Saturday, November 15, 2014

பிதாமகர்



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்கள் படைப்பாற்றலின் உச்சத்திலிருக்கிறீர்கள்.  

கேள்வி ஒன்று எனக்கு தொக்கி நிற்கிறது. முதல் நூல் துவக்கத்திலிருந்தே பீஷ்மர் பிதாமகர் என்றே குறிக்கப்படுகிறார். ஆனால், பிதாமகர் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கான அர்த்தம் தந்தையின் தகப்பன் என்பதே அல்லவா ? அக்காரணத்தாலேயே, பாண்டவர்களும் கௌரவர்களும் பீஷ்மரை பிதாமகரென்றழைக்க முடியும் அல்லவா ?

ஆனால் மழைப்பாடலின் ஆரம்பத்திலும் பீஷ்மரை பிதாமகன் ஸ்தானத்திலிருப்பதாக சத்யவதி சொல்வதாக அமைத்திருக்கிறீர்கள். மேலும் ஹஸ்தினபுரத்தில் இருக்கும் பலரும் கௌரவர்களும் பாண்டவர்களும் தோன்றும் முன்பே பீஷ்மரை பிதாமகர் என்று அழைப்பதாகவே அமைத்திருக்கிறீர்கள். என் சிற்றறிவுக்கெட்டிய வரை பிதாமகனென்பது ஒரு தனிப்பட்ட அரசியல் ஸ்தானமில்லை, குடும்ப உறவுமுறையிலான பதவி என்ற புரிதலில் இருக்கிறேன்.

பிதாகமன் என்பது எதைக் குறிக்கிறது ? தந்தையின் தந்தை என்ற பொருளில் அல்லாமல், பிதாமகன் என்னும் வார்த்தை ஒரு ஸ்தானமாக அரசாட்சியில் கொள்ளப்பட்டதா ?
நன்றியுடன் 
சந்திரசேகரன் கிருஷ்ணன்



அன்புள்ள சந்திரசேகரன்

சொல்லளவில் தாத்தா என்ற பொருள்தான் பிதாமகர் என்பதற்கு. தாத்தா என்றால் தந்தையின் தந்தை ஆனால் நாம் அச்சொல்லை மிக விரிந்த பொருளில் கையாள்கிறோம் அல்லவா?

ஆனால் குலமூதாதை, மூத்தவர் என்ற பொருளில் அது புழங்கியிருக்கிறது. பழங்கால உறவுமுறைகள் இன்றைய உறவுமுறைகளைப்போன்றவை அல்ல. நேரடியான குருதித் தொடர்பு மட்டுமே உறவுகளுக்கு ஆதாரமாக ஆவதில்லை. குலத்தின் அனைவருமே உறவினர்களே. உறவுகளை உருவகித்துக்கொள்ளலாம் ஏற்றுக்கொள்ளலாம். கிராமங்களில் இன்றுகூட மூத்த எவரையும் சித்தப்பா என்று அழைக்கலாம். மாமா என்று அழைக்கலாம். என் நெல்ல நண்பர் ஒருவர் அவரது தந்தையின் இஸ்லாமிய நண்பர்கள் சிலரைக்கூ,ட மாமா, சித்தப்பா என்றெல்லாம் அழைப்பதைக் கண்டிருக்கிறேன்

பிதாமகர் என்பது இங்கு எங்கல் குலத்துக்கு மூத்தவரே, அனைவருக்கும் தந்தையின் இடத்தில் இருப்பவரே என்று பொருள் அளிக்கிறது,அந்த இடத்தை அவர் இளமையிலேயே அடைந்துவிட்டார்.

ஜெ