Tuesday, August 22, 2017

வ்யாசனைக் காண வேண்டும்வெண்முரசின் நீர்க்கோலம் படித்து வருகிறேன். நளோபாக்யானம் தங்களின் நடையிலும், கற்பனையிலும் படிக்க நன்றாக இருந்தது. ஆனால் பாண்டவர் சரித்திரத்தில் நீங்கள் திரைக்கதையை வியாச பாரதத்தில் வருவது போல அமைப்பது இல்லை. கீசக வதமே சொல்லப்படவில்லை. பீமன் திரௌபதியைப் போல வேடமிட்டு கீசகனை வாதம் செய்ததும் ஒரு ஹீரோயிச மொமெண்ட். விராட பர்வத்தில் அர்ஜுனன் 6 மஹாரதர்களை வென்று அவர்களின் மேலாடையை எடுத்து வருவது சொல்லப்பட்டிருக்கும். தன்னந்தனியனாக அவன் பீஷ்மர், துரோணர், கிருபர், துரியோதனன், கர்ணன், அஸ்வத்தாமனை வென்றது குறிப்பிடத்தக்க நிகழ்வு. அவன் ஒரு கதாநாயகனாக விளங்கிய மாஸ் மொமெண்ட் அது. அலி வேடம் களைந்து தன்னை வெளிப்படுத்திய அசகாய சூரத்தனம் நிறைந்த காட்சி. அவனது நாண் இடியோசை போல ஒலித்தது கேட்டு கௌரவ படைகள் கதிகலங்கும் காட்சிகளும், துரோணர் அப்போதைய சகுனங்களை வைத்து வந்திருப்பவன் அர்ஜுனனனே என்றும், அவனே வெல்வான் என்றும் சொல்வதும் நிகழும்.. நீங்கள் அதையெல்லாம் எப்படி எழுதப் போகிறீர்கள் என்றும் ஆவலாக இருந்தேன். ஆனால், அர்ஜுனன் ப்ருஹன்னளையாகவே தொடர்ந்ததும், உத்தரன் யுத்தம் செய்ததாக காண்பித்ததும் திரைக்கதையை சப்பென்றாக்கி விட்டது..

என்னுள் உள்ள வ்யாஸனைக் கொண்டு உங்களில் உறையும் வ்யாஸனை காண ஆவல். ஆனால் முக்தனும், கஜனும், சம்பவனுமே காட்சிகளை நிறைப்பதால் ஜெயமோகனே விஞ்சி நிற்கிறார்..

உண்மையுடன்,
பிரசன்னசுந்தர் N ..

இந்திர நீலம்அனபுள்ள ஆசானுக்கு, \

நலம் தானே ? . இந்திர நீலம் வாசித்து முடித்தேன். மிக இனிமையான ஒரு கனவில் இருந்து மீண்ட அனுபவத்தை தந்தது ,கிருஷ்ணனின் உள்ளத்தில் அமர்ந்த எட்டு மனைவியரின் காதலை , காதலின் ஏக்கத்தை , துயரத்தை, காமத்தை , மிக ஆழமாக காட்டியது நாவல். நீலம் நாவலில் இருந்த கிருஷ்ணனை இது வளர்த்து எடுத்து அவனை அடுத்தக்கட்ட இறை ஆக்கி கதை வளர்வதாக எனக்கு தோன்றியது . நீலத்தில் இருந்து அவன் இந்திர நீலன் ஆகிறான் .

