Monday, December 4, 2017

மீட்பு



அன்புள்ள ஜெ

இன்று ஒருவாசகர் எழுதியிருந்தார், யாதவக்குடிப்பூசல் சொல்லப்படுவதற்கு வெண்முரசிலே பிறகு இடமே இல்லை என்று. அது மகாபாரதத்தின் அழகியல். அது மெய்யாகவே போரைப்பற்றி மட்டுமே சொல்லும் காவியம். ஒருசுருக்கமான வம்சகதைக்குப்பின்னால் அது நேரடியாகவே போருக்குச் செல்கிறது. போரை பல பகுதிகளாக [பர்வங்களாக ] அது சொல்லிக்கொண்டே செல்கிறது. போரில்தான் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றன. அந்தக்கதாபாத்திரங்களின் பழையகதைகள் எல்லாமே போரில்தான் சொல்லப்படுகின்றன. மகாபாரதத்தின் 80 சதவீதம் போர்தான்.

அப்படி வெண்முரசு ஆகமுடியாது. ஆகவேதான் நிறையக்கதைகளை முன்னரே கொண்டுவந்துகொண்டிருக்கிறீர்கள். மகாபாரதத்தில் இத்தனை கதாபாத்திரங்கள் முன்னரே வருவதில்லை. உபபாண்டவர்கள் மகாபாரத்த்தில் சும்மா பெயர் மட்டும்சொல்லப்படும் சின்னக்கதாபாத்திரங்கள். ஆகவே சில நாவல்களில் அவர்களைக் குழந்தைகள் என்றே எழுதியிருக்கிறார்கள். என் ஞாபகத்தில் பர்வா நாவலில் பைரப்பா குழந்தைகள் என்றுதான் எழுதியிருக்கிறார். ஆனால் அவர்கள் அனைவருமே 15 வயதுக்குமேல் உள்ளவர்களாகவே இருக்கமுடியும். அவர்கள் போரில் கலந்துகொண்டதும் மகாபாரதத்திலே சொல்லப்பட்டுள்ளது. அவர்களை இங்கே அறிமுகம் செய்யவில்லை என்றால் இனி இடமே கிடையாது.

ஆனால் இங்கே தனியாக அவர்களைப்பற்றிச் சொல்லமுடியாது. யாதவர்களின் குலப்போரும் பாண்டவர்களின் பேரமும் நிகழும் இடம் இது. ஆகவே அவர்கள் ஒன்பதுபேரும் இந்தவிஷயங்களைச் செய்வதாக எழுதி அந்தப்பிரச்சினையை வெற்றிகரமாகத் தாண்டியிருக்கிறீர்கள். அத்தனை சின்னபாண்டவர்களும் அற்புதமான கதாபாத்திரங்கள். நுட்பமான குணச்சித்திரவேறுபாடுகள். அவர்களை மறக்கமுடியாதவர்களாக ஆக்கிவிட்டீர்கள்

அவர்களை பவசாகரத்திலிருந்து கிருஷ்ணன் மீட்டார் என்று கொள்ளவேண்டியதுதான்


ராமச்சந்திரன்