Monday, February 9, 2015

பேரறம் ஆனவன்



அன்புள்ள ஜெ,

பிரயாகையின் அன்னை விழி பகுதியில் திரௌபதியின் தோழி மாயை சொல்வாள், தர்மனின் விழி அன்னையின் விழி என்று. திரௌபதியைப் பார்த்த அதே பரிவுடன் அவன் மாயையும் பார்த்ததாக அவள் சொல்வாள். இன்றைய தருமனின் அணி புனையும் அத்தியாயத்தில் அந்த விழியை நானும் கண்டுகொண்டேன்.

புற அறிவுக்கு புரிந்திருந்தாலும், பிரக்ஞைபூர்வமாக அவர்களையும் சக மனிதர்களாகப் பார்க்க முடிந்தாலும், இரு பாலினரை பார்த்தவுடன் என்னையறியாமல் என் உடல் விரைப்பாவதை உணர்ந்து பல முறை திகைத்திருக்கிறேன். அது என் சிறுமையை எனக்கே அடையாளம் காட்டுமிடம். ஒரு கணம் தான் என்றாலும் அது நிகழாமல் போவதில்லை. இன்று மிருஷை தருமனுக்கு அணி செய்து கொண்டிருக்கும் போது அவன் மார்பின் மீது அவளின் நெற்றியின் இரு முடியிழைகள் படும். அதை மிக இயல்பாக அவன் எடுத்து அவளின் காதுகளில் சொருகுகிறான். கண்களில் நீர் நிறைய ஓர் பெரும் அக எழுச்சியை அடைந்தேன். அடுத்த வரிகளை இன்று காலையில் தான் படித்தேன். இரவெல்லாம் மனதில் அந்தக் காட்சி மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. ஒரு மானுடன்.... யாரையுமே விலக்காதவன். அனைவரையுமே நேசிப்பவன். அனைவரையுமே சமமென பாவிப்பவன்.... தருமன்... என்ன பெயர் பொருத்தம்!!!!!

நீங்கள் தருமனை எழுதும் பொழுது மட்டும் ஏன் இத்தனை நெகிழ்வை உணர்கிறேன் என்றே தெரியவில்லை, வேறு எந்த கதாபாத்திரத்தை விடவும் தருமனை நகமும் சதையுமாக மிக அருகில், மிக மிக அருகில் காட்டுகிறீர்கள். இந்த உணர்வு எனக்கு மட்டும் தானா இல்லை மற்ற வாசகர்களுக்கும் இருக்கிறதா என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். எழுதும் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? தருமனை தினமும் உங்களின் அருகில் இருத்தி வைத்திருக்கிரீர்களா என்ன?

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்