Wednesday, November 19, 2014

வாசகர்களும் விமர்சகர்களும்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

"வெண்முரசு" பற்றிய விமர்சனங்கள்,  நீங்கள் அதை எழுத ஆரம்பித்ததிலிருந்தே, அதை படித்த வாசகர்களால் வந்துகொண்டுதான் இருக்கிறது. அதை பொருட்படுத்தி அதற்கு நீங்கள் சொன்ன பதில்கள் உங்கள் இணையதளத்தில்/துணைத் தளத்தில் இருக்கிறது. அவை போதும். இப்போது விமர்சன போர்வை கொண்டு எழும் "விமர்சனங்கள்" எதுவும் வெண்முரசுக்கானது அல்ல. இது இவர்கள் கண்முன்னே விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் நடத்தி காட்டிய பெரும் விழாவுக்கானது. இந்த விழா இவர்களை ஏதோ விதத்தில் தொந்தரவுபடுத்தி இருக்கிறது. நண்பர்களால் ஆன விழா இல்லையா இது. "பொறாமை" என்ற சொல்லை பயன்படுத்த தவிர்கிறேன். Insecurity  என்று சொல்லலாமா? ஆனால் இவை எதுவும் வெண்முரசு பற்றிய விமர்சனங்கள் அல்ல என்றபோது, இவர்களை,  இவற்றை அவர் எந்தவிதத்திலும் பொருட்படுத்த தேவை இல்லை. இந்த விழா இல்லையெனில் இப்போது எழுந்த இந்த நாய்க்குடை விமர்சனங்களும் இல்லை. இந்த விழா எதற்கு? என்று தார்மீகமாக ஒரு பதிவு போட்டிர்கள் இல்லையா, அது மட்டுமே போதும், விமர்சனத்திற்கு பதில் சொல்ல அந்த விமர்சனம் குறைந்தபட்ச நேர்மையையாவது கொண்டிருக்க வேண்டும். இவர்களை முற்றிலும் புறக்கணியுங்கள். இவர்களது நோக்கம் இலக்கியம் அல்ல, இதை அரசியல் முன்னேடுப்புகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாமா என்பது மட்டுமே இவர்களது அபிலாசை. இப்போது   நீங்கள் பதில் சொல்வது அவர்களது நோக்கங்களுக்கே வலுசேர்க்கும். இவர்கள் அரசியல் செய்யவா நாம் இங்கு இலக்கியம் படைப்பது.
   

ஒரு கட்டுரையில் இருந்து ஒற்றை வார்த்தையை எடுத்து, திரித்து பதில் சொல்வதன் மூலமும், ராமராஜ்ஜியத்தை வெண்முரசோடு தொடர்புபடுத்தி எழுதியிருக்கும் ஒரு அபத்த கதையை சிரத்தையாக பகிர்ந்திருப்பதன் மூலமும், தார்மீக பலமில்லாதவராகவும், முழுமையான அரசியல்வாதியாகவும் பரிமளித்திருக்கிறார் மனுஷ்யபுத்திரன். அதேமாதிரியான ஒரு குழுவை உருவாக்குவதிலும் முனைப்பாக இருக்கிறார் என்பதும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அரசியல் பதவி என்பது மட்டும்தான் இன்னும் இல்லை, அதுவும் கிடைத்து, இவர் தமிழ் இலக்கிய தொண்டு ஆற்றவேண்டும் என்று வாழ்த்துகின்றேன். 

முருகதாஸ்