Monday, August 22, 2016

வட்டம்



வெண்முரசின் தனித்துவமான கதைகளில் முக்கியமானது சொல்வளர்காடில் வரும் யக்ஞவால்கியரின் கதை. உண்மையில் இது அவரின் கதை என்று சொல்வதை விட ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற ஆப்த மந்திரத்தின் கதை என்றே சொல்லலாம். அவ்வகையில் பார்த்தால் சொல்வளர்காடு கொண்டிருக்கும் ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு ஆப்த மந்திரந்தின் கதைகளே. தத்வமஸியில் துவங்கியது இவை.

நான்கு அத்தியாயங்களாக நீண்டுள்ளது யக்ஞ்யவால்கியரின் கதை. இக்கதையை வாசித்துக் கொண்டிருக்கையிலேயே மனதில் ஒரு வடிவம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. அது வட்டம். ஆம், வடிவங்களிலேயே முழுமையானது வட்டமும், அதன் பரிமாண நீட்சிகளும் தான். பிற எந்த வடிவங்களும் தம்முடன் மோதும் விசைகளுடன் எதிர்வினை புரிந்து இறுதியில் அவ்விசைகளுடன் ஒரு ஒத்திசைவை அடைகையில் வட்டத்தின் ஏதேனும் ஒரு உருவத்தை எடுத்திருக்கும். வட்டத்தின் ஒவ்வொரு கணுவும் ஒரு வட்டமே!! அதைப் போன்றது தான் இந்த தத்துவமும் – நானே பிரம்மம். மிக எளிதாகச் சொல்லிவிட இயலும். உணர்ந்து கொள்ள இயலுமா?

அதை சூரியர் உணர்ந்து கொள்ளும் விதம் முக்கியமானது. அவர் சென்று சேரும் காட்டின் உணவுச் சங்கிலி மிக வித்தியாசமானது. அங்கே கீரி இருக்கிறது, பாம்பு இல்லை. எலி இருக்கிறது, பூனைகள் இல்லை. முயல் இருக்கிறது அதைக் கொள்ளும் எந்த விலங்கும் இல்லை. அப்படியென்றால் அது கட்டற்ற விழைவுகளின் பூமி. அனைத்தும் பெருகிக் கொண்டே இருக்கவேண்டும். அப்படி இருப்பதில்லை. அங்கே கட்டுப்படுத்துவதாக பூமியே உள்ளது. அவ்விடம் எவராலும் கண்டடையப்படவில்லை, எனவே பெயரிடப்படவும் இல்லை. அவ்வாறு இருப்பதால் அது இல்லையென்று ஆகிவிடவும் இல்லை. இந்த ஒரு சூழலில் தான் அவர் ஒரு குகையில் அமர்ந்து மெய்யறிதலைத் தேடுகிறார். மிக அழகாக வெண்முரசு சொல்கிறது, அவரின் உள்ளே இருந்த மானிடன் ஒவ்வொன்றையும் என்ன என்ன என்று அறியத் தவிக்கிறான், அந்தத் தவிப்பை நிகழ்த்தும் அதுவும் சேர்ந்தே தவிக்கிறது. தான் யார், தன் அடையாளம் என்ன, தன் இடம் என்ன, தான் இருக்குமிடம் என்ன? கேள்விகள்? தான் ஒருவன் மட்டுமே பதில்!! எப்படி இருந்திருக்கும்? சிந்தித்து சிந்தித்து ஒவ்வொன்றையும் பொருளாக ஆக்கி அவருக்கென்று அவரே ஒரு உலகு சமைத்து அதில் வாழ்கிறார். ஒவ்வொன்றும் தன்னிடமிருந்து, தன்னால் சுட்டப்பட்டு, தன்னால் பொருள் கொள்ளப்பட்டவை என்று அறிகையில் அவற்றிற்கும் தனக்குமான வேறுபாடின்மையை உணர்கிறார். அனைத்தும் தானே என்றறிகையில் தான் என்று வெளிப்பட்ட ஒன்றும் தானே என்ற நிலைக்கு வருகிறார். இதை அவர் சித்தம் உணர்ந்த சமயம் வெண்முரசில் அபாரமாக வெளிப்பட்டுள்ளது. இருட்குகையில் இருப்பையே துறந்து இருக்கும் சூரியரை நோக்கி வருகிறான் இளைஞனான யக்ஞன். அவன் வருகை காலத்தின் மறுபுறத்தில் இருந்து வருவது போல் தோன்றுகிறது சூரியருக்கு. காலம், அதையும் அவரே அல்லவா உருவாக்கியிருக்க வேண்டியிருந்தது அவ்விடத்தில்!! அத்தருணத்தில் அவரின் கனவுள்ளத்தில் இருந்து நினைவுள்ளத்திற்கு சொல்லாக வந்து சேர்கிறது அந்த ஆப்த மந்திரம் : “அஹம் பிரம்மாஸ்மி” – “நானே பிரம்மம்”.