திருஷ்டத்யுமனனின் ஆழத்தில் அமைந்த கேள்வியில் தொடங்கிய அவன் ஆழத்திற்கே சென்றடையும் விடையில் முடிகிறது . அவனின் தேடல்கள் வழியாக கிருஷ்ணனின் மணங்களை சூதர் பாடல்களில் காட்டி செல்கிறீர்கள். அதன் மூலம் அவன் விடையை கண்டடைகிறான் . பின் சாத்யகிக்கும் அவனுக்கும் ஆன உறவு, நட்பை தாண்டி ஒரு இடத்தில் இது நிற்கிறது. இந்த நாவலின் மையத்தில் சியமந்தகமணியால் ஈர்க்ப்பட்ட கிருதவர்மனை திருஷ்டத்யுமனன் வஞ்சிக்கும் காட்சி மிக பெரும் ஒரு உச்சம் . " வெற்றி என்பது ஒரு உச்சம் என்றால் இந்த அவல நிலையும், கீழ்மையும் பிறிதொரு உச்சம்’’ என்று அவன் கூறி திருஷ்டத்யுமனனை எதன் பொருட்டும் வஞ்சிப்பேன் எந்த நெறியையும் அதன் பொருட்டு கடப்பேன் என்ற அவன் நிலை, இது பாரத போர் இறுதியில் அவனை அறம் மீறி கொல்லும் கனத்தில் முடிகிறது . இதை படிக்கும் கனம் துருபதனுக்கும் துரோணருக்கும் நடந்த வன்மன் , அம்பைக்கும் பீஷ்மருக்கும் நடந்த வன்மன் எல்லாம் உள்ளத்தில் எழுகிறது.

பின் சியமந்தகமணி மூலம் எண்மரும் மாறி மாறி ஆடும் ஆட்டம் மிக முக்கிய மானது. சியமந்தகமணியால் அக்ருரர், சாத்யகி , திருஷ்டத்யுமனன் , கிருதவர்மன் இவர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றமும் நாவலை வளர்த்தெடுப்பதோடு , அவர்களின் ஆழத்தையும் அது காட்டுகிறது. மனித மனதின் ஆழக்களையும் , அவர்களின் எல்லைகள் , கீழ்மைகள் , உள்ளத்தின் விலைவுகள் எல்லா வற்றையும் திறம்பட காட்டி செல்கிறீர்கள்.
எட்டு மனைவியரையும் கிருஷ்ணன் மணம் புரியும் விதம் மிக அழகாக விவரித்து இருந்தீர்கள். சியமந்தகமணி வழியாக அவர்களிடம் நடத்தப்படும் பூசல் அந்த மணிக்காக இல்லாமல் அந்த மணிவழியாக கிருஷ்ணனின் இதயத்துக்கு அருகில் இருக்க முடியும் என்றே எல்லாரும் அந்த ஆடலில் பங்கு பெற்றார்கள் . அதில் காளந்தியே வென்றால் . அவள் அவனை அற்றி பிறிது எதையும் எண்ணாதவல் , யோகி யாகி அவனை அடைந்தவள்.
இதை பற்றி உங்களுக்கு எழுதும் போது தேவதேவன் அவர்களின் ஒரு காதல் கவிதை ஞாபகம் வருகிறது. ( நான் கவிதைகளில் இன்னும் அதிகம் வாசிப்பு இல்லாதவன் தவறு இருப்பின் மன்னிக்கவும் .)

"நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா?
உலகிலுள்ள எல்லாவற்றையும்விட
உன்னையே நான் அதிகம் காதலிக்கிறேன்’
’அப்படியானால் உன் பிரக்ஞையில் என்னோடுகூட
எல்லாப் பொருள்களும் இருக்கின்றனவே’
அவளுக்காய் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன்
’நான் உன்னைக் காதலிப்பது மட்டுமே அறிவேன்’
’அப்படியானால் நல்லது, வா’
’……………………………………’
’வா. ஏன் அப்படியே நின்றுவிட்டாய்?’
’இல்லை. இப்பொழுது
என்னால் உன்பின் வரமுடியாது’
’ஏன்? அதற்குள் என்னாயிற்று உனக்கு?’
’இப்பொழுது
காதல் மட்டுமே என்னிடமுள்ளது.
வெறும் காதல்' " .

