Wednesday, July 15, 2015

கனவு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். உங்களை பற்றி முன்பே அறிந்திருந்தும் உங்களது வெண்முரசு என்னை உங்களது எழுத்துலகில் சேர்த்தது. கொஞ்சம் கொஞ்சமாக உங்களது மகாபாரதத்தை படித்து வருகிறேன். அற்புதமான கற்பனை வளம். ஆன்மிக மகாபாரதம் வேறு, நாவல் வடிவம் வேறு. திரு. கங்குலி அவர்கள் ஆங்கிலத்தில் எழுடிய வடிவத்தை ஓரளவு முழுமையாக படித்திருக்கிறேன், கிட்டதட்ட 5௦௦௦ பக்கங்கள். உங்களது 4௦௦௦௦ பக்கங்களையும் படிக்க காத்திருக்கிறேன். அதில் கிடைக்காத பதில்கள் உங்களது படைப்பில் வருகின்றன. ஆன்மிகத்தை விலக்கி இதை ஒரு வரலாறாக அனைவரும் படிக்க வேண்டும். உங்களது அசுரத்தனமான இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துகள். நேரம் ஒதுக்கி உங்களது மற்ற படைப்புகளையும் படிக்க வேண்டும். முயற்சிக்கிறேன். 

சிறு வயதில் காமிக்ஸ், பின் சுஜாதா, கல்கி, தேவன், மற்றும் ராஜேஷ் குமாரின் நாவல்களையும் தீவிரமாக படித்தவன். பின் ஓரளவு எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் போன்றோரையும் சற்று ரசிக்க ஆரம்பித்தேன். மெல்லிய நகைச்சசுவையையும், ஆற்றொழுக்கு நடையையும் ரசிக்க முடிகிறது. அனால், சில தீவிரமான கதைகளை அதன் உள்ளர்த்தம் புரிந்து படிப்பது கடினமாக உள்ளது. 

உங்களது வலை பக்கம் மூலமாக இலக்கியத்தை ரசிக்க முயற்சிக்கிறேன்.

கூகிள் தமிழ் டவுன்லோட் செய்து இதை எழுதியிருக்கிறேன். தவறுகளை மன்னிக்கவும்.
ஸ்ரீராம்
சென்னை   
13-௦7-2௦15