Thursday, December 21, 2017

வெண்முரசின் சந்திப்புகள்



அன்புள்ள ஜெ,

வெண்முரசின் சந்திப்புகள் என வரிசைப் படுத்தினால் அதன் சிறப்பான சந்திப்புகளுள் ஒன்றாக இன்றைய தேவிகை, பூரிசிரவஸ் சந்திப்பைத் தயக்கமின்றி சொல்லலாம். எத்தனை எத்தனை உணர்வுகள், உள நாடகங்கள், தவிப்புகள், தத்தளிப்புகள்.... உண்மையில் பூரிசிரவஸால் தேவிகை அளவிற்கு உளம் திறக்க இயலவில்லை. திறந்த போதும் அபத்தமாகவே ஒலிக்கிறது. ( “நான் இரவுபகலாக புரவியில் வந்தேன் என அறிவீர்களா?” என்றான். “ஆம்” என்றாள். ஓசை மூச்சென வெளிவந்தது. “என்றாவது என்னை எண்ணியிருக்கிறீர்களா?”) அது ஆண் எனும் உயிர் வகையின் சாபம்.... 

ஒரு கூற்று, ஒரே கூற்று, ஒரே ஒரு கணம் அந்த காதல் கொண்ட இளந்தேவிகை அவளில் நிகழ்கிறாள். - நான் இந்திரப்பிரஸ்தத்தை தெரிவுசெய்யவில்லை. அவனை ஆக்கிய உயிர்த்துளியை விரும்பி ஏற்றுக்கொள்ளவுமில்லை  - எத்தனைக் கச்சிதமான கூற்று. 'சிறப்பாக மறுமொழி கூறுகிறீர்கள். இதைக் கற்றுக் கொள்ள வேண்டும்' என பூரிசிரவஸிடம் கூறிய அந்த சுட்டியான தேவிகையா இவள்? அதற்கு முன்பு வரையிலும் கூட அவள் அவனைச் சந்த்தித்து பிதாமகர் பால்ஹிகரைக் காணக் கூட்டிச் சென்ற அக்கணங்களைத் தான் நடித்துக் கொண்டிருந்தாள், அவனை சீண்டியபடி... எனவே தான் அக்கணம் இன்னும் சற்று நீண்டிருக்கக் கூடாதா என ஏங்குகிறாள். 

இந்த அத்தியாயம் முழுமையாகவே அவர்கள் இருவரின் உடல் மொழி வேறு கதை பேசிச் செல்கின்றன. பூரிசிரவஸும், தேவிகையும் இறுதியாகச் சந்திப்பது வெண்முகில் நகரத்தில் தருமனும், சகதேவனும் திருதாவைச் சந்திக்கச் செல்லும் முன்பாக. அப்போது தேவிகையும், விஜயையும் பூரிசிரவசை கேலிக்குள்ளாக்கி, ஒரு வகையில் ஏவலனாகவும் ஆக்கி பகடி செய்து கொள்வார்கள். அத்தருணத்தின் எரிச்சலை தன்னை மீறி தன் காலால் தரையின் மரவுரி விரிப்பைச் சுரண்டி காட்டி விடுவான் பூரிசிரவஸ். இன்று தன் தூதை அறிவித்து விட்டு, அத்தருணத்தைக் கடந்து வந்த களைப்பும், தன் இழப்புகளைக் குறித்த ஏக்கம் அளிக்கும் வஞ்சமும் ஒரு சேர வெளிப்படும் வகையில் தேவிகையின் கால் கட்டை விரல் நெளிந்து கொண்டே இருக்கிறது. ஆம், தேவிகை வாழ்வின் தொக்கி நின்றிருந்த ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது. அவள் நிம்மதி அடைந்து விட்டாள்.

இணைய இயலாதவர்களின் சந்திப்புகள் தரும் ஏக்கமும், உவகையும், 'இணைந்து விட்டால்' என்ற பகற்கனவையும் போல் இனிய துயர் ஏதாவது இருக்கிறதா என்ன? இந்நாவல் அத்தகைய சந்திப்புகளால் ஆன ஒன்றோ?

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்.