Thursday, December 31, 2015

பீஷ்மரும் கர்ணனும்

:


இன்று கர்ணனின் மணத்திற்கு தடை போடும் பீஷ்மர் அவனை வெறுக்கிறாரா? நிச்சயம் இல்லை. பானுமதி தன் முடிவைத் தெரிவித்தவுடன் அவளை நோக்காமல், “இரு இல்லமகள்களும் உளம் ஒத்துச் செல்ல வேண்டும்” என்று கூறுமிடத்தில் வாழ்வின் அபத்தங்களைப் பார்த்துப் பார்த்துச் சலித்து, தன் பெயரனுக்கு நேரச் சாத்தியமான ஒரு துயரில் இருந்து மீட்க விழையும் ஒரு முது தாதையாகவே எழுகிறார்.

வெண்முரசு முழுவதும் வரும் விவரணங்களில் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் மட்டும் ஒரே வகையான வர்ணனைகள் மீளும். ஏனெனில் இருவரும் கிட்டத்தட்ட ஒரே உயரம். இருவருமே ஓங்கி உலகளக்கும் உத்தமர்கள். ஒருவர் தன் அலைவுகளை எல்லாம் கடந்து விட்டவர். மற்றொருவர் இப்போது தான் அலைவுகளில் சிக்குண்டிருக்கிறார். அவர்கள் இருவரையும் காணும் யாவரும் வியப்பது அவர்களின் உயரத்தை. அதன் பிறகு உணர்வது அவர்களின் நடையின் வேகத்தை. பெரும்பாலும் இவர்களிடம் உரையாடும் அனைத்து கதாபாத்திரங்களும் இவையிரண்டையும் உணர்வதாகவே வெண்முரசு சொல்கிறது. ஆயினும் மிக நுட்பமான ஒரு வேறுபாட்டையும் அந்த விவரணைகளில் நிகழ்த்துகிறது.

பிரயாகையில் ஒரு இடம். வாரணவத எரியூட்டல் நிகழ்விற்குப் பிறகு முதல் முறையாக பீஷ்மர் அஸ்தினபுரிக்கு வருகிறார். அதை வெண்முரசு, “பீஷ்மர் நடந்தபோது அவரது தலை அரண்மனையின் உத்தரங்களை தொட்டுத்தொட்டுச்செல்வதுபோல விதுரருக்குத் தோன்றியது. நீளமான கால்களை இயல்பாக எடுத்துவைத்து பீஷ்மர் நடந்தாலும் உடன்செல்ல விதுரர் மூச்சிரைக்க ஓடவேண்டியிருந்தது.” என்று சொல்கிறது. அதே விதுரர் இன்று கர்ணனிடம் அவை நிகழ்வுகள் முடிந்து பேச வரும் நிகழ்வை வெண்முரசு, “அவனது நீண்ட காலடிகளை எட்டிப்பிடிக்க அவர் ஓடுவது ஓசையில் தெரிந்தது” என்கிறது. அவனிடமும் உரையாடும் முன் விதுரர் மூச்சிரைக்கிறார்.

பீஷ்மர் தனது அறக் குழப்பங்களில் நிலைத்த தன்மையை அடைந்து விட்டார். எனவே அவர் உள்ளத்தாலும் நிமிர்ந்து விட்டார். ஒவ்வொருவருக்கும் மூன்று வகை உயரங்கள் உண்டு. ஒன்று அவர்களின் உடல் தரும் உயரம். இரண்டாவது அவர்களின் ஆளுமை காரணமாக அவர்கள் தங்களுக்குள் உணர்ந்து கொள்ளும் உயரம். மூன்றாவது அவர்களின் ஆளுமையாக மற்றவர் உணர்ந்து அவர்கள் அளிக்கும் உயரம். இதில் அந்த இரண்டாவது உயரமே அவர்களின் உடல் மொழியையும், மூன்றாவது உயரத்தையும் தீர்மானிப்பது. (பெண்கள் உயர் குதிகால் காலணிகளை விரும்புவதற்கு இந்த இரண்டாவது உயரத்தை உயர்த்திக் கொள்ளவே. இந்தியாவில் சராசரிக்கும் அதிகமான உயரம் உள்ள பெண்கள் பெரும்பாலும் உயரமற்ற காலணிகளையே அணிவதும் இந்த இரண்டாவது உயரத்தைக் குறைத்துக் கொள்ளவே.) அவ்வகையில் பீஷ்மரின் உடல் அளிக்கும் உயரமும், உள்ளம் அளிக்கும் உயரமும் ஒன்றே. எனவே அரண்மனை உத்தரங்கள் அவர் தலையைத் தொட்டுத் தொட்டுச் செல்வதாக வெண்முரசு சொல்கிறது.

ஆனால் கர்ணன் தன் உள்ளத்தில் உணரும் உயரம் இன்னும் உடல் தரும் உயரத்தை நெருங்கவில்லை. அவன் இன்னும் அலைகழிப்புகளில் உழல்பவனாகவே இருக்கிறான். எனவே ‘அவன் தலையை அறைவது போல் எழுந்தெழுந்து வந்து கொண்டிருந்தன சம்பாபுரியின் தொல் மாளிகையின் உத்தரக்கட்டைகள்’ என்று அதே உத்தரக்கட்டைகள் அவனை அறைவதாகச் சொல்கிறது வெண்முரசு. மேலும் அவன் அந்த அரண்மனை எங்கிலும் குனிந்தே இருக்கிறான் என்றும், தனியறையில் மட்டுமே நிமிர்ந்திருக்கிறான் என்றும் சொல்கிறது. தன்னை மொத்தமாக உணர்ந்து திரட்டிக் கொள்ளும் போது அவன் எங்கும் நிமிர்வான். சந்தேகமேயில்லை ஒவ்வொரு சொல்லிலும் வெண்முரசு காவியம் தான்!!!