ஏனோ தெரியவில்லை இவ்வரிகள் நினைவில் எழுந்தன. மற்றவர்களை விட காளந்தி இப்படி தான் தனித்து நிற்கிறாள் என்று நான் புரிந்து கொள்கிறேன். அவள் பிரக்ஞையில் கிருஷ்ணன் அன்றி பிறிது எதுவும் இல்லை அதனால் தான் சியமந்தகம் வெறும் கல்லாக அவள் கையில் இருந்தது போலும் .

சிசுபாலனையும் , சுபத்திரையையும் நான் இது வரை படித்த கதைகள் வழியாகவும் , பார்த்த தொடர்கள் வழியாகவும் கட்டி எழுப்பிய சித்திரத்தை உடைத்து விட்டீர்கள். அவர்களின் ஆளுமையை புதிதாக பார்க்கிறேன் .

கிராதம் செம்பதிப்பு நேற்று முன் தினம் வந்து சேர்ந்தது , உங்கள் கையெழுத்துடன் . மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். புது பொம்மையை கண்டடையும் குழந்தையுடைய துள்ளல் என்னிடம் இருந்தது . அடுத்து மாமலர் புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்.
இப்படிக்கு ,
பா.சுகதேவ் ,
மேட்டூர்.

முக்திஅன்பு ஜெமோ சார்,
      
               கர்ணன் குந்திக்கும்,  பாண்டவர்களுக்கும்,  திரௌபதிக்கும் உலரத் துடைக்க முடியாத உறவு. அர்ஜுனனுக்கு குந்தியிடமும், திரௌபதியிடமும் பிறிதொன்றிலா நேசத்தைப் பெற முடியாமல் பிறிதொன்றாய் இடைநிற்பவன். அர்ஜுனன் களம் பல கண்டு உலகியல் வெற்றி பல பெற்றாலும் நிறைவுறாமல் தேடலுடன் பெண்களில் உழல்வதும் ,  செய்யும் பயணங்களும் ... அனைத்துமே கர்ணனைக் கடக்கத்தானே.

                  கர்ணனைக் கடக்க அவன் பற்றிக் கொள்ளும் இடம்தானே இளையயாதவன்.

       இதோ ஓராண்டாய் இவனின் பெரும் தாசனாய் இருந்தவன் மரணத் தருவாயில் அவனால் ஆட்கொள்ளப்பட்டு விழிமலர வியந்திறக்கிறான்.
                    
இதழ் கோண அவன் புன்னகைப்பது உத்தரனைப் பார்த்து மட்டுமா?
             
மற்றுமொரு கோணத்தில் சைரந்திரியின் சொல்படி வலவனின் ஒரு துளி சம்பவனென்றால்  அர்ஜுனனின் ஒரு துளிதானே முக்தன். அவனின் முக்தி கர்ணனின் அம்பினாலா?  விரிந்து கொண்டே செல்கிறது.


இரா.சிவமீனாட்சிசெல்லையா

கிளிஞ்சல்அன்புள்ள ஆசிரியருக்கு


இன்றைய வெண்முரசு மிகவும் அருமையாக உள்ளது.
"உள்ளத்தில் இசையோகிக்கு எப்பொருளும் இசைக்கலமே என்பார்கள். நான் உங்கள் கைகளில் வெறும் கிளிஞ்சல்."
மிக அருமையான வரிகள் தன் துறை சார்ந்து எழும்போது உணரும் வரிகள். அல்லது தன் சுதர்மத்தை உணரும் தருணம்.

பின் உத்திரன் அரண் நுழையும் காட்சி மிகவும் அருமையான வர்ணனை. சில நாட்கள் முன் இளையாராஜாவின் "யாருக்கு எழுதுவது" படித்தேன் அதில் ஒரு இடத்தில் அவருடைய வெற்றி எப்படி பார்க்க படுகிறது என்று கூரியிருப்பார். அந்த கனத்தில் அவருடைய மன நிலை உத்திரனின் வாள் கொண்டு அனைவரையும் வெட்டி வீழ்த்தும் மன நிலை போல் உள்ளது. இதை ஒரு குழும உளவியல் என்று எடுத்துகொள்ள முடியுமா கண்டிப்பாக இல்லை நம்மை சூழ்ந்து உள்ள ஒவ்வொருவரின் உளமும் அதுவே இல்லையா!

