Wednesday, April 26, 2017

மலரிதழ் கரவுகள்

 
 
அன்புநிறை ஜெ,

நமது பள்ளி பாடத்திட்டங்களில் ஆளும்கட்சியை சேர்ந்த சிலரின் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்படுவதும் ஆட்சி மாறும் போது அவை நீக்கப்படுவதும் நமது சாபங்களில் ஒன்று (தலைவர்கள் என்றோ ஆளுமைகள் என்றோ மாணவர்கள் கற்பதற்கு தங்கள் வாழ்வில் எச்சாதனைகளும்  இயற்றாதவர்களைக் குறிப்பிடுகிறேன்) . இவற்றைப் படிக்கும் மாணவர்கள் தவறான ஒரு வரலாற்றை கற்கிறார்களே என வருத்தமாக இருக்கும். நவீன ஊடகச் சூதர்கள் உருவாக்கும் பிம்பங்கள் வேறு.
ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஒரு உன்னதமான காவியம் எழுதப்படும் எனில் வரலாற்றில் வலி மிக்கவர் செய்யும் சந்திப்பிழைகளும் ஒட்டுண்ணியெனப் பெருகும் ஒற்றுப் பிழைகளும் திருத்தப்படும். 
காவியங்கள் வாயிலாக சரித்திரங்கள் திருத்தி எழுதப்படும், காலங்கள் தாண்டி வாசிக்கப்படும்.
//நாளடைவில் மேலோரின் கீழ்மைகள் மட்டுமே ஊழியர்களின் உருவங்களாகின்றன. அருள்வடிவாக பேரரசி தோற்றமளிக்கையில் அவர்களின் கொடியமுகம் அணுக்கத்தோழி சாயையின் வடிவில் வெளிப்படுகிறதென்பதை அறிந்திருப்பீர்கள்// 
சமீபத்திய அரசியல் நாடகங்களைக் இயல்பாக விளக்கி இடக்கையால் புறந்தள்ளி முன்நகர்கிறது வெண்முரசு. 

முதல் வாசிப்பில் காணத் தவறும் சில ஆழங்கள் மீள்வாசிப்பில் மேலெழுந்து வருவது பலமுறை நிகழ்வதே. ஆயிரம் இதழடுக்கில் மாமலர் கரந்திருக்கும் தேன்.

இன்று நண்பர்களுடனான மறுவாசிப்பில் கணேஷ் ஒன்றைக் குறிப்பிட்டார். மாகேதர் கொணரும் ஏழு புலிக்குருளைகளில் ஒன்று தேவயானி விரல்களால் அழுத்த சினம் கொண்டு சிறுகால் வீசி அறைய முற்படும் போது, 'கொடிவழியின் ஏழாவது மைந்தனே அரசன் என முடிசூடி அரியணையமரும் ஊழ்கொண்டவன்' என்ற நிமித்திகர் கூற்றைக் குறிப்பதாக உணர்ந்தார். முதல் வாசிப்பில் தவறிய நுண்மையிது. 

மீள்வாசிப்பில் மீட்டிய மற்றுமொரு வரி. பின்வருநிகழ்வை முன்னோட்டமென ஒற்றை வரியில் கோடிட்டுச் செல்கிறீர்கள்: 
//தேர் தோரணவாயிலை அணுகியபோது சரளைக்கற்களுடன் மண்கலந்து விரித்து நீர்தெளித்து கல்லுருட்டி இறுக்கிய புதிய தேர்ப்பாதையில் கண் அறியாதபடி ஆழத்தில் ஓடிச்சென்ற முயல்வளை ஒன்றுக்குள் அவள் தேரின் சகடம் ஒன்று இறங்க நிலைதடுமாறி அசைந்து தோளால் சாயையின் விலாவை முட்டிக்கொண்டாள்//

யாதொரு அசைவிலாமல் அணி ஊர்வலமென செல்லும் அரச வாழ்வெனும் தேவயானியின் தேர்ச்சகடம், கண் அறியா ஆழம் கொண்டுவிட்ட சர்மிஷ்டையின் குழிமுயல் வளையில் சிக்கி, அதன் அதிர்ச்சி தரும் உச்ச தருணத்தில், தன் நிழலென அதுவரை வரும் சாயையுடன் மோதுகிறாள். அவள் அணுகும் அத்தோரணவாயில் - சரிந்துவிடலாகாது எனும் அச்சத்துடன் யயாதி மற்றும் பார்க்கவன் எனும் தச்சர்களால் இறுக்கிக் கட்டபட்ட தோரணவாயில். வானளாவ 
கட்டி எழுப்படுபவை எல்லாமே எதையோ பிறக்குக் காட்டுவதன் வாயிலாக தன்னிடமே
மறைப்பதற்காகத்தானோ.

மிக்க அன்புடன்,
சுபா