இவ்வரியில் இருந்து தனக்கான வேதத்தைத் துவங்கும் யக்ஞவால்கியர் இவ்வுண்மையை எப்போது உணர்கிறார்? இறுதியில் தன் குருகுலத்தில் விடிவெள்ளியைக் காணும் தருணத்தில், அவ்விடிவெள்ளி எங்கே இருந்து வந்தது என உசாவும் நேரத்தில், “இவையெல்லாம் நானே” என உணர்கிறார். தன் ஆசிரியரைச் சந்திக்க பிரஹதாரண்யத்தின் எல்லையில் இருந்த ஓடையைக் கடந்த பொழுது கடைசியாக இருந்த இடையாடையையும் துறந்து சென்ற யக்ஞனாக, மீண்டும் எந்த உடைமையையும் எடுத்துக் கொள்ளாமல் முற்றும் துறந்து தான் கற்ற அந்த முதல் வரிக்கே மீள்கிறார். ஒரு வரியை அறிந்து அவ்வரிக்கே மீளும் ஒரு வட்டத்தின் பயணமாகத் தான் அவர் வாழ்வு மலர்கிறது. முதலில் அதை அறிந்த இளைஞனுக்கு அவை வெறும் சொல்லே. எனவே தான் அந்த கீரி மண்ணில் புதைந்து கொண்டது. இன்று முழு வாழ்வு வாழ்ந்து அச்சொல்லிற்கே மீண்டு, அச்சொல்லாகவே ஆன முதியவரை அந்த மானும் தன்னைப் போன்ற ஒன்றாகப் பார்க்கிறது.

தனிமையில் இருந்து தன்னை அறிந்த ஒருவரிடம் மெய்யறிதலைப் பெற்ற ஒருவர், அனைத்தையும் அனுபவித்து, விரிந்து பரவி, விழைந்து, வாழ்ந்து, தான் ஒரு படிவர், வேதக் காவலர் என்ற நிலையிலேயே இருந்து, விடுதலை என்பதன் வழியை அறியாமலேயே இருந்து, இறுதியாக தன் மனைவியருக்கு அந்த ஆப்த மந்திரத்தை உபதேசிக்கையில் தோன்றுகிறது உண்மையான விடுதலையின் வழி. ஆம், எந்தச் சொல் பொருளாகி நிறைந்ததோ, அப்பொருள் எல்லாம் வடிந்து சொல்லாக எஞ்சி, சொல்லாகவே ஆகையில் தான் உண்மையான மெய்யறிதல் கிட்டுகிறது. கடைசியாக எந்த சூரியரில் இருந்து துவங்கியதோ அதே போன்ற ஒரு சூரியன் கையில் அந்த குருநிலை சென்று சேர்கிறது.

இக்கதை சொல்லலே ஒரு வட்டத்தின் வடிவு தான். அனைத்து ஆப்த மந்திரங்களும் அத்தனை தத்துவ விசாரணைகளுக்குப் பிறகு வந்து சேரும் இறுதி ஆப்த மந்திரம் “அஹம் பிரம்மாஸ்மி”.
\.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்