விராடரே மிக அந்தரங்கமாக அதையே விரும்புகிறார் இல்லையா அவனின் தாயும் இதையே விரும்புகிரார் இல்லையா

போருக்கு முன் இருந்த உத்திரன் இப்பொது இல்லை. சென்ற அத்தியாங்களில் வெளிப்பட்ட கோழை உத்திரன் இல்லை. அப்படி பார்த்தால் விராடர் இந்த தருணத்தை விட்டுவிட்டார். அந்த பாய்ச்சல் உத்திரனுக்கு கிடைத்து விட்டதே என்றெ மனம் குமைகிறார். சைந்தரி அவரிடம் பேசும்போது அவரின் எண்ணம் இப்படி என்று எனக்கு தோன்றியது.

திருமலை

அர்ஜுனன் சொல்லும் உபதேசம்

அன்புள்ள ஜெ

போர்க்களத்தில் வென்று மீண்டபின் உத்தரனுக்கு அர்ஜுனன் சொல்லும் உபதேசம் மிகவும் முக்கியமானது. வியாபாரத்தில் இது மிகமுக்கியமானது. என் மாமா இதேபோல எனக்குச் சொன்னார். வியாபாரத்தில் ஆரம்பத்தில் நாம் ஒரு உற்சாகநிலையில் இருப்போம். எல்லாவறையும் கணக்குபோட்டு குறிவைத்து அடிப்போம். ஜெயித்தபின் நாம் ஜெயிக்கக்கூடியவர்கள் என்ற எண்ணம் வந்துவிடும். கவனம் குறைந்துவிடும். வியாபாரம் போர் அடிக்கக்கூடிய விஷயம் ஏனென்றால் ஒரே விஷயம் திரும்பத்திரும்ப நிகழ்வதுதான் அது. அப்படி அது போர் அடிக்கும்போதும் அதைச் செய்வது எப்படி என்பதுதான் பயிற்சி. ஒருவர் தனியாக முயற்சிசெய்யாமலேயே அவருடையக் கைப்பழக்கத்தால் ஜெயிப்பர் என்றால்தான் அது வியாபாரம். அர்ஜுனன் அதைத்தான் சொல்கிறான். பயிர்சி எவ்வளவு முக்கியம் என்று

சந்திரசேகர்

Monday, August 21, 2017

விராடரின் மனநிலை

ஜெ

விராடரின் மனநிலையும் அவருடைய பாவனைகளும் நுட்பமானவை. ஒரு சராசரிக்குடும்பத்தின் அப்பா அம்மாக்கள் உதவாக்கரைப்பிள்ளைகளை எப்படி நடத்துவார்களோ அப்படியே இருக்கிறார்கள். அம்மா பையனை உண்மையில் உதவாக்கரை என நினைக்கிறாள். ஆனால் பொத்த்திப்பொத்தி வைத்து அவன் பெரிய ஆள் என சொல்லிக்கொண்டிருக்கிராள். அதேபோல அப்பா சாபம்போட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால் தேறிவந்துவிடுவான் என நினைக்கிறர். அவன் தேறிவிட்டான் என்றதும் அப்பா அப்படியே உடைந்து விடுகிறார். அவர் மகனை கொண்டாட ஆரம்பிக்கிறார். அவர்கள் இருவரும் சண்டைபோட்டுக்கொண்டே இருப்பவர்கள். சீப்பாகச் சண்டை போடுகிறர்கள். முதல் காட்சிமுதலே. உத்தரன் ஜெயித்துவிட்டான் என்ரதுமே கட்டிப்பிடிக்கிறார்கள். அழுகிறார்கல். எல்லா அப்பாக்களும் தன் மகனை சமூகம்தான் சிறுமைப்படுத்தியது தான் கஷ்டப்பட்டு மேலே கொண்டுவந்தேன் என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்

