Tuesday, April 21, 2015

வெண்முரசின் தரிசனம் 3





முதற்கனல் வெண்முரசுக்கு ஒரு அற்புதமான துவக்கம் அளித்தது. நீங்கள் சொல்வது போல உலகியல் தளத்திலும் ஆன்மீக தளத்திலும் பல்வேறு பயணங்கள் அகதரிசனங்கள் அதில் உள்ளன. 

மானசாதேவி சொல்லும் கதையும் தட்சனின் விடுதலையும் இரண்டு bookends என்று சொல்லலாம். அவற்றின் நடுவே நிகழும் காமம், அகங்காரம், ஞானம் கற்பனை, விழைவு, துறவு எல்லாமே ஒன்றிலிருந்து பிறந்தவை, அவையனைத்திற்கும்  இடம் உண்டு என்பது ஒரு தரிசனம். பராசரர்-வியாசர் கதை, கத்ரு-வினதை கதை என்று பலவிதத்தில் இதை விரிவாக்கலாம்.

படிப்பால் கர்வமுற்று தாயை விலக்கும் வியாசர் பின் அவள் காலடியில் தன் ஞானத்தை பணித்து அவள் நகங்களில் தன்னை பார்க்கிறார். இளவரசிகளிடம் சேரும்போது கொண்ட அகங்காரத்தை புரிந்துகொள்ள  மகன் சுகனிடம் சேர்கிறார். கங்கை அம்பை சத்யவதி ஊர்வரை என்று பெண்களால் அலைக்கழிக்கப்படும் பீஷ்மர் பாலைவனத்தில் உறங்கும் விதைகளில் தன் காமத்தை உணர்கிறார். 

என்னை மிகவும் பாதித்த இடங்கள் இவை, இதன் தரிசனம் என்பது ஓரளவுக்கு மேலே பர்சனலாகவே இருக்க முடியும் என்று நினைக்கிறேன். 

பெண் என்றும் தாய் என்றும் இருப்பதை, பெண்மை என்று அறியப்படுவதை, அதன் முன் நம்மை வைப்பதை  பேசுவது முதற்கனல் என்று சொல்லலாம். இதற்குப் பெயர் தான் பெண்ணியம் என்றால் அப்படியே ஆகட்டும்.