Monday, May 29, 2017

ஒரு சொல்




அன்புள்ள  ஜெ வணக்கம்.

மாமலர் முடிந்தும் இன்னும் அதன் கனம் மனதை அழுத்திக்கொண்டே இருக்கிறது. வண்ணமும் வாசமும் நிறைந்த அழகான நாவலாக இதை செய்து இருக்கின்றீர்கள்.   ஒரு பெண்ணுக்குள் தோன்றி விரிந்து மறைந்து போகும் அகஉணர்வுகளை மலரச்செய்யும் மாமலர்நாவல் மனதின் பல அடுக்குகளில் புகுந்தோடும் நீர்போல் உள்ளத்தை குளிரச்செய்J கனக்கவைக்கிறது. 
ஆட்சி ஆளுமை அதிகாரம் புகழ் என்று உலகின் விரிந்த வெளியில் நின்று வாழும் ஒரு பெண்ணனி்ன் வாழ்க்கையில் மானபங்கமும் அடிமைதனமும் ஒற்றைக்கணத்தில்  வரும் என்றால் எதிர்காலத்தில் அவள் என்னவாக இருப்பாள்? ஆயிரம் ஆயிரம் விடைகள் உண்டு, இருந்தும் பெரும்விடை ஒன்றை மாமலர் எடுக்கின்றது அதில் இருந்து மலர்கின்றது.

அவள் எல்லாவற்றையும் கலைந்து எறிந்துவிட்டு பெரும்தாயாக  எழுந்து நிற்கும் ஒரு இடம் உண்டு என்று காட்டி மணம்வீசி மலரும் மாமலர் நாவல் பெண்ணுக்குள் தோன்றும் கனிவை காதலை காமத்தை இன்பத்தை மணம்பரப்பி குளுங்க வைக்கின்றது.
மலர் என்றால் மரம் இல்லாமலா? இது மலரின்  கதைதான், இருந்தும் இது மரங்களின் கதை. மலர்களால் மரம்படும் பாடுகளின்  கதை. இது திரௌபதியின் மனஇயல்பு கதை என்பதாலேயே பாண்டவர்களின் மனஇயல்புகதையாக வளர்கின்றது. பாண்டவர்களின் கதை என்பதால் பாண்டவர்களின் முன்னோர்களின் கதை. பாண்டவ முன்னோர்களின் மனைவிகளின் கதை. மொத்தத்தில் பாரததிருநாட்டு மூதன்னைகளின் கதை. மூதன்னைகளின் வடிவங்களை கருக்கொண்டு வளரும் கன்னிகளின் கதை.

இந்த கதையில் ஒவ்வொரு பெண்ணும் ஒரு மலர், ஒவ்வொரு மலரும் பூக்கும்    மரமாக ஒரு ஆணும் தோன்றி விளங்கும் கதை. மலரில் இருந்து மரத்தையும் மரத்தில் இருந்து மலரயையும் பார்க்கும்   பார்வைகளின் கதை.  

நாரதர் கொண்டுவந்த ஞானப்பழத்தை பெறுவதற்கு முருகனும் பிள்ளையாரும் உலகத்தைச்சுற்றப் புறப்படுகின்றார்கள்.  முருகன் உலகத்தை அறிகின்றான். விநாயகன் உலகத்திற்கு அறிவிக்கின்றான்.  முருகன் உலகத்தை சுற்றுவதன் மூலம் தன்னை சுழற்றுகின்றான். விநாயகன் தன்னை சுழற்றுவதன் மூலம் உலகத்தை சுழற்றிவிடுகின்றான்.  சுருக்கமாக முருகன் தான் யார் என்று அம்மையப்பருக்கு காட்டுகின்றான். விநாயகன் அம்மையப்பர் யார் என்று  தனேக்கே காட்டிக்கொள்கின்றான்  பயணம் ஒன்று பயணத்தின் நோக்கம் ஒன்று ஆனால் விளைவு ஒன்று அல்ல. இருவரும் ஒரு பயணத்தில் உலகுக்கு இருபார்வைத்தருகின்றார்கள். மாமலரில் பீமன் பயணம் செய்கின்றான்.  இந்த பயணத்தின் மூலம் அவன் தான் யார் என்று காட்டவில்லை மாறாக பாஞ்சாலி யார் என்று காட்டுகின்றான். திரௌபதி ஒருத்திதான், தருமனோடு இருக்கும் திரௌபதி பீமனோடு இல்லை, பீமனோடு இருக்கும் திரௌபதி அர்ஜுனனோடு இல்லை, அர்ஜுனனோடு இருக்கும் திரௌபதி நகுலசகாதேவரோடு இல்லை ஆனால் அவள் திரௌபதி. மாமலர் தேடல் பயணத்தின் இறுதியல் பீமன் அருகின்றான்.  காலம் காலமாக பயணி தன் பயணத்தின் மூலம் தான் யார் என்பதை தான் உலகுக்கு நிறுபிக்கின்றான். பிள்ளையார்போல பீமனும் தன் பயணத்தால் தான் யார் என்பை மறக்கவைத்து தன் பயணத்தின் மூலம் திரௌபதி யார் என்று அறியவைக்கிறான்.

