Thursday, November 19, 2015

தேரோட்டி - 27.



இனிய ஜெயம்,


ரிஷபர், ரைவதக்கர், இருவரைக் காட்டிலும் அரிஷ்ட நேமி அகம் திகைத்து சிதறி மெய்ம்மை நோக்கி அடி வைக்கும் சித்திரம் இன்னும் உக்கிரமாகத் திகழ்கிறது.

ரிஷபர் காமத்திலிருந்தும், ரைவதக்கர் வன்முறையின் உச்சத்திளிரிருந்தும் மெய்ம்மை நோக்கி அடி எடுத்து வைக்கிறார்கள்.  அரிஷ்ட நேமி இன்னும் ஒரு படி மேல். குருதி என்றானபின், உயிர் வதை என்றானபின் அதில் மனிதன் என்ன மாக்கள் என்ன? 

தன் முன் விழும் முதியவரையும் ஆட்டையும் ஒரே போல மென்மையாக பற்றி விலக்குகிறது சுப்ர தீபம் . எவ் வுயிர்க்கும் நல்லான் மீது நின்று மெய்ம்மை எய்தும் நேமி நாதர்.

குகைக்குள் முதுகு ஓடிய அமர்ந்து தந்து சித்தத்தின் விருத்தியை தடுக்கும் நேமிக்கும், சுப்ரதீமம் மீது விஸ்வரூபம் கொண்டெழுந்து திசைகளை ஆடையாகப் பூணும் நேமிக்கும் இடையே எத்தனை பண்பு பேதம்.

தனது சிகையை குருதி கசிய தானே பரித்தெரிவதன் வழியே நேமி தனது ஆன்மாவை எதிலிருந்து விடுவிக்கிறார்?

அந்த கணம், ஒரே ஒரு கணம், நீலனை, வென்ற கணம், அவனது துணையை, துவாரகையை வெற்றி கொண்ட கணம். அந்த ஒரு கணம் இத்தனை குருதி குருதி கொண்டே சமன் செய்யப் படவேண்டும் எனில் அது என்ன ஊழின் நியதி?

அரண்மனை அணங்கு பற்றிய சம்படைக்கு வேண்டியது என்னவோ அதை நீலன் அளிக்கிறான். நேமி காணவேண்டியது எதுவோ அதை நீலன் காட்டுகிறான். கதிமோட்சம். கேட்டவர்க்கு கேட்டபடி  வந்த கண்ணன்.

எளிய மனிதர்களின் குருதி படிந்த நீரை அருந்தி துவங்கிய பயணம், எளிய உயிர்களின் குருதியில் குளித்து நிறைகிறது.
 
கடலூர் சீனு