குமாரசாமி பெருமாள்

உத்தரனின் மாறுதல்


ஜெ

உத்தரனின் மாறுதல் எப்போதும் மேனேஜ்மெண்டில் சொல்லப்படும் ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. ஒருவனுடைய பர்சனாலிட்டியை மாற்றுவது கிரைஸிஸ் மட்டும்தான். வேறு எதுவுமே மனிதர்களை உண்மையில் மாற்றுவதில்லை. கிரைஸிஸ் வரும்போது எப்படியாவது மேலே வருவதற்காக மூளையும் உடலும் அடித்துக்கொள்கின்றன. தள்ளிவிட்டால் தானாகவே நீச்சல்வரும். வராவிட்டால் செத்துவிடுவான் என்பதும் உண்மை

மாதவன்

ரத்தவாடை

அன்புள்ள ஜெ

உத்தரன் போரைக் கண்டதுமே மாறிவிடுவது ஆச்சரியமாக இருந்தாலும் வாழ்க்கையில் ஆச்சரியம் அல்ல. வீணாய்ப்போகிறார்கள் என சில பையன்களை பார்ப்போம். சிலசமயம் ஏதேனும் தொழிலில் ஒரு ‘ரத்தவாடை’ கிடைக்கும். அப்படியே ஆளே மாறிவிடுவார்கள்.
உத்தரனைப்பற்றிய இரண்டு உவமைகள் கச்சிதம். சிம்மம் தன் குருதியால் குருதியை அறிகிறது. ஒரு நூலை ஒரே பார்வையில் வாசிப்பதுபோல அவன் ராணுவத்தைப்பார்க்கிறான். எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறான்

சண்முகம்

பிரயாகை'அன்புள்ள ஜெ,

வணக்கம். வாழ்வில்  மற்றுமொரு இனிய தருணம், தங்களோடு பகிர்ந்துகொள்ள. மகள் பிறந்திருக்கிறாள். இரண்டரை வருடங்களுக்கு முன் முதல் மகவு பிறக்கும் முன்னே பெண் பிள்ளையாக இருந்தால் 'பிரயாகை' என்பது நானும் மனைவியும் எண்ணம் காத்த பெயர். முதல் குழந்தை ஆண் மகவு.  ஆகவே பெயர் காத்து, இரண்டு வருடங்கள் கழிந்து பிரயாகை பிறந்திருக்கிறாள்.

உங்களைச் சந்தித்தும், கடிதம் எழுதியும் நாட்களாகிறது.  நேரம் ஒழிந்து வாசிப்பிற்கு செல்லும் மனதை பெரும்பகுதி வெண்முரசு ஆட்கொண்டு விடுகிறது. உங்களை வருத்தி  (புற உலகில்) உங்களில் நிகழும் தவம் வெண்முரசு. எழுத்திலோ பேச்சிலோ உங்களைத் தொடர்பு கொண்டு நாட்களாயினும், அகம் மானசீகமாக உங்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அது இவ்வாழ்வின் நற்பேறு. நன்றி ஜெ.

நன்றி,
வள்ளியப்பன்

முக்திமுக்தன், பெயருக்கு ஏற்ற படி அவன் அளவில் முக்தி அடைகிறான்.. இங்கிருந்தோ அல்லது அவன் மனதில் இருக்கும் அந்த இடத்திற்க்கோ.

சுபாஷினி, கரவு காட்டில், முக்தன் ஆனே இல்லை என்கிறாள்.. போர்க்களம் காணபோகும் தருணம் முக்தன் அவனை கரவு காட்டில் குடும்பம் குட்டியோடு, குதிரையுடனும் பின் சுபாஷினியுடனும் காண்கிறான்.

