Tuesday, April 4, 2017

கொல்லுதல் யார்க்கும் எளிய (மாமலர் - 55, 57,60)




  

ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் விலங்குகளை  மனிதன் கொன்றபடிதான் இருக்கிறான்.   நாம் விலங்குகளைக்  கொல்லும் வரை அவை  தாம்  கொல்லப்படப்போவதை அறிவதில்லைஅவை பெரும்பாலும் அந்தக் கணத்தில்தான அறிகின்றன. அவை நம்மிடம் வாய்விட்டு கதறி உயிர்ப் பிச்சை கேட்பதில்லைநம்மை கைகூப்பி தொழுது விட்டுவிடும்படி கெஞ்சுவதில்லைஅந்த விலங்கைப் பெற்றவை, அவ்விலங்கின் இணை, அதன் குட்டிகள் எதுவும் வந்து நம்மிடம் கொல்லாதிருக்கும்படி கேட்டு  கண்ணீர்விட்டு கதறப் போவதில்லை. அதன் முதிராத குட்டிகளைத் தவிர அந்த விலங்கைச் சார்ந்த மற்ற விலங்குகள் பாதிப்படைவதில்லை. ஆனால் ஒரு மனிதனைக்  கொல்கையில் இவை அனைத்தும் நடக்கின்றன. மனிதனைக் கொல்வதால் என்ன நன்மை இருக்கிறதுஅவன் நமக்கு உணவாகமாட்டான், உடைக்காக அவன் தோலை உரித்தெடுக்க முடியாது. அவன் எலும்புபற்களில் ஆபரணங்கள் செய்ய முடியாது. ஆகவே ஒரு மனிதனைக் கொல்வது என்பது தேவையற்றதா ஒன்றாக தோன்றூகிறதுமேலும் அவனைக் கொன்றால்   அவன் குருதியில் அவன் உண்ட தாய்ப்பாலின் வீச்சம் அடிக்கும். அவனுடைய  தந்தையுடலின்  வியர்வையின்  உப்பு கரிக்கும்அவன் மனைவியின் உடல் வாடையும் வரும். அவன் குழந்தைகளின் சிறுநீர் கழிவுகள் அதில் கலந்திருக்கும். மேலும்   அவன் குருதிக்  கறையை நம் கைகளிலிருந்து நீக்குவது கடினம்குருதிக்  கறை படிந்த கரங்கள் மற்றவர் கண்களுக்கு உவப்பளிப்பதில்லை

நம் இயல்பான மன நிலையில் நம்மால் ஒருவனைக்  கொல்லவே முடியாதுஅவனைக் கொல்ல  நாம்  நம் மனநிலையை திரிபு செய்து கொள்ள வேண்டும்.   தனக்காக மட்டும் என்ற காரணத்தில் நம் மனம் எளிதில்  திரிபடையாது. ஒருவனைக் கொல்ல நம்மை ஒரு பிரிவிலிலும் அவனை இன்னொரு பிரிவிலும் எதிரெதிராக வைத்துக்கொள்ள வேண்டும்மதம், மொழி, நாடு, இனம், குலம், சாதிஊர் என எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்அல்லது அவன் நம்மைவிட ஏதாவது ஒரு விதத்தில் உயர்ந்திருந்தால்கூட   அவனை வேறொரு பிரிவெனக் கொள்ளலாம். அதனால் நம்மவர்களென்ற ஒரு குழுவை உருவாக்கி வளர்த்தெடுக்க வேண்டும். அவன் எதிரிக்குழுவைச் சார்ந்தவனாக  ஆகிவிடுவான். நம்முடைய தாழ்வுக்கெல்லாம் இனி அவனைக் காரணமாக்குவது எளிதுஇப்போது அவன் நம் குழுவுக்கு எதிரானவன். ஆகவே அவனைக் கொல்வதற்கு அந்த ஒரு காரணம் போதும்அதை வைத்து நம் மனதில் வஞ்சம் கொண்டு  திரிபடையச் செய்யலாம்.   இப்போது அவனைக் கொலைசெய்வதால் அவன் குருதி நம் கையில் கறையென பிடித்துக்கொள்ளாது.   மற்றவர் கண்களில்  நம்மைக் காண்பதில் ஏற்பட  வேண்டிய விலக்கம் ஒரு பிரமிப்பாய் மாறும்ஒரு நாயகத் தன்மை சேரும்அக்கொலையை நம் சிரசில் ஒரு சிறகெனச் சூடிக்கொள்ளலாம்.   கூட்டாகச் சேர்ந்து கொலை செய்தால் இன்னும் சிறப்பு. அது கூட்டுக் கொலை என்பதாலேயே அதை மற்றவர் எளிதாக ஏற்றுக்கொள்வார்கள். அல்லது உயரத்திலிருந்து ஒரு சொல்  அவனைக் கொல் என வந்துவிட்டால் போதும்கொல்வது இனி எளிதாகிவிடும்
  

