Tuesday, August 11, 2015

விவாதங்களில் வெல்வது

விவாதத்தில் வெல்வது எப்படி?
     ஒருவரை ஒரு வாதத்தில் வெல்வதற்கு சில அமைப்புகள் தேவை. ஏனென்றால் என்னதான் நாம் அனைத்து தர்க்க நியாங்களை கொண்டிருந்தாலும் எதிர் தரப்பினர்  தர்க்க வழிமுறைக்கு மாறாக செல்லுதல் அல்லது  தர்க்கத்திலிருந்து விலகி வேறு ஏதாவது தொடர்பற்ற  ஒன்றை பேச ஆரம்பித்து தர்க்கத்தை திசை மாற்றுதல்  என்பது எப்போதும் நடக்கும் ஒன்றாக இருக்கிறது. நம்முடைய தொலைக்காட்சி விவாதங்களில் அதுதானே நடக்கிறது.    ஒரு தர்க்கம் நடந்து சரியான முடிவை அடையவெண்டுமென்றால். எதிர்க்கும் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும், மதிக்கும், ஒரு வலுவான, நடுநிலையான மூன்றாவது நபர் வேண்டும். அல்லது ஏதாவது ஒரு விவாத முறையை வகுத்து அதை கண்டிப்பாக பின்பற்ற இருதரப்பினரும்  கடமைப்பற்றிருக்கவேண்டும். ஆனால் இந்தகைய அமைப்பு ஏதுமன்றியே நம்முடைய விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆகையால அத்தகைய விவாதங்கள் எந்த முடிவையும் எட்டாமால் புரிதலின்மையை பெரிதாக்கி இரு தரப்பினரையும் மேலும் மேலும் விலகிச் செல்ல வழி வகுக்கிறது.
       இருப்பினும் நாம் அன்றாடம் விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டியவர்களாக இருக்கிறோம்.  அலுவலக் சக அதிகாரிகளுடன் பணி சம்பந்தமாக, நண்பர்களுடன் ஏதவது ஒரு நிலை எடுப்பது பற்றி,  உறவினர்களுடன் குடும்ப விஷயங்களில்  என நம் தரப்பு நியாத்தை கூறி விவாதித்து முடிவெடுக்கவேண்டிய அவசியம் இருந்துகொண்டே இருக்கிறது. இவையனைத்தையும் விட நம்முடன் வாழ்நாள்முழுதும் உடன் இருக்கப்போகும் நம் வாழ்க்கைத்துணையுடன் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய தருணங்கள் அன்றாடம் இருக்கின்றன.
 
 
       வெண்முரசில்  திருஷ்டத்துய்மன் பாமா இடையிலான இன்றைய விவாதம் நமக்கெல்லாம் ஒரு முக்கியமான பாடம் ஆகும். இதிலிருந்து கற்றுக்கொள்ள நமக்கு நிறைய குறிப்புகள்  உள்ளன.  நாம் அவற்றை தொகுக்க முயல்வோம்,

1. நம் தரப்புதான் சரி என்ற தீவிர நிலைப்பாடுடன் ஒரு விவாதத்தை நாம் துவக்கக்கூடாது.
 
      அது நம்  எதிர் தரப்பினர் சொல்வதை கவனத்தில்கொள்ளவிடாது. எதிர்தரப்பினரின் கூற்றுக்கு சரியான பதிலை சொல்லவிடாமல் தடுக்கும்.
 
 
    திருஷ்டத்துய்மன் சாதயகியிடம்  சியமந்தக மணியை ருக்மணிக்கு பெற்றுதருவதைப்பற்றி  நான் முயலப்போகிறேன் என்றுதான் சொல்லுகிறான் கண்டிப்பாக பெற்று வருவேன் எனச் சொல்லவில்லை என்பதை கவனிக்கலாம்.  

2. தன்னால் வாதத்தில் கண்டிப்பாக வெல்ல முடியாது என்ற நிலையில் வாதத்தில் இறங்கவே கூடாது.
 
 
   சிலர் ஒரு வேடிக்கைக்காகவோ அல்லது எதிராளியை சீண்டுவதற்காகவோ அவர்கள் ஒத்துக்கொள்ளவே முடியாத ஒன்றை ஏற்கசொல்லி வாதிடுவார்கள். இதன்மூலம் விரிசல் பெரிதாகி பாதகமான விளைவுகள் மட்டுமே நேரிடும்.
 
