Wednesday, December 6, 2017

மாயை



ஜெ

சொல்வளர்காட்டில் மாயை சபதம்போட்டபோது எனக்கு என்ன இது என்ற ஒரு ஆச்சரியம் இருந்தது. உடனே நான் மாயையைப்பற்றி அதற்கு முன்பு வந்த அனைத்தையும் தொடர்ச்சியாக வாசித்துப்பார்த்தேன். இது வெண்முரசிலே நாம் தவறவிடுவது. பலசமயம் நாம் சின்ன கதாபாத்திரங்களின் அமைப்பையும் நோக்கத்தையும் அப்படியே தவறவிட்டுவிடுகிறோம்.

மாயையை நான் தொடர்ச்சியாக வாசித்தபோது அவளை பாஞ்சாலியின் ஆல்ட்டர் ஈகோவாக உருவகம் புரிந்திருக்கிறீர்கள் என தெரிந்தது. மாயை துர்க்கையின் தோழி. துர்க்கையின் இன்னொரு வடிவம். மகாமாயை என தேவிபாகவதம் சொல்வது அவளைத்தான். பாஞ்சாலி துர்க்கை. ஆகவே தோழி மாயை. பாஞ்சாலி இப்போது அன்னை என கனிந்திருக்கிறாள்.

ஆகவேதான் துரியோதனனின் மகளுக்கு தன் ஆடையை பரிசாக அளிக்கிறாள். அதனால்தான் அவள் ஐந்து வீடு மட்டும் போதும் என்று பாண்டவர்கள் துரியோதனனிடம் சொல்லும்போது ஒப்புக்கொள்கிறாள். காரணம் அப்போது அவள் அன்னை. அவள் உள்ளே மாயை ஆறாத வஞ்சம் கொண்டிருக்கிறாள். சொல்வளர்காட்டில் பாஞ்சாலியே சபதம் போட்டிருந்தால் இப்படி  அவள் கனிந்தவளாக காட்டப்படமுடியாது. அவள் பாண்டவர்கள் ஐந்துவீடுவரை இறங்கிவரும்போது ஏற்றுக்கொள்பவளாகவும் காட்டமுடியாது.

அப்படி ஏற்றுக்கொள்பவளாகக் காட்டினால் அவள் துரியோதனனைக் கொல்ல ஒரு தந்திரமாகவே அதைச்செய்தாள் என்று கொள்ளவேண்டியிருக்கும். அது அந்தக்கதாபாத்திரத்தையே கொல்வதுபோல. நான் இதைச்சுட்டிக்காட்டி அப்போதே ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன். அது ஆங்கிலக்கடிதம். எனவே அதை பிரசுரிக்கவில்லை என நினைக்கிறேன்


ராகவன் ராம்