Monday, April 18, 2016

கதைகளின் உலகம்



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 

 நான் உங்கள் தளத்தை தொடர்ந்து வாசிக்கும் எளிய வாசகன். எனக்கு மிகவும் பிடித்தது அறம் சிறுகதைகள், புறப்பாடு, பயணக் கட்டுரைகள், கீதை மற்றும் நகைச்சுவை(நான் உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கீழைத்தத்துவ அறிஞர் ஜெ.சைதைன்யாவின் மிகப்பெரிய விசிறி).
நீங்கள் வெண்முரசு எழுத ஆரம்பித்த பொழுது ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அந்த மொழியின் அடர்த்தி, நேரமின்மை காரணமாக தொடர்ந்து படிக்க இயலவில்லை..வெண்முரசு தொடர்பான கடிதங்களை படிக்கும் பொழுது, இதை படிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. ஆனால் பன்னிரு படைக்களம் மார்ச் 26 ஆம் தொடங்கும் என்ற அறிவிப்பை படித்த பொழுது இந்தமுறை விடக்கூடாது என்று விடாமல் படித்து வருகிறேன்.

என் எட்டு வயது மகளுக்கு இரவு உறங்க செல்லும் முன் கதை சொல்லுவது வழக்கம். பெரும்பாலும் கதையை விட கதை நடக்கும் களத்தைப் பற்றிய விவரங்கள், சுவாரசியமான, வித்தியாசமான தகவல்கள் அதிகமாக இருக்கும். கதை மாந்தர்களையும், களத்தையும் அவளாக உருவகப்படுத்தி பார்க்கச்செய்வேன்.

பன்னிரு படைக்களம் படித்த பிறகு, ரக்தபீஜனின் கதையை இதே பாணியில் சொன்னேன். ரக்தபீஜன் அரண்மனையில் பொருத்தப்பட்ட ஆடிகளில்  பார்த்து தான் ஒருவன் அல்ல ஆயிரம் பேர் என எண்ணுதல், அவனது ஒவ்வொரு குருதித்துளியிலிருந்து வரும் ரக்தபீஜன்கள், இந்திரனின் மின்படை, ஏழுலகங்கள், அதில் இருப்பவர்கள், அன்னைக்கும், ரக்தபீஜனுக்கும் நடக்கும் போர் எல்லாவற்றையும் சொன்னேன். மறுநாள் காலை எழுந்ததும் ரக்தபீஜனின் கதையை திரும்ப சொல்லுங்கள் என்று கேட்டது ஆச்சரியமாக இருந்தது. எப்பொழுதும் சொன்ன கதையை திருப்பி சொன்னால் உங்களுக்கு வேறு எதுவும் தெரியாதா என்று கேட்பாள். ரக்தபீஜனுக்குப் பதிலாக சிறு ராமாயண, மகாபாரத கிளைக்கதைகளை சொன்னேன்.

அதன்பிறகு ஜராசந்தனின் சுருக்கப்பட்ட, எளிய கதை வடிவத்தை சொன்னேன். அந்தக் கதையில் உள்ள அத்தனை ரத்தமும் துடைக்கப்பட்ட வடிவம்.. செங்குத்தாக பிளந்து பிறந்த இரு குழவிகள்,ஒரு குழவியைக் கவ்விய சிறுத்தை, அதில் வழிந்த ரத்தத்தை உறிஞ்சும் இன்னொரு குழவி, அதிலிருந்து வளரும் ஜராசந்தன் போன்றவற்றை படிக்கும் பொழுது எனக்கே அது மிகவும் கனமாக இருந்தது. அதனால்தான் எளிமைப்படுத்தப்பட்ட கதையை சொன்னேன். இதற்கடுத்து வரும் கதைகளை சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
பன்னிரு படைக்களம், மற்ற வெண்முரசு புத்தகங்களைப் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. அனைத்து புத்தகங்களையும் வாங்க முயற்சி செய்து வருகிறேன்.
என் மகளுக்கு மகாபாரதத்தை விரிவாக அறிமுகப்படுத்த உதவிய உங்களுக்கு மிக்க நன்றி..
எல்லாவற்றிற்கும் மேலாக பரபரப்பான வாழ்க்கை முறையில் இருந்து தினமும் ஒரு மணி நேரம் வேறு உலகத்துக்கு கொண்டு செல்லும் உங்கள் எழுத்து பணி சிறக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
ந.அழகர் ராஜ்.

அன்புள்ள அழகர்ராஜ்

நீங்கள் வெண்முரசின் முந்தைய நாவல்களிலுள்ள அத்தியாயங்களின் கதைகளை குழந்தைகளுக்குச் சொல்லலாம்

குழந்தைகளுக்கான கதைகளில் சாகசம் வேகம் இருக்கலாம். எதிர்மறைப்பண்பு இருக்கலாகாது

பன்னிருபடைக்களம் அப்படிப்பட்டதல்ல

நன்றி

தொடர்ந்து வாசியுங்கள்

ஜெ