Thursday, February 9, 2017

சழக்கு

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

 
 
வணக்கம்.

வெண்முரசின் பல சிறப்புகளில் ஓன்று,புதுப்புது தமிழ் வார்த்தைகளை (ஏற்கனவே வழக்கொழிந்த) பொருத்தமான இடங்களில் கையாள்வது.சிலமுறை இது பற்றி எழுதியிருக்கிறேன்,அதே போல் இந்த அத்தியாயத்தில்  "சழக்குப் பேச்சு" என்று வருகிறது அதுபற்றி'கூகுளில் தேடியபோது பொய்ப்பேச்சு,அல்லது பயனில்லாத பேச்சு என்று பொருள் வந்தது.மேலும் இந்த வார்த்தையை எடுத்தாண்டிருக்கும் பெரியாழ்வார் பாசுரமொன்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.  
  
  சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கர மேந்துகை யானே
  பிழைப்பராகிலும் தம்மடி யார்சொல் பொறுப்ப தும்பெரி யோர்கட னன்றே 
   விழிக்கும் கண்ணிலேன் நின்கண்மற் றல்லால் வேறொ ருவரோடு என்மனம் பற்றாது
   உழைக்குஓர் புள்ளி மிகையன்று கண்டாய் ஊழி யேழுல குண்டுமிழ்ந் தானே.
 
இந்த  பாசுரத்திற்கு  ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரையில்...  எனது பொல்லாத(சழக்கு) நாக்கினால் சில அற்பமான பாசுரங்களைப் பாடினேன்” என்றாலும் புள்ளிமானுக்கு ஒருபுள்ளி அதிகமானால் அதனால் அதற்கொரு குற்றமில்லாதவாறு போல, அபராதமயனான  அடியேனுக்கு ஒரு அபராதமேறினால், அதனால் என்னுடைய அங்கீகாரத்திற்கு ஒரு குறையுமில்லைகாண் என்று ஆழ்வார் அருளிச்செய்தார்.

அன்புடன்,
அ .சேஷகிரி.