Thursday, February 12, 2015

தத்தளிப்பின் நல்லூழ் (வெண்முகில் நகரம் அத்தியாயம் பதினொன்று)




அன்பு ஜெயமோகன்,
          
     வெண்முகில் நகரத்தின் துவக்க அத்தியாயங்களில் இருந்து துணைத்தலைப்புகளைக் கவனித்து வருகிறேன். அத்தியாயத்தின் கிளைப்பகுதிகளின் முகங்களாகவே அவை எனக்குப் படுகின்றன. கதைமாந்தர்களின் இயல்புகளைப் பதுக்கி வைத்திருக்கும் சித்திரங்களாகவும் அவை மிளிர்கின்றன. முதல் மூன்று அத்தியாயங்களின் தொகுதிக்கு ‘பொன்னொளிர் நாக்கு’ எனும் துணைத்தலைப்பு; திரெளபதியெனும் பெண்ணுக்குள் விழித்திருக்கும் அனலைச் சுட்ட அதைவிட வேறு சொற்கள் உண்டா? அடுத்த மூன்று அத்தியாயங்களின் தொகுப்புக்கு ‘ஆழ்கடல் பாவை’ எனும் தலைப்பு; அறத்துக்கும் மறத்துக்கும் ஊடாடும் மனநிலை கொண்ட தருமனின் தத்தளிப்பைப் புலப்படுத்துவதற்கு ஆகச்சரியான சொல். தொடர்ந்து வரும் மூன்று அத்தியாயங்களின் துணைத்தலைப்பு ’பிடியின் காலடிகள்’; உடலை மட்டுமே முதன்மையாகக் கருதும் பீமனைக் காட்சிப்படுத்துவதற்கு ஏற்ற சொற்கள். ‘தழல்நடனம்’ எனும் துணைத்தலைப்போடு பதினொன்றாம் அத்தியாயம் துவங்கி இருக்கிறது. அர்ச்சுணனைத் தவிர யார் அச்சொல்லுக்குப் பொருத்தமானவராக இருந்துவிட முடியும்?
          
        நிமித்தநூல் குறித்த கேள்விக்கு சகதேவனின் பதில், ஒரு இலக்கிய வாசிப்பாளனின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் எனச்சொல்வது போல இருந்தது. “நிமித்தநூல் என்பது இங்குள்ள வாழ்க்கையை ஒரு பெரும் வலைப்பின்னலாக நமக்குக் காட்டுகிறது. நம்மை விலக்கி நிறுத்தி அந்த வலையில் ஒவ்வொன்றும் எங்கெங்கே நிற்கின்றன என்று பார்க்க வைக்கிறது. அனைத்தையும் பார்க்க முடியுமா நான் அறியேன்” எனும் சகதேவனின் பதிலில் ‘நம்மை விலக்கி நிறுத்தி’ எனும் சொல்லாடல் முக்கியமானது.
      
  ”நிமித்தகன் ஒருபோதும் தன்வாழ்க்கையை நோக்கக்கூடாது.  அதன்பின் இங்கே பெருநாடகத்தில் ஒருவனாக அவன் நடிக்க முடியாது” எனும் சகதேவனின் பதிலுக்குப்பின் கையிலிருக்கும் வில்லை இது என்ன என்பது போல அர்ச்சுணன் பார்ப்பதே அவனின் அப்போதைய மனநிலையைத் தெளிவுபடுத்தி விடுகிறது. என்ன செய்வது எனத்தெரியவில்லை எனும் அர்ச்சுணனின் கையறுநிலையை அவன் வில்லைவைத்து விட்டுப் பேசுவதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.
         
       ”மண்ணில் எவரும் அருந்தாத பெருங்காதலின் அமுதை தாங்கள் அருந்தக்கூடும்” எனும் சகதேவனின் வார்த்தைகளில் கீதையே எனக்குள் வண்ணமாய் மின்னியது. ”தங்களுக்குள் தத்தளிப்பை அடைந்தவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். அவர்களை தெய்வங்கள் தங்கள் ஆடலில் கருவாக்குகின்றன” என்ற சகதேவனின் பிற்பகுதி உரையாடலால் அவ்வண்ணம் இன்னும் பொலிவானது.
        
       ”வஞ்சம் கொண்ட மனிதனுக்கு இன்பங்கள் இல்லை. சுற்றமும் சூழலும் இல்லை” எனும் துருபதனின் காய்நகர்த்தலுக்கு “தந்தையா தாயா என்ற வினா உச்சரிக்கப்படும்போது நான் தந்தையையே தேர்ந்தெடுப்பேன்” என்று தருமன் சரியாகவே காய்நகர்த்தி இருப்பதாகப் படுகிறது. இருவருக்கும் இடையே நின்று அர்ச்சுணன் தத்தளித்துக் கொண்டிருக்கிறான். சகதேவன் குறிப்பிடும் நல்லூழ் இதுதானோ?

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.