Sunday, November 22, 2015

நுழைவு

ஜெ

வெண்முரசில் சுபத்திரை தேரோட்டிச்செல்லும் அந்த சேஸிங் காட்சி ஒரே சமயம் ஒரு சாகசம் போலவும் இன்னொரு சமயம் பெரிய குறியீடு போலவும் இருந்தது. அவர்கள் கடைசியில் அதைப்பற்றிப்பேசிக்கொள்ளும்போது தெரிகிறது அது வெளியேற முடியாத கோட்டை என்று. அத்தனை ஓட்டமும் திரும்பி வருவதற்காகத்தான் என்று. அப்படிப்பார்க்கும்போது அது யோகத்தில் அமர்பவன் சுற்றிச்சுற்றி வரும் லேப்ரிந்த் தான்

அதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். உண்மையிலே அந்த லேப்ரிந்தில் பிறவி யோகிகள் தவிர எவருமே வெளியேறித்தப்பமுடியாது என்று நினைக்கிறேன். யோசித்துப்பார்த்தால் ஆழி, பவசக்கரம், பிறவிச்சுழல் என்றெல்லாம் எல்லா மதங்களும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படுகிறது

ஒரு கார்ட்டூன் சித்தரிப்பு போல விஷுவலாக உள்ள இந்த பகுதியை ஏழெட்டுமுறை படித்தேன். வழி இடுங்கிக்கொண்டே போவதும் திரும்பியும் பெரிய வழிக்குள் வழுவதும் கடைசி வெளியேற்றமும் அதன்பின்னர் அது வெளியேற்றமே இல்லை ஒருவகையில் திரும்பிவருவதும்தான் என்று தெளிவு வருவதும் பயம் தருகிறது. அர்ஜுனன் இத்தனை கஷ்டப்பட்டு துவாரகையின் மருமகனாக உள்ளே நுழைந்திருக்கிறான் இல்லையா?

சுவாமி.