Wednesday, August 24, 2016

காவியம்





அன்புள்ள எழுத்தாளருக்கு...

“காவியம் மூன்று பக்கங்களைக் கொண்டது என்று நினைக்கிறேன். கிருஷ்ணபக்ஷம்
சுக்லபக்ஷம் பூர்ணிமை. இருள்நிலவுப்பகுதியும் ஒளிர்நிலவுப்பகுதியும்
நீண்டவை. முழுநிலவோ ஒரே ஒரு நாளுக்குமட்டும்தான்…அதை அதிகம்பேர்
பார்ப்பதே இல்லை.”

(‘முதற்கனல்’ – 33)

கிருஷ்ணபக்‌ஷம் என்றால் தேய்பிறை. சுக்லபக்‌ஷம் என்றால் வளர்பிறை.

இறுதியில் அடையப் போகும் வெளுத்த உடல் கொண்டு பிறந்தவன் பாண்டு.
அன்னையின் கைவிளையாட்டுப் பாவையாக வளரத்துவங்கி முழுக்க முழுக்க மனமும்
உடலும் வெளுத்து வெண்மையான பெளர்ணமியாக அடங்கினான்.
மனத்தில் முழுக்க முழுக்க அறத்தின் மீது நின்று வளர்ந்து வந்த
தார்ஷ்டிரன் மைந்தன் மேல் கொண்ட கடும் பாசத்தின் திரை விழ விழ, இருண்டு
கொண்டே போகிறான். விதுரன் முழுமையாக அவனை அறிந்த போதில் பெளர்ணமியாக
இருந்த தார்ஷ்டிரன் முற்றிலுமாக கருநிலவாகி இருக்கிறான்.
பெளர்ணமியாகவே பிறந்து, பெளர்ணமியாகவே வாழ்ந்து வருபவன் விதுரன்.

பாண்டு முழுப் பெளர்ணமியாக ஆகப் போவதன் அடையாளமே விதுரனை
விரும்புவதாலும், பிருதையை அறிந்ததாலும். அவன் விதுரனே என்பதால், தருமன்
விதுரனை தந்தை என்று சொல்வதாலும், குந்தி விதுரன் சொல்லை தந்தை சொல்லாக
எண்ணச் சொல்வதாலும் அறியலாம்.

மூவரையும் நிலவின் மூன்று கட்டங்களாகப் புரிந்து கொண்டால், வியாசர்
சிவையிடம் கூறும் அவ்வாக்கியத்தின் பொருத்தத்தை உணரலாம்.

என்றாவது முழுக்கப் படித்து முடித்து விட்டோம் என்ற ஆணவநிறைவை வெண்முரசு
தரப்போவதேயில்லை.

நன்றிகள்.
இரா.வசந்த குமார்.