Friday, February 13, 2015

முளைக்கும் புதுத்தீயில் கிளைக்கும் புதியவன்


[பெரிதாக்க படம் மீது சுட்டவும்]

அன்பு ஜெயமோகன்,
       
  விதுரருக்கும், தருமனுக்கும் இடையேயான உரையாடலில் அளவுக்கதிமான சூட்டை உணர்ந்தேன். அச்சூட்டின் வெம்மையின் முன்  மானுடவெளியின் போலி வெளிச்சம் பொலிவிழந்து தவித்த அவலத்தையும் கண்ணுற்றேன். நீதி/அநீதி எனப்பேசும் நாம் அதன் சார்பை ஒருபோதும் கவனிப்பதில்லை. ‘எனக்கான நீதி’, ‘உனக்கான நீதி’, ‘நமக்கான நீதி’ என நீதிகளைத் தருக்கங்களாக்கி அதன்படியே வாழ்ந்தும் வருகிறோம். நீதியின் பொருள் அவரவரக்குத் தகுந்ததாக முன்வைக்கப்படுகிறது. விதுரர் குறிப்பிட்ட அன்னையின் அகத்துக்கான நீதியும், அன்னை முன்மொழிந்த விழியற்ற மனிதரின் நீதியும் அவரவர் தளத்தில் அவரவருக்கு நியாயமானவையே.

”மானுடரைப்பற்றி எதையும் முழுமையாக நம்பிவிடலாகாது என்று என் கல்வி என்னிடம் சொன்னது” எனும் தருமனின் நேரடிக் கூற்றிலிருந்து விரியும் சொற்களின் கனம் மிக அதிகம். “எப்போதும் அநீதிக்கெதிராகவே பெரும்போர்கள் தொடங்குகின்றன. அவை நீதியைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால், நீதியால் அல்ல, வெறுப்பின் ஆற்றலால்தான் களத்தில் போர்கள் நிகழ்த்தப்படுகின்றன. எதிர்த்தரப்பு முற்றிலும் அநீதியானது என்று நம்பாமல் போர்வெறி கொள்ள முடிவதில்லை” எனும் தருமனின் அடர்த்தியான சொற்களில் விதுரருடன் சேர்த்து நானும் நெஞ்சடைத்துப் போனேன். “வெறுப்பின் ஆற்றலால்தான் களத்தில் போர்கள் நிகழ்த்தப்படுகின்றன” எனும் வரியின் உச்சகட்ட வெம்மைக்கு முன் யார்தான் நெஞ்சுயர்த்த முடியும்?

போர்களைக் குறித்த தருமனின் தொடர்ச்சியான வார்த்தைகளில் அவன் கற்றிருந்த நூல்கள் வெளிப்பட்டிருக்கவில்லை. நூல்களின் ஊடாக அவன் பெற்றிருந்த கனிதலே பூத்திருந்தது. ”போர்களெல்லாம் எதிர்த்தரப்பின் மாபெரும் நீதியாளனை முற்பலியாகக் கொண்ட பின்னரே தொடங்குகின்றன. தன் தரத்தில் நின்று ஐயப்படும் நீதியாளனை முதல் களப்பலியாக அளித்துத்தான் வெற்றி நோக்கிச் செல்கின்றன” எனும் தருமனின் சொற்கனலில் போர்களங்களில் பலியாகும் எளிய மனிதர்களின் குருதிச்சூட்டையே நான் உணர்ந்தேன்.

”நீதி என்பது மானுட இயல்பல்ல. அது மானுடர் கற்றுக்கொண்டு ஒழுகுவது. பெருங்கற்பு என்று அதையே நூல்கள் சொல்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் மானுடர் தங்கள் கீழ்மையால் மோதிய பின்னரும் நீதியென் இங்கு ஒன்று எஞ்சி இருப்பது வியப்புக்குரியது” எனும் விதுரரின் கூற்றில் முளைத்தெழுகிறது புதுத்தீ.

எங்கெல்லாம் நம்மைத் திகைக்கவைக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் புதுத்தீ முளைத்து நம்மைப் புதியவர்களாக்கிக் கொண்டே இருக்கிறது. காட்டில் வாழும் முனிமைந்தனைப் போல தருமன் வெற்று நீதியைப் பேசிக்கொண்டிருந்தாலும் அவன் அரசனல்ல எனச்சொல்லிவிட முடியுமா? ”என் முடிக்காக துரியோதனனைக் கொல்வேன் என்றால் பீமனையும் கொன்று மணிமுடியை வெல்லத் தயங்க மாட்டேன்” எனும் தருமனின் பேச்சில் புதுத்தீ முளைத்து விடுகிறது; நான் மேலும் புதியவனாகிறேன்.     

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.