தாங்கள் செய்த மாமலர் ஒரு   வான்தோட்டத்து மாமலர் என்பதால் அதன் வேர் வானத்தில் சந்திரனால் மலரும் தாரையில் இருந்து மலர்ந்து வருகின்றது.  தாரை, ஊர்வசி, அசோகசுந்தரி தேவயானி என்று வந்து, சர்மிஷ்டையில் நிறைந்து முழுதும் மலர்ந்து அமுதகலமாக நிறைகிறது. ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு வாசம், ஒவ்வொரு மலருக்குள்ளும் பூநாகம். ஒவ்வொரு மலரைச்சுற்றியும் தேன்வண்டு. ஒவ்வொரு மலருக்குள்ளும் புளிப்பும் இனிப்பும் கலந்த தேன். இது இயற்கை. மலர்கள் மனித வடிவம் எடுக்கும்போது இயற்கையை இயற்கையாக அறியமுடியாமல் மானிட மனம் பேதலித்து நிற்கின்றது. அந்த பேதலித்த மனங்களின் பேதைமையை நீ்க்கி மலரும் மங்கையும் இயற்கையில் இப்படித்தான் என்று காட்டுகின்றீர்கள். தேன் எடுக்கசென்று பூநாகம் கடித்து இறந்தவன் இந்த கதையில் இருக்கிறான். பூநாகம் பிடிக்கசென்று தேன்சுவைத்து காலத்தை கவிதையாக்கியவன் இதில் இருக்கிறான். பூ தனக்குள் உறையும் அனைத்து நிறை குறைகளோடும்  முழுமையாக இங்கு உள்ளது என்பதை காட்டுகின்றீர்கள். ஒரு மலர் அந்த கணத்தில் அது அப்படி இருந்தது இந்த கணத்தில் வைத்து அந்த கணத்தை பார்க்கமுடியாது என்று மாமலர் காட்டுகின்றது.


மாமலரில் பாஞ்சாலி அடுமனை பெண்ணாக முழுதும் கனிந்த அன்னையாக மட்டும் எழுந்து வருகின்றாள்.  கர்ணனை கண்டு மயங்கிய கன்னி அவளிடம் தென்னை ஓலைவிழுந்த வடுவாக இருக்கிறது. அது காயம் இல்லை. அது வளர்ச்சி. அர்ஜுனனை கொல்ல வாள்உருவிய காளி அவளிடம் இருக்கிறாள்.அது  ரப்பர் மரத்தில் விழுந்த கீறல், அது காயம் இல்லை, அவள் வடிக்கும் பால்வழிதடம். துருபதன் மகளாக, பீமனின் எஜமானியாக, தருமனின் சொற்பொருளாக, நகுலன் சகதேவன் தேடிவந்து அணையும் கூடாக அவள் இருக்கிறாள் அத்தனையும் அவளை வார்த்துவிட்டு ஒதுங்கி்க்கொள்ளும் அச்சுகளாக இருக்கிறது. சிந்துநாட்டு அரசன் ஜெயத்ரதனால் கவரப்பட்டு அர்ஜுனன் பீமனால் மீட்கப்பட்டு வந்தபின்பு, பீமனால் அடிவாங்கி துன்புரும் ஜெயத்ரதனுக்கு அன்னையாகி அதுவும் ஒரு தன்னை வார்த்த ஒரு அச்சு என்று காட்டி நிற்கின்றாள். இதுவெல்லாம் பாஞ்சாலி யார் என்பதை உலகு அறிவதற்கு ஒரு  வாசலாக இருக்கிறது. ஆனால் கிராதத்தில் பயணம் செய்த அர்ஜுனன் திரும்பி வருகின்றான் என்பதை அறிந்ததும் ஒடிவந்து வாசற்படிக்கருகில்நின்று புடவை முந்தானையை தனது விரல் நுனியால் சுழற்றும் திரௌபதி உலகம் காண்பதற்கான பாஞ்சாலி அல்ல, அவள் அவளையே கண்டுகொள்ளும் பாஞ்சாலி. பீமன் காட்டில் இருந்து பசியோடு வருவான் என்று உணவு சமைத்துவைத்து அவனுக்கு எண்ணெய்தேய்த்து குளிப்பாட்டி அவன் உதடு துடைத்துவிடும் பாஞ்சாலி உலகுக்கென எழும்பாஞ்சாலி அல்ல அவள் அவளையே தொட்டுணரும் பாஞ்சாலி.