 
    தன்னுடைய குலத்திற்கு சொந்தமான தன் தந்தையின் குலமணியை அவள் ருக்மணிக்கு தருவாள் என திருஷ்டத்துய்மன் எப்படி  எதிர்பார்க்கிறான்? சியமந்தகமணியை விட பெரிதிலும் பெரிதான  கிருஷ்ணனையே ருக்மணியிடம் பகிர்ந்துகொண்டவள் அவள். ஆகவே அவளை இதற்கு இணங்கவைப்பதற்கான சாத்தியம் உள்ளது என்பதை திருஷ்டத்துய்மன் அறிந்திருப்பான்.

3. நாம் இதை எதிர்பார்க்கிறோம் என்பதை முழுதாக எதிர் தரப்பினரிடம் வெளிப்படுத்தக்கூடாது.
 
 
    இது நம்முடைய முழுமையான வெற்றிக்கான  வாய்ப்பை பலவீனமாகிவிடும். பின்னர் நாம் எதிர் தரப்பினரை நம்  எதிர்பார்ப்பிற்கு  குறைவானதையே அடைய முடியும்.
 
 
  திருஷ்டத்துய்மன்  ருக்மணி  சியமந்தகத்தை கேட்கும் தகவலை வெறுமென சொல்ல வந்தவனா அல்லது தன்னை மணியை தர இணங்க வைக்க  வந்தவனா என பாமாவிற்கு கடைசி வரை தெரியாமல் அவன் பார்த்துக்கொள்கிறான். அவள் வாதிடுவது திருஷ்டத்துய்மனுக்கு எதிராக இல்லாமல் என ஆகிவிடுகிறது. ஆகவே திருஷ்டத்துய்மன் சொல்வதை  எவ்வித ஐயமுமில்லாமல் கேட்கிறாள். இதுவே திருஷ்டத்துய்மன் முதலிலேயே நீங்கள் ருக்மணிக்கு மணியை தர வேண்டும் என தன் நோக்கத்தை முழுதாக காட்டியிருந்தால் அவள் அவன் சொல்வதை நம்பியிருக்க மாட்டாள்.
 
 
4. உடல்மொழியை கட்டுக்குள் வைத்திருப்பது.
 
 
    நம் பேச்சைவிட நம் உடல்மொழி நம்மை காட்டிக்கொடுக்கும் நம் பிடிவாதம், பதட்டம், ஆசை, அனைத்தையும் நம் உடல் மொழி எதிர் தரப்பினருக்கு நம் நோக்கத்தை வெளிக்காட்டும். வாதத்தில் நாம் இருக்கும் தோரணை, நம் கைகளின் அசைவு முகத்தில் அரும்பும்  புன்னகை மற்றும் சுளிப்பு ஆகியவை நாம் சொல்ல விரும்பாததை எல்லாம் சொல்லிவிடும் ஆபத்திருக்கிறது.
 
 
    திருஷ்டத்துய்மன் தன் உடலை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் பாமாவிற்கு அவன் நோக்கத்தைபற்றி எந்த தெளிவும் கிட்டாமல் போகிறது மேலும் அது அவள் மன உறுதியை குறைக்கிறது.
 
 
5. எதிர்நபர் அவர் எடுத்திருக்கும் முடிவு சரிதானா எனும் வகையில் அவர்  மனதில் சந்தேகங்களை  உள் புகுத்த வேண்டும்.
 
   ஒரு வாதத்தின் வெற்றிக்கு பெரிய தடை எதிர் தரப்பினர் கொண்டிருக்கும்  'தம் நிலை சரிதான்'  என்பதன் மீதான  வலுவான நம்பிக்கை. அதை வலுவிழக்கவைத்தல் வெற்றிக்கான முதல்படி.
 
