Wednesday, July 29, 2015

பெண்ணின் உள்ளிருக்கும் உலோகம்



     ஒரு பெண் உடளவில் எவ்வளவு மென்மையானவள் என்பது அவளைப்பார்க்கும்போதே தெரியும். அவள் மனதின் மென்மையை அவளுடன் சற்றே பழகும்போது தெரியும்.  ஆனால் ஒருவன் ஏதோ  ஒரு சமயத்தில் அந்த மென்மையடுக்குக்கு அடியில் தெரியும்  உலோக கட்டுமானத்தை கண்டு திகைக்க நேரிடும். இந்த மெல்லிய  பெண்ணிற்கு உள்ளே வளைக்கவோ உருக்கவோ முடியாத இந்தக் கடின உலோகத்தை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்த உலோக உவமையை ஜெயமோகன் ஒரு கதையில் கூறியிருப்பார். நாம்  பல்வேறு  தர்க்கங்கள் என்னும் ஆயுதங்களோடு ஒரு பெண்ணை இசையவைக்க அனைத்து ஆயத்தங்களோடு சென்றிருப்போம்.  ஆனால் ஒன்றும் நிகழாது.  அனைத்து தர்க்கங்களும் அந்த உலோக பரப்பில் பட்டு முனை முறிந்து தெறித்து விழும். அத்தகைய  நிலையில் நாம் அவளிடம் பேசுவதைவிட  ஒரு பாறையில் முட்டிக்கொள்ளலாம் என நினைக்கிறோம்.

   நாம் சற்று ருக்மியின் நிலையில் இருந்து பார்ப்போம். அவனுடைய தர்க்கங்கள் எவ்வளவு நேர்த்தியாகவும் நியாயமாகவும் இருக்கின்றன. அதற்கான சூழலும் இயற்கையாக அமைகிறது. தந்தை தாய் மக்கள் என அனைவரும் அவன் தர்க்கங்களை ஏற்றுக்கொள்ளும் நிலை இயல்பாக ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் எந்த தர்க்கமும் தர்க்கிக்க விரும்பாத ஒருவரிடம் செல்லுபடியாவதில்லை. ருக்மணி, ருக்மியின் தர்க்கங்களுக்கு எதிராக எந்த தர்க்கத்தையும் வைக்கவில்லை என்பதை நாம் பார்க்கலாம். கண்ணால்கூட காணாமல் வெற்று ஒற்றை வார்த்தையில் மையல் கொண்டு கண்ணனையே மணப்பேன் என பிடிவாதம் பிடிக்கும் ருக்மணியிடம் என்ன தர்க்கம் இருக்கிறது?  மேலே நகர முடியாமல் ருக்மணியின் பிடிவாதத்தில் முட்டிக்கொண்டு நிற்கும் ருக்மியின் மீது நமக்கு  பரிதாபம்தான் ஏற்படுகிறது.
     
 தான் அழிந்தாலும் பரவாயில்லை என தன் நிலையிலிருந்து இறங்காமலும்,  எந்த தர்க்கத்திற்கும் செவி கொடுக்காமலும் இருக்கும்  பெண்ணின் இந்த இயல்பு அச்சமூட்டுவது.  இதை அம்பையிடம் பீஷ்மர் கண்டு திகைத்திருக்கிறார். குந்தியிடம் பாண்டு, விதுரர், அவளின் ஐந்து புத்திரர்கள் மட்டுமல்லாது அஸ்தினாபுரியின் அரசவையே கண்டு அதிர்ந்திருக்கிறது. திரௌபதியின் உள்ளே இருக்கும் இந்த உலோகம் கூரிய வாளாக வெளிவந்து உயிர்களை பலி கொள்ள காத்திருக்கிறது. சிறிது முன்னர் இந்த உலோகத்தை, சியமந்தக மணியை திரும்பக் கொணர உண்ணா நோன்பிருந்த பாமாவிடம் கண்டோம்.
     
இருவகையான ஆண்கள் இருகிறார்கள். ஒருவகையினர், அதுபோன்ற உலோகம் வெளிப்படும் நேரத்தில்  மனைவிக்கு பயந்து அவள் சொல்படி நடப்பவர்கள். கண்ணனைப்போல அதுபோன்ற சமயத்தில் காலில் விழுந்து சரணடைந்து விடுவார்கள். மற்றொருவகையினர்  அதை வெளியில் தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பவர்கள்.  நான் கண்ணனை வழிகாட்டியாக கொண்டவன்.

தண்டபாணி துரைவேல்