல.

ஆனால் அந்த ரயில்வே பிளாட்பாரத்தில் தங்கவேண்டும் எனில் சோரம் போக வேண்டும். வயதுக்கு வந்த மகள்  'வருபவர்' கண்ணில் படாமல் எங்கோ ஓடி ஒளிந்துகொள்ள  அவள் அம்மா  சோரம் போவாள்.
அவர்கள் எப்போதும் உரக்க மட்டுமே பேசுவார்கள். அவர்களுக்குள் கூட.  காரணம் அவர்கள் குரலைக் கேட்கும் செவிகள் [இன்றளவும்] ஏதுமில்லை.

அவர்கள் மத்தியில் எனக்கும் ஒரு வேளை சோறு கிடைத்தது. நள்ளிரவு அவ்விடம் விட்டு விலகுகையில் ஒன்று கண்டேன். ஒரு அம்மா  அவளது ஒரு வயது மகளை அனைத்து உறங்கத் தயார் ஆனாள். தனது முந்தானையை அந்த மகளின் அறைஞான்  கோடியில் அவிழ்க்கவே இயலா வண்ணம் இறுக முடித்து தன்னுடன் சேர்த்து சுருண்டு படுத்துக் கொண்டாள்.

இனிய ஜெயம், வெண் முரசு விழா அன்று வருகையில்  அந்தப் பக்கம் சற்று நடந்தேன். அவர்கள் அங்கே அப்படியே தான் இருக்கிறார்கள். ஏன் இன்னமும் அழுந்தப்பட்டு கிடக்கிறார்கள்.  இப்போது அவர்களின் 'பிழைப்பை' வடக்கத்தி பிகாரிகள் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் புதைந்து சாகும் 'அதிகாரம்' அவர்கள் வசம் சென்று விட்டது.

இந்தக் குடும்பங்களுக்கு  வீடு இல்லை. ஆகவே ரேஷன் கார்டு இல்லை. இவர்கள் யார் என இவர்களுக்கே தெரியாது ஆகவே சாதி சான்றிதல் இல்லை. 

ஆனால் இது ஜனநாயக நாடு. கடைகோடி மனிதனுக்கும் சொந்தமானது அரசியல் உரிமை. ஆம் இவர்களுக்கு  'வாக்கு உரிமை' உண்டு. பாண்டியன் சாலை எக்மோர் எண்டு அனைவரும் ஓட்டர் ஐடி  வைத்திர்க்கின்றனர்.

எனது துரியத்தில் எங்கோ மறைந்து கிடந்த இந்த தினங்கள்  இன்று பீமனின் வாயிலாக என்னுள் எழுந்தது.

இந்தக் குடும்பங்களின் குரல்கள் எப்போதுமே ஓங்கி ஒலிப்பவை. ஆனால் எக்காலத்திலும் யாராலும் கேட்கப்படாதவை.

அன்றாவது பீமன் இருந்தான். அவர்கள் மத்தியில் நடந்து ..உண்டு... ஆனால் இன்று?

நாளை அர்ஜனுணனும் கிருஷ்ணனும் சந்திக்கப்போகும் நிகழ்வுக்காக இன்றே காத்திருக்கிறேன். 

கடலூர் சீனு