 
   பாமா சியமந்தக மணி முழுமையாக தன்னுடையதுதான் நம்புவதால்  அவள் ருக்மணிக்கு மணியை தர தேவையில்லை என உறுதியாக இருக்கிறாள். ஆனால் திருஷ்டத்துய்மன் அம்மணி தொலைக்கப்பட்ட இரு முறையும் கிருஷ்ணனால் திரும்பக் கொணரப்பட்டது என்பதால் அது கிருஷ்ணனின் மணி என்பதை அவள் அறிய வைக்கிறான். கிருஷ்ணனே அரசியர் எண்மருக்கும் பொதுவானவன் என்பதால் அவனுடையதாக ஆகிவிட்ட  சியமந்தக மணி பாமாவிற்கு மட்டும் சொந்தமென்பது சரியா என ஒரு ஐயத்தை பாமாவிற்கு ஏற்படுத்திவிடுகிறான்.

6. ஏதோ ஒரு பகுதி-உண்மையை பிடித்துக்கொண்டிருக்கும் எதிர்தரப்பினருக்கு  முழுமையை காட்டுவது.
 
    தான் பொய்யென நம்பும் ஒன்றுக்காக ஒருவர் வாதிடுவதில்லை. அப்படி வாதிடும் ஒரு பொய்யனிடம் நம்மால் ஆவது எதுவும் இல்லை. ஆனால் பெரும்பாலும் வாதிடும் இருதரப்பினரிடமும் உன்மையின் கூறுகள் உள்ளன. ஆகவே அவர்கள் தம் நிலையில் உறுதியாக இருப்பர்கள். ஆனால் முழுமையான உண்மையை அவர்கள் அறியச்செய்வதன்மூலம் அவர்கள் தங்கள் நிலையிலிருந்து மாற வைக்க முடியும்.
 
 
  பாமாவின் குலத்தைச்சார்ந்த மணி அது என்பது உண்மைதான் . அது பகுதி உண்மை. ஆனால் உண்மையின் இன்னொரு பகுதி, அது இப்போது கிருஷ்ணனுக்கு சொந்தமானது என்பது. இந்த முழு உண்மையை பாமாவின் மனதில் உணர்த்துகிறான் திருஷ்டத்துய்மன்.

7. ஏதோ ஒரு காலத்தில் இருப்பவரை நிகழ்காலத்தை காணவைப்பது.
 
ஒருகாலத்தில் உண்மையாக இருந்த ஒன்றை  இன்னும் உண்மைதான் என சிலர் நம்பி வாதிடுவார்கள். அவர்களுக்கு தற்கால உண்மை நிலையைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் நம்முடைய கூற்றுக்கு அவர்களை இணங்கவைக்கமுடியும். 
 
பாமா துவாரகையின் முதன்மைஅரசி என கிருஷ்ணன் அவளிடம் சொல்லியிருக்கலாம். ஆனால்,  இப்போது துவாரகை எட்டு அரசிகளை கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் முதன்மையான்வர்கள்  என்பது நிகழ்கால உண்மை.  இந்த உண்மையை அவள் கண் முன் காட்டுகிறான் திருஷ்டத்துய்மன்.

8. எதிர் தரப்பினரை  பேசவிடுதல்.. 

  சிலர் ஒரு வாதத்தில் எதிர் தரப்பினருக்கு இடமளில்ல்காமல் தானே பேசிக்க்கொண்டிருப்பர். இது எதிர் மாறான பலனையே தரும். எதிராளியின் பேச்சு விவாதம் என்ற படகு பயணத்தில் எதிர் காற்றைப்போல் தான். ஆனால் ஒருவன் எதிர் தரப்பினரை பேசவிட்டு  சிறிய குறுக்கீடல்கள் மூலமாக,  ஒரு தேர்ந்த  மாலுமி எதிர்காற்றை கப்பலின் பாய்களை மாற்றி மாற்றி திருப்பி கப்பலின் போக்குக்கு பயன்படுத்துவதைப்போல, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.  

  திருஷ்டத்துய்மன் பாமாவை பேசுவதை ஊக்குவித்து நடுவில் சில ஐயங்கள் எழுப்புவதன் மூலமும், சில விளக்கங்களை அளிப்பதன் மூலமும்  அவளை தன் தரப்பின் வழிக்கு வரவைக்கிறான்.

9. எதிர் தர்ப்பினர் சொல்வதை நேரடியாக மறுத்து பேசாமல் இருப்பது.
 
