Wednesday, August 26, 2015

புலிக்குருளை பாதை



இறைவன் அடியவர்களை ஆட்கொள்ள வழியில்லாத இடத்திலும், ஒரு வழியை உண்டாக்கி அவர்களை அடைந்துவிடுகின்றான். எந்த வழியில் அவன் வருவான்? நாம் நினைக்கும் வழி நமக்கு கிடைக்குமா? எல்லா வழியிலும் வரும் அவனை எந்த வழியில்நின்று எதிர்க்கொள்ளமுடியும்?. ஒருவருக்கு பயன்பட்ட வழி மற்றவருக்கு பயன்படுமா? அவனே அறிவான் அவர் அவர்களுக்கான வழியை.

சில அடியவர்களை பூவைக்கிள்ளுவதைப்போல கிள்ளியதே தெரியாமல் கிள்ளி எடுத்துவிடுகிறான். கிள்ளுபவனும் புன்னகைக்கிறான், கிள்ளப்பட்டப்பூவும் புன்னகைக்கிறது. 

சில அடியவர்களை பாறை உடைப்பதுபோல உடைத்து எடுக்கிறான், உடைப்பவனும் குருதி சிந்துகிறான், உடைபடும் கல்லிலும் குருதி வழிகிறது.

சில அடியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அபிராமிப் பட்டர்  சொல்லதுபோல அவர்களுக்கு முன் செய்த புண்ணியம் இருக்கின்றது. தடையேதும் இன்றி செல்கின்றார்கள்.

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே
-அபிராமி அந்தாதி.

மித்திரைக்கு எல்லாம் தலைகீழாக இருக்கின்றது. நீலன் பெயர்கூட சொல்லமுடியவில்லை எப்படி நீலன் புகழ்பாட முடியும்? அவள் எப்படி நீலனை அடைவாள்?. அவள் செய்த புண்ணியம் அவ்வளவுதான். முன்னம் அவள் நாமம் கேட்டதில்லை, அவள் வண்ணம் கேட்டதில்லை, அவனுடைய ஆரூர் கேட்டதில்லை, அவனுக்காக அவள் பிச்சி ஆனதில்லை, அன்னை, அப்பனை நீக்கும் வல்லமையும் இல்லை, அவள் எப்படி அவன்தாள் பற்றவாள், அவள் வினைவழி அப்படி.

இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே-அபிராமி அந்தாதி.

வினைவழியே ஓடும் அவள் நீலன் என்ற பெயரை மட்டும்தான் கண்டுக்கொண்டாள்.  அந்த பெயரைக்கூட ஒலியற்ற வடிவில்தான்  இதுவரைக்கண்டு இருக்கிறாள். அவள் எப்படி நீலனை அடைவாள்?

பக்தியில் இரண்டு வகை இருக்கிறது, ஒன்று மர்க்கட பக்தி மற்றொரு மார்ஜால பக்தி. மர்க்கடப்பக்தி என்பது குரங்குக்குட்டி தனது தாயைப்பற்றிக்கொள்வதுபோல பக்தன் இறைவனைப்பற்றிக்கொள்வது. ஆண்டாள் அரங்கனைப்பற்றிக்கொண்டது.   மார்ஜாலப்பக்தி என்பது பூனை தனது குட்டியை கவ்வி எடுத்துப்போவதுபோல இறைவன் பக்தனை எங்குவேண்டும் என்றாலும் எடுத்து வைத்து தக்க நேரத்தில் வந்து தூக்கிச்செல்வது. மித்திரைகொள்வது மார்ஜாலப்பக்தி. மித்திரை எறும்பினும் சிறிதாகி தனக்குள் தான் நுழைந்து தன்னை  இதழ்ந்து நீலன் என்று இருக்கிறாள். இருளுக்குள் இருள் என்று ஆகி, இருளில் எழும் ஒளிக்கண்டு நீலனை கண்டுக்கொள்கிறாள். நின்றும், கிடந்தும், இருந்தும் அவள் நினைப்பது அவனை மட்டும்தான். எறும்பினும் சிறு எறும்பு என்று ஆகும் நாளில் தன்னால் எதுவும் ஆகாது என்று அவள் ஆணவத்தை விடுவதை நீலன் அறிந்து வந்தானோ? அவள் ஆணவம் விடும் நாளில் நீலன் அவளுக்காக வருவது அழகு, தானே நேரே சென்றால் பயந்தே செத்துவிடுவாள் என்று பெண்ணுக்கு பெண்ணையே குருவென்று துணைவைக்கும் நீலன் ஞானன். .

நீலனிடம் மித்திரையை சேர்க்க சுபத்திரை அவளை எடுத்துச்செல்லும் நாளில் அவளின் மார்ஜாலபக்தி வெல்கிறது. புலியன்னையால் குருளையென கவ்விக்கொண்டு செல்லப்படுவதாக மித்திரவிந்தை உணர்ந்தாள்-இந்திரநீலம்-86.

