Monday, April 11, 2016

ஆடை கிழிந்துபோதல் (பன்னிரு படைக்களம் - 15)


        ஒருவர்  கம்பீரமாக  தெரிகிறார். ஆண்மை மிக்கவராக, பலம் வாய்ந்தவராக தூய்மையானவராக,  தென்படுகிறார். எதோ ஒரு காரணத்தால அவர் உடை கிழிந்து அவர் உடல் தெரிகிறது. அப்போது நாம் காண்பது அவர் தேமல் நிறைந்த, சரியான உடற்பயிற்சி இல்லாததால் தளர்ந்த தசைகளோடு வேர்வை வாடையுடன் கூடிய அழுக்கு உடலை நாம் காண்கிறோம். முதலில் நாம் கண்டது அவர் ஆடையால்  அவர் அடந்திருந்த தோற்றத்தை.   அவர் மட்டும் அப்படியல்ல. நாமனைவரும் அதைப்போல்தான் நம் உடலின் குறைகளை நாம் ஆடையால் மறைத்துக்கொள்கிறோம்.  தளர்ந்த உடலை பெரிய வயிற்றை மெலிந்த அல்லது கொழுத்த அங்கங்களை நம் ஆடையால திறமையாக மறைத்துக்கொண்டு நம்மைப்பற்றிய ஒரு அழகிய சித்திரத்தை அளிக்க முற்படுகிறோம்.
   இதைப்போலவே நாம் நம்முடைய, சுயநலத்தை, பேராசையை , சிடுசிடுப்பான தன்மையை, முன்கோபத்தை, பணிவின்மையை, அகங்காரத்தை, காமத்தை எல்லாம் பொதுவெளியில் மறைத்துக்கொள்ள முற்படுகிறோம். அனைவர் கண்களுக்கும் நாம் பணிவுள்ள பெருந்தன்மையான, நற்குண கனவானாக காட்டிக்கொள்ள விழைகிறோம்.. அதற்காக நாம் விரும்பியும் விரும்பாமலும்  ஒரு கனத்த நற்குண அங்கியை மேலணிந்துகொள்கிறோம். அது நம்மை சிறந்த  கம்பீரமிக்க விரும்பத்தகுந்த மனிதனாக சமூகத்திற்கு காட்டுகிறது. சமூகத்தில் யார் கண்ணுக்கும் தெரியாமல் நம் உண்மை உடலை இவ்வாறு மறைத்துக்கொள்கிறோம்.
   ஆனால் ஒரு இக்கட்டில், நம் மனம் கட்டுப்பாட்டை இழந்து எரிச்சல் பெருகுகையில், ஆசைவயப்பட்டு தன்நிலை மறக்கையில், கொடும் வறுமையில், ஏதாவது கடுமையான உடல் வருத்தத்தில், பெரும் சோகத்தில், அதீத களிவெறியில், நாம் அற்பமென நினைக்கும் எளியவர் எதிரில்,    இந்த நற்குண அங்கி கிழிந்து நம் உண்மைக் குணநலன் உருப்பெருக்கப்பட்டு  வெளியில் தெரியவரும்.  அதை காணும் பிற நபர்களுக்கு அது அதிர்ச்சியை அளிக்கும்.
   பிருகத்ரதன் அரசன், அணிகை அன்னதை ராஜ மாதாக்கள், மற்ற நான்கு பேரும் இளவரசர்கள். அதற்கான ஆளுமைகளை குணங்களைக்கொண்டவர்களாக அவர்கள் தம்மை வெளிக்காட்டிக்கொண்டவர்கள். ஆனால் உயிருக்கு பயந்து இருளான சுரங்கத்தில் தவழ்ந்து செல்லும் நிலையில்  அவர்களின் இந்த  அலங்கார அங்கிகள் கிழிந்துபோக அவர்களின் அழகற்ற உண்மையுடல்கள் தெரிகின்றன. அவர்கள் முறைமைகள், பொறுமை, அன்பு, அக்கறை எல்லாம் குறைந்துபோய்  ஒருவரை ஒருவர்  கடிந்தும் இழித்தும் பேசிக்கொள்கிறார்கள்.  இக்கட்டுகளில்  காணும் மனிதர்களின் இந்த உளவியல் வெளிப்பாடு  மிக அழகாக இன்று வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கிறது.

தண்டபாணி துரைவேல்