Saturday, April 23, 2016

குந்தியின் அகம்




பரமஹம்ச யோகானந்தர் தனது குருதேவர் யுக்தேஸ்வரர் முன்னால் பாடம் கேட்டுக்கொண்டு இருக்கும்போது தன்னை கடிக்கும் கொசுவை அடித்து கொல்ல நினைக்கும்போதே பதஞ்சலி முனிவர் சுட்டும் அகிம்சையை நினைத்து அதை கொல்லாமல் விடுகிறார். இதைக்கவனித்த  யுத்தேஸ்வரர் யோகானந்தரின் எண்ணத்தை படித்து “நீ அதை மனதினில் கொன்றுவிட்டாய்” என்கிறார்.

மற்றொரு முறை குருவின் பாடத்தை ஆடாமல் அசையாமல் கவனிக்கும் யோகானந்தரைப்பார்த்து “நீ இங்கில்லை” என்கிறார் குரு. “இல்லை குருவே, நான் அசையாமல் இமைக்காமல் உங்கள் பாடங்களை கவனிக்கிறேன். நான் கவனித்ததை உங்களிடம் திருப்பிச்சொல்ல முடியும்” என்று வாதிடுகிறார் யோகனந்தர். ஆனால் யோகனந்தரின் மூன்றாவது நான்காவது மன அடுக்கில் அந்த எண்ணம் எழும்போதே குருதேவர் கவனித்துவிட்டார் என்று சொல்கிறார். 

மனிதன் பேசுவது சொல்வது மட்டும்தான் அவன் மனம் என்று நினைக்கிறோம் அதற்கும் அடுத்தப்படியில் உள்ளத்தில் அசைப்போடுவது அவன் மனம்தான். சராசரியாக மனிதன் இந்த இரண்டு நிலைகளை அறியமுடியும் அதற்கும் கீழ்நிலை மனத்தில் என்ன இருக்கிறது என்பதை எண்ணம் உதிக்கும் மனிதனும் எண்ண முடிவதில்லை. யோகனந்தர் போன்றவர்களுக்கே யுக்தேஸ்வரர் போன்ற ஞானக்குரு காட்டிக்கொடுக்க வேண்டி உள்ளது.

சூரசேனனின் மகளாக பிறந்து பிருதையாக வளர்ந்து குந்திபோஜனுக்கு மகளாக சென்ற குந்தியின் மனதில் என்ன உள்ளது என்பதை அவள்கூட அறிய முடியாது என்பது ஞாயம்தான்.

ஐம்புலன்களி்ன் வழியாக உள்ளுக்கு சென்று சேர்ந்துக்கொண்டே இருக்கும் நினைவுகளின் அடுக்குகள் அவற்றை மூடி மறைக்கின்றன ஆனால் அவைகள் விதைகளாக உள்ளன. அதற்கான சூழ்நிலை பருவநிலை வாய்கும்போது முளைத்துவிடுகின்றன. இவனா இப்படி? இவளா இப்படி? சொல்ல முடியவில்லை.

ஒவ்வொரு நெஞ்சுக்குள்ளும் எண்ணிறைந்த எண்ணவிதைகள் உள்ளன அதில் எது வீர்யம் கொள்கிறதோ, எது சூழ்நிலையில் நனைகிறதோ, எது பருநிலையில் தாக்குபிடிக்கிறதோ அது முளைக்கிறது.

யாதவகுலத்தில் பிறந்து கன்று மேய்க்கும் காலத்தில் முன்னோர் சென்ற வழியில் செல்லாமல் புதிய வழியில் செல்ல நூல் எடுத்தவன் வசுதேவன் அங்கு புதிய பாதையை காண்கின்றாள் பிருதை, புதிய கனவு உலகம். குந்திபோஜனுக்கு மகளாகி அங்கு ராஜசுகம் என்ன வென்று அறிந்து, துர்வாசரால் ஆன்மிக உலகுக்குள் நுழைந்து, பாண்டுவால் அரசியாகி, அரசியல் சுவைக்கண்டு, குழந்தைகளால் பாரதவர்ஷத்தை ஆளும் கனவுக்காண்பது என்பது இயற்கைதான். இயற்கையும் குந்திக்கு ஒத்து உழைக்கிறது இதை அதிர்ஷ்டம் எனலாம் கரும வினை எனலாம் மேதமை எனலாம். ஆனால் தனது மகன் தருமன் ராஜசுயவேள்வி செய்து சத்ராஜித்தாக நினைக்கையில் அங்கு சத்ராஜித்தாக கர்ணன் அமரவேண்டும் என்ற எண்ணத்தை குந்திக்கொள்வதுதான் எண்ணங்களின் வலிமை. விதையின் மேல் ஒரு விதை முளைப்பது என்பது எண்ணகள் விதையாகும்போதுதான். 

குந்தி தனது அகத்தை பாண்டவர்களுக்காக ஒரு நடிப்பும் கர்ணனுக்காக ஒரு நடிப்பும் நடித்துக்காட்டுகிறாள். பெண்ணால்தான் முடியும் ஒரே நேரத்தில் முதியவளாகவும் குழந்தையாகவும் இருக்க அல்லது மேதையாகவும் பேதையாகவும் இருக்க.

எண்ணங்களை அகழ்ந்து அகழ்ந்து சென்று அடியாழத்தில் கிளைக்க கிளைக்க அதில் தாவி அமர்ந்துக்கொள்ள குந்தியின் வாழ்வில்தான் எத்தனை எத்தனை கதவுகள்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்  
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை
     போசாதிருக்கவேண்டும்
பெருநெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமானபேய்
     பிடியாது இருக்கவேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
     மறவாதிருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
     வாழ்வுநான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
     தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச்சைவமணி
சண்முகத் தெய்வமணியே –வள்ளலார்.


ராமராஜன் மாணி்க்கவேல்.