கசனைக் கொல்லப் போகிறவர்களின் மனம் எப்படி நினத்திருக்கும்இதோ கசன் எதிரில் வருகிறான்அழகன்தான்அதனால் என்னஅழகு என்பது அழியக் கூடியதுதானே. அழகு என்பதாலேயே அது அழிய வெண்டியதாக ஆகிறது. அவன் பெற்றோரால் கொஞ்சி கொஞ்ச்சி வளர்க்கப்பட்டிருப்பான்சரிஅவனுக்கு  இறப்பு என்பது வராமலா போகப்போகிறது? எல்லோரும் எவருடைய குழந்தைகள்தான்.   எல்லோரும் இறக்கவே செய்கிறார்கள்எளிமையான கள்ளமற்ற உள்ளம் கொன்டவன்எதிரிகளென எவரையும் நினையாதவன்.   நம்மால் அப்படி இருக்க முடியாத போது அவனால் மட்டும் அப்படி இருக்க முடியுமா. இதெல்லாம் நம்மை ஏமாற்றும் நடிப்பு. அவன் நாடகமாடுகிறான். இதன் காரணமாகவே இவனைக் கொல்லப்படவேண்டியவனாகிறான்.   அறிவும் ஞானமும் அடையப் பெற்றவன். அது எவ்வளவு ஆபத்தானது. எதிரியின் அறிவு என்பது நம்மைத் தாக்குவதற்கான  ஒரு ஆற்றல்வாய்ந்த ஆயுதம். அவனைக் கொல்லாமல் அந்த ஆயுதத்திலிருந்து தப்பிக்க முடியாதுநம் குருவுக்கு வேண்டியவன்

அதனால் என்ன? நம் நலத்தைவிட எதுவும் பெரிதானதல்ல. அவர் நமக்கு குருவென இருப்பதே நம் நலத்தைக் காக்கும்  பொருட்டுத்தான்குரு என்பதால்  ஏமாற்றப்பட முடியாதவர் என்பதல்ல. அவன் குருவையே ஏமாற்றிக்கொண்டிருப்பவன். அதற்காகவும் அவன் கொல்லப்பட வேண்டியவன்அவனை ஒரு பெண் உயிரென நேசிக்கின்றாள்அப்பெண் நம்பொருள்செலவில் வளர்க்கப்பட்டவள். அவள்  நம்மவள். நம்மில் ஒருவரை மணந்திருக்க வேண்டியவள்நம்மில் ஒருவர் வித்தை ஏற்று நம் குலத்தை விருத்தி செய்ய வேண்டியவள்அவளை மயக்கி அவன் வசப்படுத்திவிட்டான்அதனால் அவனைக் கொல்வது மேலும் பொருள் வாய்ந்ததாக ஆகிறது. போதும் அதிகம் சிந்திக்க வேண்டாம்.     கொலை செய்கையில் மனதை பேதலிக்க விடக்கூடாது. அன்பு கருணை என்பதெல்லாம அர்த்தமற்ற சொற்கள். அதுவும் அவன் வேறு பிரிவைச் சார்ந்தவன் என்பதால் அவனிடம் இவற்றைக்காட்டுவது சமூகக்குற்றம்நமக்குள்ளும்  மற்றவருக்கும் அவனைக் கொல்வது எவ்வளவு அவசியமானது என்பதைத் தவிர வேறு எதையும்  சிந்திக்கக்கூடாதுகொல்லுவோம். துண்டு துண்டாக வெட்டி வெறும் மாமிசக் குவியலாக அவன் உடலை மாற்றி விடுவோம். அப்போது அவன் இனிமையான புன்னகையை மறந்துவிட முடியும்.   அவன் உடல் வாடையுடன் அவன் நினைவுகள் எழக்கூடும்அந்த மாமிசத் துண்டுகளை விலங்குகளுக்கு உணவாய் இட்டுவிடலாம்எலும்புகளை ஆழக்  குழிதோண்டி புதைத்துவிடலாம். அல்லது எரித்து சாம்பலாக்கிவிடலாம். அப்போது அவன் நமகு உதவிய நினைவுகளையெல்லாம்  நம் மனதிலிருந்து துடைத்துவிடலாம்.அவன் குருதிதுளிகளை நீர்ப்பெருக்கிலி மூழ்கி கழுவி நீக்கிவிடுவோம். இல்லையென்றால் அதன் வீச்சம் அவன் குணநலன்களை நமக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கும்ஆக அவனைக் கொல்லுதல் ஒன்றும் கடினமானது அல்ல.
 

ஒருவனைக் கொல்வதற்கு மனதில் ஏதோ ஒரு வஞ்சத்தை ஏற்படுத்திக்கொண்டால் போதுமானது. அந்த வஞ்சம் அவன் கொலைக்கான காரணங்களை தாமே கற்பித்துக்கொள்ளும். அப்புறம் என்ன, கொல்வது எளிதுதானே?


தண்டபாணி துரைவேல்