Friday, March 10, 2017

கற்கள்



அன்புள்ள ஜெ,

மாமலர் 13 - எண்கற்களத்தில், இரு கற்களை ஐந்து கற்களாக மாற்றி மையத்தில் திரௌபதியை வைத்து கழங்காடுகிறான் முண்டன். தருமனை துருபதனில் இருந்து பிரிந்த ஒன்றாகவும், அர்ச்சுனனை திருஷ்டதுய்மனில் இருந்து பிரிந்த ஒன்றாகவும், நகுலனை திருஷ்டதுய்மனில் இருந்து தெறித்த ஒன்றாகவும், சகதேவனை துருபதனில் இருந்து தெறித்த ஒன்றாகவும் மாற்றி கழங்காடுகிறான். அக்கற்களுக்கிடையே ஒரு பெரும் பாறையென பீமன் வந்து அமர்கிறான். அப்போது இவ்வாறு ஒரு வரி வருகிறது. “வெல்லப்படாதவை இரண்டு. எட்டப்படாதது ஒன்று. எட்டியும் அடங்காத உருக்கொண்ட பிறிதொன்று”. எண்ணிக்கைப் படி நான்கு வருகிறது. வெல்லப்படாதது தருமன், எட்டப்படாதது அர்ச்சுனன், எட்டியும் அடங்காத உருக்கொண்டது பீமன் என வாசித்தால் மூன்று எண்ணிக்கை தான் வர வேண்டும். நகுலனும், சகதேவனும் அடையப்பட்டவர்கள் அல்லவா? அல்லது வெல்லப்படாதது என தருமனையும், அர்ச்சுனனையும் சொல்லி, எட்டப்படாதது என கர்ணனைச் சொல்கிறீர்களா? கர்ணன் என்றால் அவன் அந்த எண்கற்களத்தில் இல்லை (துருபதன், திருஷ்டதுய்மன், பாண்டவர் ஐவர் மற்றும் திரௌபதி – இந்த எட்டு பேர் தான் இருக்கிறார்கள்) இல்லை நான் எதையாவது தவற விட்டிருக்கிறேனா?

அன்புடன், அருணாச்சலம் மகாராஜன்