Monday, October 26, 2015

சாட்டையடி (காண்டீபம் 40)


  

   சிறுவயது காலங்களில் திரௌபதியம்மன் கோயில் திருவிழாவை கண்டு வந்திருக்கிறேன்.  அந்த நாட்களில் பத்து நாட்கள் நடைபெறும். ஊர் முழுக்க திருவிழாவில் பங்கு கொள்ளும். தினமும் தெருக்கூத்து நடைபெறும்.  ஒருநாள் தீமிதி விழா நடக்கும். அன்று காலை அரவான் பலி கொடுக்கும் நிகழ்வு, பயமும் ஆர்வமும் மனதில் நிறைந்திருக்க சென்றூ பார்ப்பேன். இளைய பாண்டவர்கள் ஐவர் மாய்ந்துபோகும் படுகளக் காட்சி நடுக்கமூட்டுவதாக இருக்கும். மாலை ஊரில் உள்ள பெருமபாலானோர் தீ மிதிப்பர்கள். 


     நீண்ட காலம் கழித்து ஒரு தீ மிதி திருவிழாவுக்கு சென்றிருந்தேன்.   பக்தர்கள் தீமிதித்து  சென்று  திரௌபதி அம்மன் முன்னே சென்று குழுமினார்கள். சிறிது நேரத்தில் பளீர் பளீர் என்ற சத்தம் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தது. நான் கூட்டத்தில் நுழைந்து என்னவென்று பார்த்தேன்.   நான்கு நபர்கள்  கையில் சாட்டையுடன் இருக்க பக்தர்கள் இரு கையை பிணைத்து முன் நீட்ட அவர்கள் சாட்டையால் வேகத்துடன் அடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த சத்தமே அவர்கள் அடையும் வலியை காட்டியது. தீ மிதித்த பக்தர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் இப்படி சாட்டையடி வாங்கிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே என் கைகளும் பிணைத்துக்கொண்டு முன் நீண்டது. பளீர் பளீர் என்று மூன்று சாட்டை அடிகள். கைகளில் சாட்டையின் அளவை காட்டும் மூன்று தடிப்புகள்  உடன் தோன்றின. கைகள் வலித்துக்கொண்டிருந்தன.

ஆனால் வலி தித்திப்பதை அன்று உணர்ந்தேன். ஏதோ ஒரு கடனில் ஒரு பகுதியை திரும்பக் கொடுத்தைப்போன்று மனதில் ஒரு நிம்மதி.   திரௌபதி அம்மன் சிவந்த முகத்துடன் கோபம் கொப்பளிக்க நின்றுகொண்டிருந்தார். ஆண்களால் ஆண்டாண்டு காலமாக அடக்கப்படும், அவமதிக்கப்படும் பெண்ணிணத்தின் பிரதிநிதியென அம்மன் இருப்பதைப்போல் தோன்றியது. ஆணிணத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் நான் கைகூப்பி மன்னிப்பு கேட்டு தண்டனை நாடி அந்த அடிகளை வாங்கிக்கொண்டேன் எனச் சொல்லலாம்.
    

 நாம் எத்தனை எத்தனை   பிழைகள் செய்கிறோம். “குருதிப்பிழை, வஞ்சப்பிழை, களவுப்பிழை, பெற்றோர்பிழை, ஆசிரியர்பிழை, பெண்பிழை, பிள்ளைப்பிழை என பிழைகள் ஏழு"  என   வெண்முரசு  சொல்கிறது.  அது   தன் உயிரைப் பயணம் வைத்து பிரபாச தீர்த்தத்தில் நீராட செல்லும் பக்தர்களையும்  காட்டுகிறது.    எவருக்கும் தெரியாது என நினைத்து பல தவறுகளை செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் நம்முள்  வாழும் பிரபாசர். கையில் துலாக்கோலுடன் இருந்து நம் செய்கைகளின் அறத்தை நிறுத்துக்கொண்டு இருக்கிறார். அவரை நாம் அறிவோம்.  அவரின் அறக்கோபத்த்ற்கு அஞ்சுகிறோம்.

 பிரபாசதீர்த்த யாத்திரை அளவுக்கு இல்லையென்றாலும் இன்றும் உயிரைப் பணயம் வைத்து சிரமமான பாதையில் பக்தி யாத்திரை செல்லும் பலரைப்பார்க்கலாம். பக்தர்கள் தம்மை சிரமத்திற்கு உள்ளாக்கிக்கொள்ளும் பல சடங்குகளை மேற்கொள்கின்றனர். அலகு குத்திக்கொள்ளுகிறோம்.முதுகில் கொக்கிமாட்டி அதில் கயிறுகளை கட்டி பெரிய எடைமிகுந்த  வண்டிகளை இழுக்கிறோம்.  கத்தியால் உடம்பில் அடித்துக்கொள்கிறோம். காடுகளிலும் மலைகளிலும் மிகச் சிரமமான யாத்திரை மேற்கொள்கிறோம்.  இந்த அறிவியல் யுகத்திலும் நாம் இவற்றை தொடர்வது, ஒருவகையில் தெரிந்தும் தெரியாமல் தாம் செய்தபல தவறுகளுக்கு பிராயச்சித்தம் என்பதை  நம் ஆழ்மனது அறிந்திருக்கிறது என்பதை குறிக்கிறது என நான் கருதுகிறேன்.

தண்டபாணி துரைவேல்