Monday, September 4, 2017

தூண்டில் முனைகள்"



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

மாமலர், நீர்க்கோலம் என இதுவரையும், இப்போது எழுதழல் எனவும் இவ்வாண்டு முழுவதும் பெரும்பாலான நாட்கள் வெண்முரசின் நாட்களாகவே இருக்கிறது.  நான்கு நாட்கள் தவிர்க்க முடியாத  காரணத்தால் வாசிக்க முடியவில்லை என்றால், ஐந்தாம் நாள் ஐந்து அத்தியாயங்கள் என்று வாசித்து இதுவரை கடந்த நாட்கள் சுகமாவை.  வாசிப்புக்கு அப்பாற்பட்ட நேரத்திலும் மனம் வெண்முரசின் உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும்.  இருள் விசும்பின் மீன்கள் கண்டால் "தூண்டில் முனைகள்" என முறுவல் தோன்றும்.  "அப்படியென்றால் விரைந்து என்னைத் தூக்குங்கள்" என்று அவற்றிடம் சொல்வேன்.  பிப்ரவரி 1, 2017-ல் மாமலர் தொடங்கி இதுகாறும் வெண்முரசு எனக்கு வழங்கியவை ஏராளம்.  அம்மாவிடம் கோபம் தவிர்த்தேன், நண்பருடன் வெட்டி வம்பு தவிர்த்தேன், முகநூல் தவிர்த்தேன், சிலருக்கு சிலவற்றை விட்டுக்கொடுத்தேன், மனம் பொறுக்காமல் வாதிடும் விஷயங்களில் மரங்களை நோக்கி மனம் திருப்பி அமைதி கொண்டேன், யோகத்தின் அருமை உணர்ந்தேன்.  யோகத்தின் அருமையை உடல் சற்று உணர்ந்திருத்தாலும் மனம் சமூகத்தின் குப்பைகளில் உழன்று பழகியது.  உடலுக்கும் மூச்சிற்கும் ஒரு வழி காட்டி, மனதிற்கு ஒரு வழி காட்டுவது போல் குருவருள் உங்கள் தளத்திற் கொண்டு சேர்த்தது போலும்.  

பெருநகரின் சுவரொட்டிகளைத் தின்று பழகி இதுவே சுவை என்று கருதும் ஓர் கால்நடைக்கு ஒரு பெரும் பசுமைப் புல்வெளி கிடைத்தது போல் கிடைத்தது உங்கள் தளம்.  "அட இதுதான் இலக்கியம் என்பதா?" என்றொரு வியப்பு.  "காமம் அதன் கவர்ச்சி, முற்போக்கு என சொல்லி தேசம்-ஞானம்-அருள் யாவும் தூற்றல், ஒருவர்பால் ஒருவர் கடுங்காழ்ப்பு, வசவு. தீவிர இலக்கியர் உலகென்பது இதுதான். தான் மட்டுமே சரி உலகெலாம் தவறு என்பதே இலக்கியவாதமென்பது" - இதுதான் முன்பு என் அறிதல், இப்போது நினைத்தால் என் மடமை எனக்கு வெட்கம் தருகிறது.  எதிர்நிற்கும் ஓர் மாமலை காணாது விழிகள் தவறியது என் பெரும் பிழை.

அறியாத ஒன்று பற்றி கருத்து கொள்ளும் வியாதி மெல்ல விலகியது.  உங்களுக்கு நான் எழுதிய ஒவ்வொரு கடிதமும் அனுப்பிய பின், இங்கெல்லாம், இதுவெலாம் என்று என் தன்முனைப்பைச் சுட்டியது.  என்னை எனக்கே காட்டிய கணங்களில், ஒரு சிறு சொல்லிற்கும் மனம் கூசியது, அதிர்ந்தபோது "கடிதம் எல்லாம் எழுதாதே, கொண்டையை மறை" எனத் தோன்றும் "இல்லை. எழுதுவேன்.  எதுவென்றபோதும் எழுதுவேன்.  உளறுவேன், ஓலமிடுவேன். அப்பக்கம் ஓர் அருட்திறம் இருக்கக் கண்டேன், இப்பக்கம் எதுவேணும் காட்டுவேன், ஒளியின் கரங்கள் முன்னம் என் இருளைக் கொண்டு செல்வேன்.  என்னை இங்கு அனுப்பியவர் என் குருநாதர்.  என் வெற்று முனைப்பை அவர் முன்னம் காட்ட ஒரு புன்முறுவலில் இங்கு செலுத்தியவர்." என்று அமைந்து கொள்வேன்.

செப்டம்பர் 1, 2017 - ல் வாசிப்பவர்களுக்கு இடைவேளை தருகிறேன் என்கிறீர்கள்.  கவனத்தில் கொள்ளுங்கள் நாங்கள் ஜெமோ வாசகர்கள், இங்கு ஒவ்வொரு வாசகரும் மாணிக்கவாசகரே.

வெண்முரசு வாசிப்பு என் அன்றாட வாழ்வின் தியானத்திற்கான இடைவேளை.  நிச்சயம் இவ்வாசிப்பு போதை தருவது தான்.  ஒவ்வொரு அத்தியாயம் வாசித்து முடிக்கும் போதும் என் கண்கள் மாறுவதை உணர்கிறேன்.  கண்களில் ஊறிடும் போதையை கனிவு என்று சுற்றிலும் செலுத்துகின்றேன்.


அன்புடன்
விக்ரம் 
கோவை