 ப்ருஹந்நளை இனி அர்ஜுனன் தான் என்று போர்களத்தில் குதிரையுடன் பார்த்த பின், அவன் மீள மீள வின் மீன்களை பார்ப்பதும்.. பின் இறப்பதும்.

எல்லாம் கோர்வையாக வந்திருக்கின்றது.

கொல்வதின் ஊடாக அவன் அவனை ஆண் என்று உணர்ந்து முக்தி அடைகிறானோ... என்றும் தோன்றுகிறது.

எனக்கு ஒரு அளவில் முக்தன் அர்ஜுனனின் பெண் வடிவின் ஒரு பிம்பம் என்றும் தோன்றுகிறது. அது கர்ணனின் அம்பு பட்டு, நெஞ்சில் உதை வாங்கியது போல், இனி வெளிவரப்போவதில்லை.. ஒரு வேளை வின்னை பார்த்து முக்தி அடைகின்றதோ?!?

நன்றி
வெ. ராகவ்

Sunday, August 20, 2017

முக்தனின் இறப்பு

 
 
முக்தனின் இறப்பு என்னையும் மிகவும் பாதித்து விட்டது. நாள் பூராவும் அவனின் நினைப்பு மனதினடியில். வேறு வேலைகளைனிடையிலும், வாசிப்பிலும் கூட ஒரு நெருடல், ஏதோ இழந்ததைப் போல. 

ஒரு உப கதாபாத்திரம் இவ்வளவு வாசிப்பவர்களின் உணர்வுகளை பாதிப்பது ஆச்சரியமே..! நீங்கள் கூறியது போல முக்தன் நெஞ்சில் மெல்லிய உதை போல அம்பு தைத்து விழும் போது நானும் நெஞ்சு கூட்டில் குருதி நிரம்பி விழுந்தேன்.

தனக்கு கொடுக்கப் பட்ட தூதுப் பணியை 
முடித்து விட்ட திருப்தியுடன் சென்று விட்டான் 

கண்ணீருடன்,

ராதிகா

போர் இனிது ?அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

அர்ஜுனன் உடன் இருப்பதே உத்தரனை வீரனாக நிறுத்துகிறது.  தன் அம்புகளை மட்டுமல்லாமல் உத்ரனின் அம்புகளையும் அவன் கைகள் மூலமாகவே பயன்படுத்துகிறான் அர்ஜுனன். தவறும் உத்தரனின் குறிகள் சரியானவையாக மாற்றப்பட்டு துரியோதனனை, துச்சாதனனை ஒருவாறு தாக்குகின்றன.  உத்தரன் மீது சரியாக குறிவைக்கப்பட்ட அம்புகள் தவறானவையாக மாற்றி அமைக்கப்படுகின்றன.

போர் இனிது என்று தோன்றும் விதமாக ரசிக்கும்படி வந்து, அதன் பின்னர் வரும் விளைவின் காட்சிகள், மலையொன்றின் மீது வேகமாக ஏறி பின்னர் அதன் மறுசரிவில் மெல்ல இறங்குவது போல் உணரச் செய்கிறது.  போராசையை உண்டாக்கி, அதை உடனே அதை குறைக்கவும் செய்கிறது. 

ஆகா பிரம்மாண்டமான போர் காட்சிகள், பிரமாதமான சண்டை என்று காட்டி, அத்துடன் வென்றனர் - மகிழ்ந்தனர் - இனிது என்று சினிமா பார்த்துப் பழகி, இங்கு வீரம் ரசனைக்குத் தரப்பட்டு உடனே யதார்த்தமும் தரப்பட்டது ஓர் உவகை ஏற்படுத்துகிறது.  ஒரு வீரசாகச திரைப்படத்தை பார்த்து அதன் கதாநாயகனாவே வாழ்ந்து, படம் முடிந்த பிறகும் அதன் கதாநாயகனாவே கருதிக் கொண்டு திரும்புவது போல் அல்லாமல், அங்கு அவ்வாறு வாழச் செய்து பின்னர் அங்கேயே நம்மையே நமக்குத் திருப்பித் தந்துவிட்டது போல் ஓர் எண்ணம்.