 
அவர் சொல்வதை மறுத்து  எதிர் மாறான கருத்தை நம் கூற்றாக கூறுவது அவர்களை சினம் கொள்ளவைக்கும். பின்னர் நாம் கூறுவது எதுவும் அவர்கள் செவி கொள்ளப்போவதில்லை.  அவர்களை சென்று அடையாமல் போய் விடும்.    அந்த எதிர் கருத்தை நம் கருத்தாக கூறாமல் மற்றவர் கருத்தாக அல்லது மற்றவர் அவ்வாறு கூறக்கூடும்  எனச்சொல்வதன் மூலம் நாம் சொல்ல வேண்டிய எதிர் கருத்து அவர்களிடம் சேர்த்துவிடலாம்.
 திருஷ்டத்துய்மன் இந்த முறையில் பாமாவிடம் அவள் விரும்பாத எதிர் கருத்தை அவளிடம் மறைமுகமாக சொல்வதை காணலாம்.
 
 
10.   மௌனத்தை பயன்படுத்துதல்.
 
 
சில சமயம் சரியான நேரத்தில் மௌனத்தை கடைபிடித்தல் நம் மறுப்பை எதிர் தரப்பினருக்கு உறுத்தாமல் உணர்த்தும்.   நமது மௌனம் அவர்களை நம்மை கவனிக்க வைத்து நம் தரப்பு நியாத்தை யோசிக்க வைக்கும்.
திருஷ்டத்துய்மன் முதலில் காட்டும் மௌனம பாமாவின் பிடிவாதத்தை சலனப்படுத்தி சிந்திக்க வைக்கிறது அவன் என்ன சொல்ல வருகிறான் என கவனிக்க ஆரம்பிக்க்றாள்.
 
 
11. எதிர் தரப்பினர்  அவமதிக்கப்பட்டோம் அல்லது சிறுமைபடுத்தப்பட்டோம் என உணரும்படி ஒருபோதும் நடக்கக்கூடாது.
     
 விவாதத்தில் நாம் மறுத்துப்பேசுவது எதிர் தரப்பினரின் கருத்தைமட்டுமே. எதிர்தர்ப்பினர் நம் எதிரி அல்ல. அவர்களை நாம் மதிக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்படி எப்போதும் பேசவும் நடக்கவும்வேண்டும்.
  திருஷ்டத்துய்மன் பாமாவிடம் காட்டும் மரியாதைகவனியுங்கள்.  அவளின் பெருமையை குறைக்கும் எந்த ஒரு சொல்லும் அவன் பயன்படுத்துவதில்லை. அவள் மற்ற அரசிகளில் ஒருவள்தான் என்பதைக்கூட அயலவர் கூற்றாகத்தான் கூறுகிறான என்பதைக்கவனிக்கவும்.

12.  விவாதத்தின் வெற்றியை கொண்டாட வேண்டாம்.
   
 
  நாம் இறுதியில் விவாதத்தில்   வெற்றிபெறும்போது அதைக் கொஞ்சம் கூட வெளிக்காட்டாமல் இருக்கவேண்டும். இல்லையென்றால் எதிர் தரப்பினர் பின்வாங்க்விடக்கூடும்.  உண்மையில் நாம் விவாதத்தில் அடையும் வெற்றி என்பது உண்மை அடையும் வெற்றியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அது நம் இருவரின் தொல்வியாக ஆகிவிடும். நாம் நடந்துகொள்ளும் முறை எதிர் தரப்பினர் அவர்கள் வெற்றி அடைந்ததாக உணர வேண்டும்.  எப்போதும் வெற்றி என்பதும் எதிர் தர்ப்பின் தோல்வி என்பதும் ஒரே விஷயமல்ல. இரண்டுக்கும் பெரியு வேறுபாடு உள்ளதென்பதை நாம் உணரவேண்டும்.
 
 
இங்கு பாருங்கள் பாமா உரையாடல் முடிவில் அவள் வெற்றி பெற்றதைப்போல் மகிழ்கிறார்கள்.
 
 
 வெண்முரசு காட்டும் இந்த வழிமுறைகளை கடைபிடிக்கும் ஒருவர் விவாதத்தில் வெற்றி காண்பது என்பது உறுதியானது.