Tuesday, November 11, 2014

மேனி

Turn off for: Tamil
அன்புள்ள திரு.ஜெ வணக்கம். 

நீறும் விளக்கத்திற்கு நன்றி.


//அது கொன்றவனுக்கும் புகழும் புண்ணியமும் சேர்ப்பதே. இதைப்போல 'நீறும்' நரகுக்கு ஒருவரை அனுப்புவதென்றால்…//

“இதைபோல நீறும் (நீரும்)” -என்று சேர்த்துப்படித்து-நரகுக்கு என்பதை தனியாக்கி அல்லல் பட்டுவிட்டேன். “நீறும் நரகுக்கு“ என்று சேர்த்துப்படிக்கும் போதுதான் அந்த வாக்கியத்தின் பெரும்வெளி தரிசனம் கிடைக்கிறது. உண்மை உரைக்கிறது நன்றி. 

//“கண்ணீர் மிகமிக வீரியம் மிக்க விதை பத்ரரே. அது ஒன்றுக்கு நூறுமேனி விளையக்கூடியது//-இதில் வரும் நூறுமேனி வார்த்தை நாவில் இனிக்கிறது ஜெ. இந்த வார்த்தை வயலை உயிராய் நினைக்கும் விவசாயின் நினைவில் பொக்கிஷமாய், நாவில் தேனாய் இருக்கும் சொல். அந்த விவசாயியின் வாழ்க்கை அந்த சொல். அந்த சொல் இங்கு கொடுக்கும் அழுத்தம் அறிந்து நெஞ்சம் விம்முகின்றது. இது  ஒரு சொல் என்று மட்டும் நினைத்துவிடும வாசகன் எத்தனை பெரிய வாழ்க்கையை இழந்துவிட நேரிடும் என்று நினைத்து கண்நனைந்தேன். இதை மொழிபெயர்க்கும்போது எத்தனை பெரிய சவால்களை சந்திக்கவேண்டி வரும்?. நீங்கள் அறியாததா? 

நூறுமேனி என்ற சொல்லுக்காக ஒரு மெயில் செய்ய இருந்தேன். அதற்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்தற்கு நன்றி. 

ராமராஜன் மாணிக்கவேல்