Thursday, June 29, 2017

சமைத்தல்



அன்புள்ள ஜெ. வணக்கம். 

சுவையாக சமைக்கத்தெரியாதவன் இதயம் இனிமையானதாக இருக்கவாய்ப்பில்லை. ஆன்மீகத்தில் உயரநினைக்கும் உள்ளங்கள் தனது சமையலின் சுவைப்பக்குவத்தில் இருந்து தனது இதயத்தின் தூய்மையை அறிந்துக்கொள்ளமுடியும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். நளனையும் பீமனையும் கொண்டுதான் இதை புரிந்துக்கொள்ளமுடிகின்றது. 

சமைத்தல் என்பது புறம்வயமாக வெளிப்படும் ஒருதவம். இந்த தவத்தில் வென்ற இருவர் நளனும், பீமனும். வெற்வேறு காலத்தில் வாழ்ந்த இருவரும் ஒருவர் என்பதை நளபாகத்திலும் பீமபாகத்திலும் உணரவைக்கின்றீர்கள்.

தவத்தில் உயர்ந்த ஒருவர் வாழும் இடம் என்பது மானிட வெளிக்குக்கு அப்பால் உயரத்தில், அவர்களை உலகம் தனது சதாரண உலகத்திற்குள் இழுத்து வந்து நிறுத்துகின்றது. அவர்கள் எவ்வளவு இழுத்து வந்து கட்டிப்போட்டாலும் அப்பால் அப்பால் என்று சென்றுக்கொண்டே இருக்கிறார்கள். தனது தம்பி புஷ்கரனுக்காக சமைக்கத்தொடங்கும் நளன் அவனின் உயர்ந்த தவத்தில் உயர்ந்த உலகத்தில் இருக்கிறான். அவனை இந்த உலகத்தில் கொண்டுவருவதற்கு கருணாகரர் ஒவ்வொரு படியாக இறக்குகின்றார். நளன் ஒவ்வொருபடியிலும் கீழ்இறங்கும்போதும் தனது தவத்தின் எல்லையில்தான் நிற்கின்றான். அவனைவிட்டு சமையல் என்பது பிரிவதே இல்லை.  மானிடர்களின் ஆணவமும் காழ்ப்பும் கலந்த உலகத்தை தாண்டியது அந்த தவம் நளனை அங்கு நிறுத்துகிறது அது. நளனின் உலகத்தை வெளியை காட்டுகின்றீர்கள். அற்புத சித்திரம். மனதில் எழுதிப்பார்க்க முடிகின்றது. கலைத்தவம். 

அறியாமை ஆணவம் கீழ்மை என்று ஒரு கூட்டம், அரசு ஆட்சி அமைச்சு நெறி நீதி என்று ஒரு கூட்டம். இந்த இரண்டு கூட்டங்களுக்கும் அப்பால் நளன் தனது கலையின் தவத்தால் உயரத்திலேயே நிற்கின்றான். நளனின் பாத்திரப்படைப்பில் ஒவ்வொரு படியாக அவனை கலைதவத்தின் உயரத்தில் நிறுத்தி அமர்களம் செய்து உள்ளீர்கள்.

கீழ்மைகள் தொடாத தவ உள்ளம். மானிட ஆணவம் கீழ்மை நளனை ஒரு நொடியில் கொலைஞனாக செய்கின்றது. அவன் தவத்தில் அந்த தலைகொய்தல்கூட ஒருதவம்தான். அறம் அங்கு வாள்வீசுகின்றது. 

மானிட கீழ்மைகள் எப்போதும் மானிடன் இடம் மோதுவதாகத்தான் நினைக்கிறது ஆனால் அது அதுவும் அறியாமல் அறத்துடன்தான் மோதுகின்றது. அறம் தனது வான்வெளிபீடத்தில் இருந்து நொடியில் இறங்கி மண்மீது தனது நடனத்தை நடத்திவிட்டு மீண்டும் வானுக்கே செல்கின்றது. மானிடர்கள் இங்கு வெறும் கருவிகள் மட்டும்தான். நளனையும் சீர்ஷரையும் வைத்து அறமும் கீழ்மையும் விளையாட ஆடுகளம் அமைத்து உள்ளீர்கள். நன்றி. கீழ்மை எத்தன காலம் தம்கட்டி கபடி பாடவேண்டி உள்ளது. அறம் இறங்கிய வேகத்திலேயே தொட்டு மீள்கிறது.  . 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.