மார்ஜாலப்பக்தியில் அவள்  நீலன்பெயரோடு கனவில் மட்டும்தான்  நுழைந்தாள்,  கனவு முடியும்முன்னமே நீலனுக்காக அவள் எடுத்துச்செல்லப்படுகிறாள். கனவுகூட நிஜங்களின் பாதி. மார்ஜாலப்பக்தியில் கடவுள் வருகிறான், கடவுளின் கையாளாக குருவருகிறார். பக்தனுக்காக அவர்கள் வாள் ஏந்துகின்றார்கள். காயங்கள் இல்லாமல் இரத்தத்தில் குளித்து பக்தன் கடவுளை அடைகிறான். ஒரே ஒரு தடை, அந்த கணத்தின் தடை. அந்த கணத்தின் தடையை தாண்டுவதுதான் பக்தன் முன் இருக்கும் பெரும் சவால், அந்த சாவலை கண்டு கொண்ட பக்தன் வெல்கின்றான்.  எல்லாவற்றறையும் இழந்தும், அன்னை தந்தை பாசத்தில் வழக்கிவிழுந்து மீண்டும் பிறவிப்பெருங்கடலில் நீந்துபவர்கோடி. அன்னை தந்தையை விடுத்தும், கடவுளின் சார்பாக நம்மை காப்பாற்றவரும் குருவிடம் நம்பிக்கை வைக்கமுடியாமல்போகும் கணம் தடைதாண்ட முடியாத இருளில் தள்ளுகின்றது. அது மீளா இருளெனவே வாழ்நாளெல்லாம் நகர்கிறது. அந்த கணத்தின் இருளை நம்பிக்கை ஒன்றால் மட்டுமே கடக்கமுடியும். அச்சத்தைவிட்டவரே அதை  அடையமுடியும், செல்லும் பாதை குருதி நிறைந்த பெரும்காடு அல்லவா? பாசத்தை விட்டவரே கடக்கமுடியும்.

மனத்தில்பிரியா வங்கண மாக
நினைத்தபடிஎன் நெஞ்சத்திருந்து
அதிசயம் என்றுன் அடியார்க் (கு) இரங்கி
மதியருள் வேலும் மயிலுடன் வந்து        ... ... 84

நானே நீயெனும் லட்சணத் துடனே
தேனே என்னுளம் சிவகிரி எனவே
ஆறா தாரத்து ஆறு முகமும்
மாறாதிருக்கும் வடிவையும் காட்டி        ... ... 88

கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்கத்
தனதென வந்து தயவுடன் இரங்கிச்
சங்கொடு சக்கரம் சண்முக தரிசனம்
எங்கு நினைத்தாலும் என்முன் னே வந்து-கந்தர் சஷ்டிக்கவசம்-பழநி 

எங்கு நினைத்தாலும், எங்கு இருந்தாலும், மார்ஜால பக்தியில் இறைவனே வந்து பக்தனை ஏற்றுக்கொள்கின்றான் என்றாலும், இறைவன் நாமம் அறிந்திருக்கவேண்டும், அந்த நாமத்தோடு தன்னை சிறு உயிராக்கி கனவில் விழவேண்டும், கனவு கலைந்து நிஜம்வரும் நாளில் துணிவு வரவேண்டும், துணிவு வந்தாலும் பெற்றப்பாசத்தை உதர வைராக்கியம்வேண்டும், வைராக்கியம் வந்தாலும் நம்மை இவர் கரைசேர்ப்பார் என்று குருவிடம் நம்பிக்கை வேண்டும், குருவிடம் நம்பிக்கை வந்தாலும் அந்த கணத்தை விட்டுவிடாமல் இருக்கவேண்டும், இல்லை என்றால் அந்த கணம் வர இனி எத்தனை ஜென்மம் ஆகுமோ? யார் அறிவார்?

மித்திரை அனைத்தையும் செய்துமுடித்தாள், அதன் பயன் என நீலனைக்கண்டாள். அந்த நிலையில்கூட மானிட நெஞ்சம் இந்த மண்மீது கொண்ட தொடர்ப்பாசத்தில் அதை “நஞ்சு” என்றே நினைக்கிறது. சரிதான் அந்த நீல நஞ்சு பிறவியை கொல்லும் நஞ்சுதானே. மீண்டும் பிறக்காமல் செய்யும் நஞ்சு. அதலால் நீலம்  பிறவிக்கு நஞ்சு, உயிருக்கு அமுதம். 

தெரிந்தவர்கள் பயணம் செய்ய ஆயிரம் பாதை இருக்கிறது, தெரியாதவர்கள் பயணிக்க ஒரே ஒரு பாதைதான், அது புலிக்குருளை பாதை.

நனறி ஜெ, மார்ஜார பக்தியை சுபத்திரை எனும் புலியையும், மித்திரவிந்தை என்னும் புலிக்குருளையும் கொண்டு சித்திரம் தீட்டிக் காட்டிவிட்டீர்கள். அற்புத காவியம். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். 

அன்புள்ள ராமராஜன்

நெருக்கமாக வருகிறீர்கள் என அறிவேன். ஆனால் இன்னும் இரு அத்தியாயங்களுக்குப்பின் வருவதை முன்னரே ஊகித்துஎழுதுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை. விரிவாக அதில் உள்ளது

நன்றி

ஜெ