Saturday, August 27, 2016

அந்தணர் என்போர்

இன்றைய வெண்முரசில் மனதைத் தொட்ட அருமையான வரிகள்

அந்தணனாகப்  பிறந்த எவனும், அறியாமல் அகந்தையுடன் பிறப்பினால் தான் மற்றோரை விட உயர்ந்தவன் என தருக்கும்போது படிக்க வேண்டிய வரிகள்:

"அந்தணன் விதைக்கவும் காக்கவுமே கடமைப்பட்டவன், அறுவடையை செய்வான் என்றால் அவன் சூத்திரனாவான். களஞ்சியம் நிறைப்பான் என்றால் வைசியன் ஆவான். கோல்கொண்டு அதை காக்கையில் ஷத்ரியன் ஆவான். பசித்தவருக்கு பகிரமறுத்தான் என்றால் வருணமற்றவன் ஆவான். ஒருபோதும் தன் அந்தண்மையை மீண்டும் அடையமாட்டான்"

ஏதோ ஒரு பிணைப்பை உணர்கிறேன். உன் சொற்கள் மூலம் நீ என்னுடன் ஒரு நண்பனாக, ஆசிரியனாக மிக எளிதாக உரையாடுகிறாய். . நோயின்றி நீண்ட நாள் நீ வாழ ஆண்டவனைப்  பிரார்த்திக்கிறேன். 

அன்புடன்,

ராம்  நடராஜன்
 
 
 
அன்புள்ள ராம் அவர்களுக்கு
 
அது ஒரு நடைமுறை என்பதை விட அந்தணன் என்னும் இலட்சிய உருவகத்தை முன்வைக்கும் ஒரு முயற்சி. அந்த உருவகம் பலவகையிலும் மகாபாரதத்தில் உள்ளது. சங்க இலக்கியம் முதல் தமிழிலக்கியங்கள் அனைத்திலும் உள்ளது ‘அந்தணன் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் சென்ந்தண்மை கொண்டுஒழுகலான்’ என குறள். அதை தங்கள் வாழ்வென எடுத்துக்கொண்டு வாழ்ந்து நிறைவடைந்த பல்லாயிரம்பேர் இங்கு இருந்துள்ளனர். ஆனால் அதை அனைவருக்குமான மாறா நெறியாக வைக்கமுடியாது. இலட்சியமே ஒழிய அது ஒழுக்கவிதி அல்ல
 
ஜெ