முக்தன் கற்பனையில் சுபாஷிணியுடன் வாழ்கிறான், குழந்தைகள் பெற்றுகொள்கிறான், சாவது பற்றி அவன் எண்ணவே இல்லை.  மாறாக, கஜன் சுபாஷிணியை விழைந்து பின்னர் மனதை விலக்கி கொள்ள முயல்கிறான், இறந்து விடுவோம் என்று நம்பவும் அது இயல்பானது கொள்ளவும் செய்கிறான், ஆனால் மரணம் அவனை விலக்கி விடுகிறது.  பலவற்றுக்கு மத்தியில் மெலிதாக தோன்றும் ஒரு எண்ணம் - முதியவீரன் ஒருவனைப் பார்த்து அவன் எண்ணுவது - "எங்காவது ஓரமாக தங்கிவிட்டு மீண்டிருப்பார்." "அடுத்த போரில் இந்த முகத்தை தானும் சூடிக்கொள்ளமுடியும் என எண்ணியபோது அவனுக்கு புன்னகை எழுந்தது." - கிட்டத்தட்ட அதுவேபோல் ஆகிறது. ஒருவரையும் கொல்லாமல் விழுப்புண் கொண்டு மீள்கிறான்.  வாழ்வையும் மரணத்தையும் நாமல்ல - வாழ்வும் மரணமுமே நம்மை தேர்ந்தெடுக்கின்றன என்று ஆகிறது.  பாண்டவர்களின் கதை என்று மட்டுமல்லாமல், அவர்களை மையத் தொடராக கொண்டு, இவ்வாறான ஏராளமான பாத்திரங்கள் -அவர்களது வாழ்வு கூறப்படுவது, பலசமயம் அவர்கள் கண்கொண்டே காட்சிகள் விரிக்கப்படுவது, கதை நடக்கும் அந்த இடத்தில் நம்மைக் கொண்டு நிறுத்துகிறது.  மையப்பாத்திரம் என்றால் அவர் அவர் மட்டும்தான், இவ்வாறான பல துணைப் பாத்திரங்கள் பல எனும்போது அப்பலவற்றுள் அல்லது அது போன்றே எங்கோ அரூபமாக அதில் நானும் ஒருவன் - அதே இடத்தில் அதே கதை வெளியில்.  மக்களின் கதையாகவும் இருப்பதே வெண்முரசை மனதிற்கு நெருக்கமாக அமைக்கிறது.  "ஒரு பேரரசன் இருந்த ஊரில் நம் போன்ற சாமானியர்கள் பலர் இருந்தனர்" என்றல்லாமல் "நம் போன்ற சாமானியர்கள் பலர் இருந்த ஊரில் ஒரு பேரரசன் இருந்தான்" என்று உணரச்செய்தே மக்களை ஈர்த்துக் கொள்கிறது வெண்முரசு.


அன்புடன்
விக்ரம்
கோவை

முக்தன்


தப்தோர்ணமெனும் பசுங்காட்டில் ஏதும் நிகழா நாட்காவலில் இருப்பவனாய், கனவுகளும் கேள்விகளும் நிறைந்தவனாய் அறிமுகமாகி, உள்நுழைய ஒப்புதலின்றியும் வெளியிலிருந்தே நிலவு  காட்டினுள் இறங்குவதையும், பணியில் காடு மறைவதயும் உறங்காமல் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு பார்த்திருந்து,புலரியின் ஒளியில் இலைகலின் கூரை, மலர்களின் அனலை ,சுனைகளின் விழிதிறப்பை என அக்காட்டை நாளும் அணுக்கத்தில் அறிந்துகொண்டே இருந்தவன் முக்தன் 

