Thursday, April 13, 2017

கருமை வெள்ளை





அன்புள்ள ஜெயமோகன்,


   நீங்கள் முதற்கனல் எழுதும் போது அதை தொடர்ந்து வாசித்தேன். பின்பு, உங்கள் கையெழுத்துடன் செம்பதிப்பும் வாங்கினேன். ஆனால் என்னால் மழைப்பாடல் நாவலை தொடர முடியவில்லை. இரு வாரங்கள் முன்பு மழைப்பாடல் ஆரம்பித்தேன். மிகவும் பிடித்திருந்தது. இன்று முடித்து விட்டேன். நீங்களே ஒரு வாசகர் கேள்விக்கு சொன்னது போல, இது ஒரு பெரிய காடு. கண்டிப்பாக முழுமையாக பெற்றிருப்பேன் என நினைக்கவில்லை. ஆனால் பெற்ற வரை எனக்கு திருப்தியே

    துரியோதனின் பிறப்பு பற்றி வரும் துர் சகுண சித்தரிப்பு, எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை. அது வரை, சம தளத்தில் வரும் இரு பக்க அதிகார போர் பற்றிய சித்தரிப்பு கருப்பு வெள்ளையாக மாறிவிடுமோ என அச்சம். ஒரு வேளை  , பிறக்கும் முன்பே வெறுக்க நேர்ந்ததே , அவனின் காழ்ப்பு வளர காரணமாகும் என நினைக்கிறேன். தொடர் வாசிப்பில் அறிவேன்.


அன்புடன்
அருண்

அன்புள்ள அருண்

அத்தகைய கருமை வெள்ளைச் சித்தரிப்பு வெண்முரசில் இல்லை. கருமையும் வெள்ளையும் மாறிமாறித்தெரிகின்றன. ஒரு கட்டத்தில் பாண்டவர்களும் கருமைகொள்வார்கள். அந்த மாற்றத்திற்கான காரணங்கள் கதையாடலில் உள்ளுறையாக இருக்கும். வாசகன் உய்த்துணரவேண்டும் என்பதே என் விழைவு

ஜெ