Saturday, February 4, 2017

அறத்தின் இரண்டு முகம்.



அன்பு என்னும் சொல் அதன்மீது ஏறிவரும் பாசம் கருணை அருள் என்னும் வண்ணத்தால் வாசத்தால்  மென்மையாகத்தெரிகிறது ஆனால் அதற்குள் உறையம் தீயால் கூர்மையால் அது ஒரு அனல்வாள்.

அன்பு தனக்குள் உறையும்  கூர்மையால் எவ்வளவு ஆழத்திற்கு இறங்கியும் சென்று குருதிவடியவைக்கும். அதற்குள் உறையும் தீயால் அது தன்னையும் உண்டு தான் எழுந்தாடும். 

பரத்வாஜரின் மைந்தன் யவக்ரீதன் ரைஃப்யரின் மருகள்களை தனது விழைவால் அபகரித்து முறைமீறி அறமீறி வன்கொடுமைசெய்யும்போது மகன்கள் மருமகள்கள்மீதுக்கொண்ட அன்பால் தான்கற்ற வேதத்தால் சூரியனை புவியில் எழவைக்கிறார் ரைஃப்யர். அப்போது அறச்சூரியன் காமமாகி நின்ற யவக்ரீவனை எரிக்கிறது. எம்பில் லதனை வெயில்போல காய்ந்தது.

யவக்ரீவனின் விழைவால் விளைந்த அறத்தடுமாற்றம் அமைதியான வாழ்க்கைநதியை திசைதிருப்பி எங்கெங்கோ அலையவைத்து ரைஃப்யரின் மகனாலேயே ரைஃப்யரினை கொல்லவைத்து, அண்ணன் தம்பிகளை வஞ்சகர்களாக்கி, உடன்பிறந்தாரை ஒருவரை ஒருவர் கொல்லவைத்து சுழன்று சுழன்று சென்று ரைஃப்யரின் மைந்தன் அர்வாவசுவை சூரியனிடமே கொண்டு சென்று நிறுத்துகிறது.
மைந்தர்களுக்காக ரைஃப்யரின்  அறத்திற்காக அனல் எழுந்தது என்றால் .ரைஃப்யரின் சினம் அடக்காத்தன்மையால் பரத்வாஜரின் சாபத்தால் அறம் வாள் என்று எழுந்து எய்தவனையே கொன்றது. அறம் ஒரு அனல்வாள்.

ரைஃப்யரின் முன் வேதஅறம் சுடும் சூரியனாக எழுந்தது பூமியை எரித்து முடித்தது என்பதை காட்டிச்செல்லும் கதை. அர்வாவசுவிற்காக வேதஅறம் சுனையில் ஒளிச்சுடரென எழுந்து அகல்தீபம்போல் அர்வாவசுவுக்கு வெளிச்சம்  கொடுக்கிறது. 

//வேதத்தவம் முழுமைகொண்டபோது அவர் முன் ஆடியெனக்கிடந்த மதுபிலசமங்கச் சுனையில் அகலில் சுடர் என சூரியன் எழுந்து “விழைவதென்ன, மைந்தா?” என்றான். வேதமுழுமையை உணர்ந்தமைந்த அர்வாவசு “ஏதும் விழைகிலேன். இப்புவியில் எவரிடமும் கடனிலேன், எவருடனும் பகையுறவும் அற்றுள்ளேன். முழுமையன்றி கோருவது பிறிதில்லை” என்றார். அவ்வண்ணமே என்று சொல்லி சூரியன் மறைந்தான். சுனையில் இறங்கி அர்வாவசு நிறைவடைந்தார். //

ரைஃப்யருக்காக எழுந்த அறம் சுடும் சூரியன். அர்வாவசுவிற்கு எழுந்தது குளிர்ந்த சூரியன்.

வாழ்க்கையின் வலிகளைக்கூர்ந்துப்பார்த்தால் ரைஃப்யரின் வலி என்பது புலன் உணர்த்தும் அருவ வலிதான். அர்வாவசு பெற்ற வலி என்பது புலன்கள் உணரும் ரூபவலிகள். வாழ்க்கையில முதன் முதலில் தர்மஅடிவாங்கியவன் அர்வாவசுவாகத்தான் இருப்பான்போல. சகோதரனே ஊரைக்கூட்டிவந்து தர்மஅடி அடிக்கிறான். சொல் அற்றுப்போகும் அடிகள். அத்தனைஅடிக்கும்  பின்னால் அர்வாவசு தனது வஞ்சினத்தை அறம்மீறும் விழைவின் மீது ஏத்தாமல் மெய்மையின்மீது ஏத்துகிறான். அவனின் அந்த மெய்மைதான் அவனுக்கு அறம் குளிர்ந்து வருகின்றது. அவனுக்கு வந்த அறத்தின்மூலம் அர்வாவசு என்னும் குருகுலம் தழைக்கிறது. அர்வாவசு மூழ்கிய அறத்தின் குளிர்சுனைதான் அவனுக்கு பேரையும் அழிவின்மையும் தருகின்றது.

ரைஃப்யர் எழுப்பிய அறம் அனல் யவக்ரீதனை மட்டும் அல்ல தன் மருமகள்களையும் சுட்டு எரித்து அவரையும் அறப்பழியாக வந்து கொன்றுதீர்த்தது. அர்வாவசுவின் அறம் தன்வலியோடு முடிவடைந்துவிடுகிறது. அகிம்சையை இத்தனை அறச்சிடுக்குக்கள் இடையில்புகுந்துதான் மகாத்மாகாந்தி பெற்று இருக்கிறார் அதனால்தான் அவரி்ன் அறப்போர் எளிதில் புரிந்துக்கொள்ள முடியாததும் கடந்து சென்றபின்பு எளிமையானதாகவும் அர்த்தம் இல்லாததுபோலும் தெரிகிறது. உண்மையில் அறப்போர் தன் வலியோடு உலகை வாழவைக்கும் உள்ளார்ந்த தாய்மை குணத்தோடு நிற்கிறது. விழைவுகளின் கோரப்பற்கள் அனைத்தையும் புடுங்கி எறிந்துவிட்டு அது தனியாக சுவடியாக மட்டும் நிற்கிறது. குளிர் அறத்தின் பாதை தன்வலி மிகுதியாகவும் உலகின் இழப்பு குறைந்ததாகவும் இருக்கிறது. விழைவு அறம் உடனடி வலிநிவாரணியாக இருக்கிறத இறுதியல் அனைத்தையும் அது எரித்தும் குத்தியும் கொல்கிறது. .

அறம் என்பது ஒரே சூரியன்தான் அதை அனல்வாளாக ஏந்துகி்ன்றோமா அல்லது ஒளிசுனையாக பெறுகிறோமா என்பதில் உள்ளது அறம் கைக்கொள்ளும் வல்லமை.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை-என்கிறார் திருவள்ளுவபெருமான்.

ரைஃப்யர் அறத்திற்கு அன்பை சார்பாக வைத்துப்பார்க்கும்போது அறம் வெயில்போல் காய்ந்தது அதை அர்வாவசு மறத்திற்கு (தன்னை வெல்லுதல்) சார்பாக வைத்துப்பார்க்கிறான் குளிர்ந்துவிட்டது. தன்னை வெல்லுதல் அறத்தில் நுழைதல் ஓளியை காணுதல் குளிர்சுனையில் மூழ்குதல்.. அறம் இருவர் காணும் ஒரே சூரியன் அதன் தன்மையால் அது இரண்டு. 

ராமராஜன் மாணிக்கவேல்