Wednesday, April 12, 2017

இந்திரநீலம் கனவுகளின் தொகை

அன்புள்ள ஜெ,


வெண்முரசை மறுவாசிப்பு செய்யும் வரிசையில் இந்திரநீலம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்திரநீலம் தினம் ஒரு அத்தியாயமென படிக்கும்போது வெண்முரசைத் தொடர்ந்து வாசிக்கும் என்னுடைய நண்பர்கள்கூட இந்தக் கல் இவ்வளவு அதிகமாக எடுத்தாளப்படுகிறது. மிக அதிகமாக நீட்டிக் கொண்டே போகிறார் என்று சொன்னார்கள். அன்று அது சரியென்று கூட எனக்குப் பட்டது. ஆனால் இவ்வளவு நாள் கடந்த பிறகு அந்நாவலை முழுதாக வாசிக்கையில் அவ்வகையான அயர்ச்சி ஏதும் தோன்றவில்லை.


இந்திர நீலத்தை மானுடத்தின் உலகியல் விழைவு என்று கொள்ளலாம். ஒரு உலகியல் விழைவு மனிதனின் உயர்குணங்களை, நிலைகளை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்று பார்க்க முடிகிறது. அம்மானுடத்திற்கே அதன் உள்ளடங்கிய உருவங்களைக் காட்டி முடிவில் அது வெறும் கல்லென இங்கிருந்து திரும்புகிறது. ஒரு மனித வாழ்நாளில் கொள்ளப்படுகிற உலகியல் விழைவு வாழ்வின் முடிவில் அர்த்தமற்றுப் போவதென காட்டிச் செல்கிறது.


அது அக்ரூரருக்கும் கிருதவர்மனுக்கும் சததன்வாவுக்கும் சாத்யகிக்கும் வெவ்வேறு உருவங்களைக் காட்டியது போல மானுடன் சாதிக்க விரும்பும் எந்தச் சாதனையாகவும் அந்த அருமணியை உருவகப்படுத்திக் கொள்ள முடியும். அதை அடைந்த பிறகு அச்சாதனை அங்கே முடிவுறுவதே இல்லை. அதன் வெற்றி மீண்டும் இன்னொரு விழைவுக்கே வித்திடும். அவ்வாடலை அந்த அருமணி நிறைவாகவே காட்டிச் செல்கிறது. இளைய யாதவனுக்கு தன்னை முழுதளிக்கும் காளிந்தி கையில் இந்திரநீலம் வெற்றுக்கல்லாக தோற்றமளிக்கிறது.
தினமும் ஒரு அத்தியாயமாக வாசிக்கும் போது அதன் தொடர்ச்சி நம்மை சலிப்புறச் செய்திருக்கலாம். ஏனெனில் அதன் பயணம் முடிவுறாத போது நாமும் அதே இடத்தில் நின்றுகொண்டிருக்கும் உணர்வை அடைகிறோம். ஆனால் ஒரு நாவலாக அது வாசிக்கப்படுகையில் அது அவ்வித அயர்ச்சி எதையும் தருவதில்லை. இந்திரநீலம் கனவுகளின் தொகை.


உங்களுக்குத் தினமும் வரும் விமர்சனங்களை பொருட்படுத்தாது வெண்முரசை உங்கள் வழியில் எழுதிச் செல்வதே சிறந்தது என்பது எனது வேண்டுகோள்.
ராதை.