Monday, May 8, 2017

பாவண்ணன் வாழ்த்து


அன்புள்ள ஜெயமோகன்


மூன்று மாதங்களுக்கு முன்பாக  மாமலர் தொடங்கியதும் அதன் உள்ளோட்டத்தை ஓரளவு ஊகிக்கமுடிந்ததென்றாலும், எப்படி கொண்டுசெலுத்தப் போகிறீர்கள் என்றொரு பதற்றம் எனக்குள் இருந்தது. ஆரம்பக்கட்ட அத்தியாயங்கள் மிகுந்த உற்சாகத்தை அளித்தன. இந்த வரிசையில் எந்த நூலிலும் காணாத உற்சாகம் அது.


பாசுபதத்தைத் தேடிச் சென்ற அர்ச்சுனன் பயணத்துக்கும் மாமலரைத் தேடிச் சென்ற பீமனின் பயணத்துக்கும் என்ன வேறுபாடு என்று யோசித்தேன்.  ஒருசில கணங்களிலேயே புரிந்துவிட்டது.  அர்ச்சுனனின் பயணம் ஏதோ ஒரு வகையில் அவன் ஆயுதங்களின் தகுதியை உயர்த்திக்கொள்வதற்கான பயணம். ஒவ்வொரு இடத்திலும் அவன் அகம் மோதிமோதி முன்னேறுகிறது. எங்கோ ஓரிடத்தில் அவனோடு ஒட்ட முடிவதில்லை.  இத்தனைக்கும் அவன் தொடக்கத்தில் இருந்ததுபோல கொந்தளிப்புள்ளவனாக அன்றி, அடங்கி தெளிந்தவனாகவே அந்தப் பயணத்தைத் தொடங்குகிறான். இன்னும் முழுத்தெளிவை நோக்கி நகர்த்திச் சென்று பயணத்தை முடித்துவைக்கிறார்கள் அம்மையும் அப்பனும். பயணத்துக்கு முன் இருந்த அர்ச்சுனன், பயணத்துக்குப் பின் இருந்த அர்ச்சுனன் என இரு நிலையில் தெரியும் வேறுபாடு நுட்பமானது.


பீமனின் பயணத்தை அப்படிப் பார்க்க முடியவில்லை. பயணத்துக்கு முந்தைய பீமன் எப்படியோ, அதே நிலையில்தான் பீமன் பயணத்துக்குப் பின்னும் இருக்கிறான்.  அவன் பயணமும் தன் மனத்துக்குகந்தவளின் ஆசையை நிறைவு செய்ய. அவளை நிறைவு செய்தோம் என்னும் மனநிறைவையே அவன் அடைகிறான். வழியில் அவன் அறிந்துகொள்ளும் பெண்களின் கதைகள் -ஊர்வசி, அசோகசுந்தரி, தேவயானி, சர்மிஷ்டை- அனைத்துமே அவனுக்கு உணர்த்தும் நுட்பமான அனுபவம் முக்கியமானதுதான். ஆனால் எதையும் மனத்தில் தேக்கி எடையை அதிகரித்துக்கொள்ளாதவன் அவன்.   இன்னும் சிறிது காலத்தில் அது உதிர்ந்தும் போகலாம். தனக்குரிய உற்சாகத்தை அவன் இழக்காமல் இருக்கிறான். இந்த வேறுபாட்டின் காரணமாகவே பீமன் பாத்திரமும் அவன் மேற்கொள்ளும் மாமலர் பயணமும் விருப்பத்துக்கிரியதாக உள்ளன.


ஒவ்வொரு நாளும் விரும்பிப் படித்தேன். ஒன்றிரண்டு முறை அலுவல் சுமைகளால் வாரக்கணக்கில் கூட விடுபட்டுப் போனதுண்டு. பிறகு எப்படியோ நேரத்தை உருவாக்கிக்கொண்டு ஒரே அமர்வில் அனைத்தையும் படித்துமுடித்த அனுபவமும் உண்டு. எனக்குள் உறையும் பீமனுக்கு இந்த வாசிப்பே நல்லுணவாக இருந்தது.


வாழ்த்துகள் ஜெயமோகன்.  அடுத்த நூல் விரைவில் தொடங்கட்டும்.


அன்புடன்
பாவண்ணன்




அன்புள்ள பாவண்ணன்

நலம்தானே? நானும் நலமே

உங்கள் வாழ்த்துக்கள் உற்சாகமூட்டின. இந்த வகையான பெரிய வேலைகள் நடுவே சோர்வையும் சலிப்பையும் அளிப்பவை. உங்களைப்போன்றவர்களின் சொற்கள் அனுமனுக்கு ஜாம்பவான் சொன்னதைப்போல
ஜெ