Saturday, April 18, 2015

திருதராஷ்டிரனின் கடும் கோபம்


திருதாஷ்டிரருக்கு எதன் காரணமாக துரியோதனனிடம் அத்தகைய கோபம் விளைந்தது என எண்ணிப்பார்க்கிறேன். துரியோதனனை கொல்லும் அளவுக்கு சீற்றம் ஏற்பட காரணம் என்ன?. துரியோதனன் இப்போது செய்யும் ஒரு செயல் சகாதேவனுக்கு போட்டியாக ஒரு பெண்ணை தன் தம்பிகளுக்கு மணம் கொள்ள விழைவது. அந்தப்பக்கத்தில் பீமனும் இதையேதான்  செய்கிறான். பின்னர் எதற்காக இவ்வளவு கோபம்?


    திருதராஷ்டிரன் வாரணாவத எரிப்பிற்கு தன் மகன் காரணமாக இருக்க மாட்டான் என ஒருவாறு தன் மனதை காத்துவருகிறார். துரியோதனனுக்கு தானும் மற்றவரும் சிறுவயதிலிருந்து அரியணை ஆசை ஊட்டி வளர்த்ததால் அவனுடைய  அரியணை ஆசையை அவர் புரிந்துகொள்கிறார். அவனுடைய ஆசைக்காக தான் விரும்பாத போதும் தருமன் அளிக்கும் அஸ்தினாபுரி அரியணையை துரியோதனனுக்கு பெற்று தருகிறார்.

 இந்தச் செயல் திருதராஷ்டிரன் தன் நிலையிலிருந்து மிகவும் கீழிரங்கி எடுத்த மிகக் கடினமான முடிவு. இதுகூட மற்றவர் அனைவரும் பரிந்துரைத்ததாலும் தருமனின் பிடிவாதத்தாலும் அவர் எடுக்கவேண்டியிருக்கிறது. அவரைப்பொறுத்தவரை இரு பிள்ளைகள் ஒரு வீட்டில் இரு அறைகளை தமக்கென கொண்டிருப்பதை தருமனும் துரியோதனனும் தமக்கென இரு அரசுகளை கொண்டிருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் இருவரும் இணையாக இரு அரசுகளையும் ஒரே அரசென கருதி ஆள வேண்டும் என்பதுதான் திருதராஷ்டிரனின் விருப்பம்.

  துரியோதனன் ஆசை அஸ்தினாபுரி அரியணையை அடைவதுடன் முடிவடையவில்லை என்பதை துரியோதனனின் நடவடிக்கைகள் அவருக்கு உணர்த்துகின்றன. தருமனுடனான ஒரு பெரும் போருக்கான முன்னேற்பாடுகளாகவே திருமண உறவுகள் ஏற்படுத்தப்படுகின்றன என்பதை அவர் பார்க்கிறார். ஆனாலும் இதே ஏற்பாடுகள் தருமனின் பக்கம் பீமனால் செய்யப்படுகிறது. பதிலுக்கு பதில் என்பதைப்போல் துரியோதனன் செயல்படுகிறான் என ஏன் நாம் சொல்லக்கூடாது. 


இந்தப்பனிப்போரை யார் ஆரம்பித்தது என்பதை நாம் பார்க்க வேண்டும். தருமன் விரும்பியிருந்தால் முழுமையாக அஸ்தினாபுரி எந்தச் சிறு சிக்கலும் இல்லாமல் அவன் கையில் கிடைத்திருக்கும்.  ஆனால் தருமன் தனக்கு முழுமையாக கிடைத்த அஸ்தினாபுரி அரியணையை வேண்டாம் எனக் கூறியவன்.  அவனாக விரும்பியே துரியோதனனுக்கு அஸ்தினாபுரியை கொடுக்கிறான். ஆகவே தருமனுக்கு துரியோதனனிடம் போட்டிபோட ஒன்றுமில்லை. ஆகவே இந்தப்பனிப்போரை ஆரம்பித்தவர்கள் தருமனுக்கு முழுமையாக கட்டுப்பட்ட தருமனின் தரப்பில் இருக்க முடியாது. ஆகவே திருதராஷ்டிரர் இவ்வளவு நிகழ்வுக்கும்  காரணம் துரியோதனன் என்பதை ஐயமற அறிகிறார்.  அவனின் இச்செயல்களின் இலக்கு ,  அறத்தின் வழியில் மட்டுமே வாழ்க்கை நடத்துபவனும், ஆதரவற்றவனாய் வேற்று நாட்டில் தஞ்சமடைந்துள்ளவனுமான, தன் தம்பி பாண்டுவின் மறு உருவான    தருமனின் அழிவே  என்பதை காண்கிறார்.


    ஒரு தந்தையாய் அவர் தன் மகன் அழகற்றவன், திறனல்லாதவன், பாண்டித்யம் இல்லாதவன் என்பதையெல்லாம்  பொறுத்துக்கொள்வார் ஆனால் தன் மகன்  ஒரு நல்லவன் மேல் வஞ்சமும் பொறாமையும்  கொண்டு அவன் அழிவுக்கு திட்டமிடுபவன் என்பதை  அவருடைய அறத்தின்பாற்பட்ட பேருள்ளத்தால் சற்றும் பொறுத்துக்கொள்ளமுடியாது. துரியோதனன் நேரடியாக வந்து திருதராஷ்டிரனின் சம்மதத்தை கேட்பது இறுதி மயிற்பீலியாக அமைந்து திருதராஷ்டிரனை பொறுமை என்ற அச்சை முறித்துவிடுகிறது.


         இனி என்ன ஆகும்? ஒன்று துரியோதனன் இறக்க வேண்டும் அல்லது அவர் இறக்க வேண்டும். ஒருவனின் இறப்பு என்பது அவன் உயிர் உடலைவிட்டு நீங்குதல்தான் என்பதில்லை. ஒருவன் தன் இயல்பிலிருந்து முற்றிலும் வேறு இயல்பிற்கு மாறுதலும் ஒரு இறப்புதான். 


   திருதராஷ்டிரனை வெறும் பதவி ஆசையை கொண்டவனுமாகவும் பிள்ளைப்பாசத்தால் தடுமாறுபவனாகவும் ஒற்றைப்படையாக சித்தரிக்காமல் இப்படி அந்த பாத்திரத்தை வளர்த்தெடுப்பது அபாரமானது.  உலகின் எந்த சீரிய இலக்கியத்தையும்  சவால்விடும் தன்மையுடன் வெண்முரசு வளர்ந்துவருகிறது என்பதில் எந்த ஐயமுமில்லை.

தண்டபாணி துரைவேல்