புதையலைக்காக்கும் பாம்பைபோல இருந்த அவன் உத்தரை அக்காட்டுக்குள் நுழைந்த அன்றே    பரபரப்பும் அவதானிப்புகளும் சிந்தனைகளும்,அழைக்கழிப்புக்களும்,  காதலும்,வசீகரங்களும் நிறைந்த  இன்னொரு  வாழ்விற்குள் பிருகந்நளையுடன் இணைப்புரவியொன்றில்  ஏறி   நுழைந்துவிட்டான்
 
பிருகந்நளை உத்தரைக்கு நடனம் கற்றுத்தந்த முதல் நாளிலேயெ முக்தன் அரிய பொருளோன்றைத் தொலைத்தவனாக பேரிழப்பொன்றை முன்பே அறிந்தவனாக   காட்டப்பட்டு,  வாசிக்கும் நமக்கெல்லாம் பிருகந்நளையாகிய அர்ஜுனன், உத்தரை விராடநாட்டின் கதையெல்லாம்  சொல்லிக்கொண்டுவந்த  கதைசொல்லியாக இருந்தான்

.பெரும்பாலான அத்தியாயங்களை முக்தனின் பார்வையிலேயே கண்டுகொண்டுவந்தேன் இன்று வரை

இன்றைய  போர்சூழ்கையிலும், சிற்றோய்வில்  ஒரு சிறு கனவுக்குள் செல்பவன்,விண்மீண்களையும் விடிவெள்ளியையும் கவனித்தபடி கரவுக்காட்டின் கனவு இல்லமொன்றில் சிறிது நேரம் வாழ்ந்தவன், வேட்டையில் ஆடுகளென போர்வீரர்களை கழுத்துக்குழியில் குத்திக்கொல்லும் உணர்வில் அழைக்கழிக்கப்பட்டு,அவன் இதயத்தில் அம்பொன்று தைத்ததையும் விழிகள் விரிய கனவொன்றினைக்காண்பது போலவெ பார்த்தபடி இருக்கிறான்

கனவுகளும் காதலுமாய்  நம்மிடையே வாழ்ந்திருந்த  அந்த இளைஞ்னுடன் சேர்ந்து  இன்று மெல்லிய உதையாக  நானும்  அம்பை நெஞ்சில் உணர்ந்து குருதி வெம்மையாய் வழிய, மூச்சு சிக்கிக்கொண்டு, கொழுங்குருதியும் நிண்முமாய்  இருமலில் தெறிக்க  களத்தில் சாய்ந்தேன்
 அத்தனை துல்லியமாக அத்தனை உணர்வுபூர்வமாக   முக்தனின் மரணத்தை என்னால் என்னுடயைதென உணர முடிந்தது வாசிக்கையில்

 பிருகந்நளையை காண ஒருநாளின் சீவிடுகள்நிலைக்காத கருக்கிருட்டில் புறப்பட்டு வந்து, அவளை மிக நெருக்கத்தில் காணும் உளவெழுச்சியில் திணறியபடி, முகம் சிவந்து பதற, உள்ளங்கால்களெல்லாம் வியர்த்து, அடுமனையின் உள்ளிருந்து வரும் ஒவ்வொரு ஓசையிலும் அவளை உணர்ந்தபடி காத்திருந்த அந்த இளைஞனை இன்று கண்ணீருடன் நினைவுகூர்ந்தேன்

எத்தனையோ மரணங்கள் இழப்புகள் வெண்முரசில் நேர்கின்றன இருந்தும் இப்படி முக்தனைப்பொன்ற சிலரின் இறப்பு பெரும் எடையொன்றினை மனதின் மேல் வைத்து அழுத்தியபடியே என்றும் இருக்கும்

 லோகமாதேவி