Thursday, March 19, 2015

யுதிஷ்டிரனின் மாற்றம்




முதலிரவின் பின் தருமனில் நடக்கும் மாற்றத்துக்கு இன்னொரு காரணமும் தோன்றியது. இதை யாரும் எழுதினார்களா என்று தெரியவில்லை.

ஒரு பெண்ணுடன் உறவு கொண்ட பின் ஆணுக்கு இயல்பாக ஒரு நிமர்வு, ஒரு திமிர் வருகிறது. அதுவே தருமனில் நடந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கக்கூடும். அந்த இரவுக்கு முன்னால் வரை பயந்து கொண்டிருந்தவன் காலையில் உறுதியானவனாக பேசுகிறான்.

ஒருவன் தான் எவ்வளவு திறமையாளன் என்று அவனுக்கே தெரிந்தாலும். அது அவனில் ஒரு துணிவை ஏற்படுத்த அடித்தளமாக  'நான்' என்னும் உணர்வு இருந்தாக வேண்டும். அப்படியான ஒரு தளத்தை தூண்டியிருக்கிறது துரௌபதியுடனான உறவு. அந்த தளத்தின் மேலே தான் அவனின் திறமையின் மீது அவனுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஒரு ஆணவம் என்று கூட சொல்லலாம். அதுவே செயலூக்கமும் கூட.

தருமனிடம் தெரியும் இன்னொரு முதிர்ச்சி திருதராஷ்டிரரை பற்றி அவன் சொல்வது. எந்த மனிதரையும் முழுமையாக நம்பிவிட கூடாது என்று சொல்வது. உணர்வுகளுக்கு மட்டும் கட்டுப்பட்டு ஒரு வகையில் குருடாக்கப்பட்ட மனிதனாக இல்லாமல் அவனில் புதிய வெளிச்சம் பிறந்திருக்கிறது. உணர்வு, உறவு ஆகியவைகளில் இருந்து சற்று விலகி நின்று பார்க்கிறான். 

விதுரருக்கு கூட இந்த பன்பு இருப்பதில்லை. இந்த இடத்தில் விதுரரிடம் உறையாடும் செளனகர் ஞாபகம் வருகிறார். அன்பு - அது கொடுக்கப்படுவது போல் திருப்பியளிக்கபடவில்லை என்றால் பெருவஞ்சமாக மாறலாம் என்று அன்பை தர்க்கபூர்வமாக பார்த்து சொன்னவர். இப்படிபட்ட ஒரு தெளிவே அந்த கணத்தில் தருமனிடம் தெரிந்தது.

ஹரீஷ்