Thursday, November 6, 2014

ராணுவத்தின் அளவு




அய்யா :

வணக்கம்.

நாம் எந்த ஊரில் வசித்து வருபவர்களானாலும் , ஜனத்தொகை அதிகரிப்பு என்பது சமீபமாய் ஒரு முப்பது நாற்பது வருடங்களுள் நடந்த ஒன்று.

எந்த சமீபத்திய பெரு நகரமாயினும் அதன் ஜனத்தொகை நூறு வருடங்கள், இருநூறு வருடங்களுக்கு முன் மிகக் குறைவாகவே இருந்திருக்கும்.

அப்படி இருக்கையில் ஐநூறு, ஆயிரம் வருடங்களுக்கு முன் ஒரு ஊரில் மிக சொற்பமானவர்களே இருந்திருக்கக் கூடும் அல்லவா?

அப்படி ஆயின், நமது புராணங்கள் சொல்லும் மூர்க்கமான போர்கள் என்பதே ஒரு பத்து பதினைந்து பேருக்குள்ளாகத்  தான் நடைபெற்று இருக்குமா?

பழம் பாடல்களில் காணப்படும் ஆயிரம் யானைகள், பல்லாயிரம் குதிரைகள், கோடி வீரர்கள் கொண்ட படை என்பதெல்லாமே கற்பனை தானா ?

ஐநூறு ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய போர்கள் நிஜமாகவே எப்படி இருந்திருக்கக் கூடும்.

தெளிவுற  வேண்டி.

பாலா.


அன்புள்ள பாலா

நீங்கள் சொல்வது உண்மை.

அன்றைய இந்தியாவின் மக்கள்தொகை மிகமிகக் குறைவாகவே இருந்திருக்கும். வேளாண்மை வளர்ச்சி, வணிக வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக உணவு அனைத்து இடங்களுக்கும் சீராகக் கிடைக்கத் தொடங்கியபின்னரே மக்கள்தொகை வளர்ச்சி ஏற்பட்டது. இன்றைய மக்கள்தொகை என்பது நூறாண்டுக்காலத்தில் உருவானது

இது ஒருபக்கம். இன்னொரு பக்கம் உண்டு. இன்றைய சூழலில் மக்கள்தொகையில் ஆயிரத்தில் ஒருவர்கூட போர்வீரர் அல்ல. அன்று அப்படி அல்ல. அன்றைய மக்களில் பெரும்பாலானவர்கள் போருக்குச் செல்லக்கூடியவர்கள்

ஏனென்றால் இன்றையபோர் பெரும்பாலும் ஆயுதங்களால் நிகழ்த்தப்படுவது. அன்றைய போர் முதன்மையாக எண்ணிக்கைபலத்தாலேயே தீர்மானிக்கப்பட்டது

நமக்குக் கிடைக்கும் நேரடியான ராணுவம் குறித்த பதிவுகள் முகலாயர் காலத்தையவை. முகலாயர் வரலாற்றை தகவல்களாக குறித்துவைப்பதில் நம்பிக்கைக் கொண்டிருந்தனர். அவை புராணங்கள் அல்ல, ஆவணங்கள்.

அவை முகலாயர் படைகள் லட்சக்கணக்கானவர்கள் இருந்ததைக் காட்டுகின்றன. ஒரு பெருநகரம் நகர்ந்துசெல்வதுபோலத்தான் முகலாயப்படைகளும் சென்றிருக்கின்றன. அவை முகாமிட்ட இடங்களில் உண்மையிலேயே நகரங்கள் அமைந்திருக்கின்றன, அவை இன்றுகூட நீடிக்கின்றன.

தைமூர்,செங்கிஸ்கான் படைகளிலும் லட்சக்கணக்கானவர்கள் இருந்திருக்கிறார்கள்.  எண்ணிக்கைபலத்தால் அவர்கள் புதிய நிலங்களை வென்றனர். பிற்கால படைகளைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. குறிப்பாக நாயக்கர் படைகள். அவையும் லட்சத்துக்குமேல் மக்கள் பங்கு கொண்டவை

ஆகவே, மகாபாரதகாலத்தில் பெரிய மக்கள்தொகை இருந்திருக்காதென்றாலும் போர்களில் லட்சம்பேர்  பங்கெடுத்திருக்கச் சாத்தியம் உள்ளது  புராணங்களுக்கே உரிய மிகைப்படுத்தல் கொஞ்சம் இருக்கலாம்

ஜெ