உலகுக்கு உரிய பாஞ்சாலி, பாண்டவருக்கு உரிய பாஞ்சாலி, தனக்குரிய பாஞ்சாலி என்று வட்டத்திற்குள் வட்டம் வட்டத்திற்குள் வட்டம் என்று மையம் நோக்கி குவிந்து வரும் பாஞ்சாலி கல்யாணசௌகந்திகா மலர்வாசத்தால் தன்னையே தான்மலர்த்தி வாசம்கண்டு மகிழ்கின்றாள். துருபதன் மகளாக அதை அவள் அறிகின்றாள். அர்ஜுனன் உடன் கொண்ட ஊடலால் அதை அறிகின்றாள். பீமன் உடன் கொண்ட கூடலால் அதை உணர்கின்றாள். 

துருபதன் மூலம் திரௌபதி கல்யாணசௌகந்திகம் மலர்மணம் அறியும் தருணத்தில் அந்தசொல் அவளிடம் சூக்குமையில் மணக்கிறது.. அர்ஜுனன் மூலம் அறியும் கல்யாணசௌகந்திகம் மணம் பைசந்தியில் மணக்கிறது. அவள் அறியும் அந்த தனக்கே உரிய ரகசியவாசத்தை பீமனும் அறியும் தருணத்தில் கல்யாணசௌகந்திகம் அவளிடம் சூக்குமவைகரியில் மணக்கிறது. அதை இருவரும் பேசிப்பேசி தூலவைகரிக்கு கொண்டு வந்து மகிழ்கின்றார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் ஒற்றுமை மனமணம் தூலவைகரியில் விரியும்போதே அது அடங்காக அளப்பரியபெரும்காதலாய் ஆகின்றது. அந்த காதலில் விழும் பீமனும் திரௌபதியும் ஒரு புதிய பிறப்பு எடுக்கின்றார்கள். அந்த காதலால் பயணிக்கும் பீமன் தனது முது அன்னைகளில் திரௌபதியை கண்டு   மீள்கின்றான். தன்னையும் தனது முதுதந்தைகளில் கண்டு உணர்கின்றான்.

பீமனின் மாமலர் நெடும்பயணம் அவனை நீர்க்கோலத்தில் பாஞ்சாலியின் பாதத்தில் முள்ளெடுக்கும் தந்தையாக்கிவிடுகின்றது. பீமன் பாஞ்சாலி பாதத்தில் முள்ளெடுக்கும் நிகழ்வில் தருமனை தவிர அனைவரும் பெருமூச்சுவிடுகின்றார்கள். பீமன் தருமனின் பெருமூச்சை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றான். நீண்ட நேரத்திற்குபின் தருமன் “எந்தையரே” என்று கூறுகின்றான்.  மாமலரில் பீமன் நடந்த பயணத்தை எல்லாம் தருமன் எண்ணத்தில் நடந்துப்பார்த்து இந்தச் சொல்லை சொல்கின்றான்.  என்ன ஒரு அற்புதமான மனநிலை கணத்தை எழுதி இருக்கின்றீர்கள்.

அன்புள்ள ஜெ வாழ்க்கையில் ஒரு சொல்லை பெறுவதற்கும் ஒரு சொல் வழங்குவதற்கும் மனிதன் எத்தனை தூரம் நடக்கவேண்டி உள்ளது.

மாமலருக்கு நன்றியும். நீர்க்கோலத்திற்கு வாழ்த்தும்.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.