Thursday, May 25, 2017

உயிர்ப்பு

 
 
  தென் மேற்கு பருவ மழை நாகர்கோவிலை வெயிலில் இருந்து காப்பாற்றி விடும் என்று நம்புகிறேன். ஈரோட்டில் உள்ள என் அம்மா  வீடு, நம்பியூர் -கோவை சாலையில் உள்ள என் மாமனாரின்  தோட்டம் என்று எல்லா இடங்களிலும்  கடும் தண்ணீர் பிரச்சனை. நிலத்தடி நீர் 1000 அடிக்கும் கீழ் சென்று விட்டது. இந்தியா திரும்புவதை நினைத்தால் குழந்தையின் பள்ளி குறித்தான கவலை மட்டும் இருந்தது, இப்போது தண்ணீர் பிரச்சனையும் அந்தப்  பட்டியலில்  சேர்ந்து கொண்டு விட்டது.

   இன்று புனே-வில் உள்ள என் சக பணியாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவருடைய surname "யாதவ்" என்பது ஞாபகம் வர  சட்டென்று   - "Hey , I am now learning about your xx-times great grandfather" என்று சொல்லிவிட்டு, வெண்முரசு பற்றி அவருக்கு சிறிது நேரம் விளக்கிக் கொண்டிருந்தேன்.   பிறகுதான் என்னை அறியாமல்"learning" (reading என்று சொல்லாமல்) என்று சொன்னது தெரிந்தது.  உண்மை , உங்கள் எழுத்துக்கள் மூலம் தினமும் கற்றுக்கொண்டே இருக்கிறேன் - என் மனதில்  ஆசிரியர் என்ற இடம் உங்களுக்கு உரியது. 24 ஏப்ரல் அன்று தளத்தில் வெளியிடப்பட்ட நேர்காணல்கள்   தொகுப்பில் கீதை-தன்னம்பிக்கை குறித்த   தங்களது பதில் படித்தேன்.  "நீ ரொம்ப சின்ன ஆள் , சின்ன துளி , ஆனா நீ பிரம்மாண்டமான ஒரு அமைப்போட உறுப்பு" - என்ற இந்த வரிகள் திரும்ப திரும்ப மனதில் ஓடி கொண்டே இருக்கிறது.
 
     கடந்த ஒரு வருடமாகவே உங்கள் பயண கட்டுரைகளையும் வாசித்து  வருகிறேன்(சில பயணங்கள் மீள் வாசிப்பு), தற்சமயம்  அருகர்களின் பாதை படித்துக்  கொண்டிருக்கிறேன். வெண்முரசின் நகரங்களை, நிலக்காட்சிகளை நிறைய இடங்களில் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது. அது மட்டுமின்றி, ஒரு வகையில் இந்தியா திரும்பும் முடிவை உயிர்ப்புடன் வைத்திருப்பதும் இந்த பயணங்கள் பற்றிய பதிவுகள்தான். 

மலேசியா இலக்கிய  சந்திப்பும், பயணமும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.
  
நன்றி,
கவிப்பிரியா.