Thursday, March 10, 2016

கொந்தளிப்பான மனநிலை

அன்புள்ள ஜெமோ,

கொந்தளிப்பான மனநிலையிலேயே வெய்யோன்  நிகழ்ந்தது என்று கூறியிருந்தீர்கள். நானும் கொந்தளிப்பான மனநிலையிலே தான் வாசித்தேன். குறிப்பாக காண்டவ வனநிகழ்வை ஒரு அங்கத நாடகமாக அந்நிகழ்வைப்பார்த்துப்பின் அதை நாகர்களின் மொழியாக அதையே கேட்கும் பகுதியை வாசிக்கும் நேரம் இன்றும் எளிய மக்களின் உயிர் அருந்தி அடங்காத வலியோர்களின் குரலே அங்கதமாக உரத்து ஒலிக்கும் வக்கிரம் என்னுள் மிகுந்த கசப்பை ஏற்படுத்தியது. கர்ணனைப்போல என்னால் எளியோரின் கண்ணீரைப்பினதொடரமுடியவில்லை என்று எண்ணும்போது மேலும் வருத்தமடைந்தேன். பின்னர் துவாரகையைக்கொண்ட கடலின் கொந்தளிப்பு காண்டவ வனத்தில் எரிந்த தாய்களின் கண்ணீர்த்திரளே என்று சமாதானமடைந்தேன்.

முன்பு நிகழாது நின்ற காண்டவம் கர்ணன் பின்தொடர்ந்த கண்ணீராக விளைந்தது ஒரு வாசகனாக மிகவும் நிறைவளித்தது. வியாசனின் மானச புத்திரனின் கதை அவரே மெச்சும் வண்ணம் அமைந்தது தற்செயல் அல்ல. அது உங்களுக்குக்கிடைத்த வரம்..

அதைப்படித்தது எனக்குக்கிடைத்த வரமன்றி வேறேது?

நன்றி,
ஜெய்கணேஷ்